Wednesday, July 5, 2017

படைப்பின் விசித்திரம்...!

இரண்டாம் வகுப்பு பயின்ற வேளையில் தமிழ் புத்தகத்தில் படித்த பாட்டு இது! அதற்கு கதை வடிவம் கொடுக்கிறேன்! அதோடு இந்த பாட்டை அழகாக படித்து காண்பித்து இன்றளவும் இந்த பாட்டின், கதையின் சாரம் என்னுள் நின்று நிலைத்திருக்க காரணமான ஆசிரியை பெருந்தகை மணிமேகலை அவர்களை நன்றியுடன் பெருமிதம் கொண்டு நினைவு கூறுகிறேன்..!
வணிகர் ஒருவர் தனது வணிக பொருள்களை எல்லாம் வியாபாரம் செய்துவிட்டு மதிய வேளையில் தான் கொண்டு வந்த உணவை ஒரு அரச மரத்தடியின் கீழ் அமர்ந்து உண்கிறார். அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகே ஒரு காய்கறி தோட்டம்! அதில் நன்கு பெருத்த பூசணிக்காய் ஒன்று விளைந்து அதன் கொடியின் அடியில் இருந்தது!

வணிகர் சாப்பிட்டுக்கொண்டே அந்த பூசணிக்காயை பார்த்தார். பிறகு ஏதேச்சையாக அவரது பார்வை அரச மரத்தின் மீது திரும்ப அந்த மரக்கிளைகளில் சிறிய சிறிய செந்நிற பழங்கள் கொத்து கொத்தாக விளைந்திருப்பதை கண்டார். இப்போது மீண்டும் வணிகரின் பார்வை சற்று முன் கண்ட பூசணிக்காயின் மீது திரும்ப! மறுகனம் பார்வை அந்த அரச மரத்தின் சின்னஞ்சிறு பழங்களின் மீது திரும்ப! இரண்டையும் மாறி மாறிப்பார்த்துவிட்டு தன் மனதிற்குள் இப்படி நினைத்து சிரித்துக்கொண்டார்.
என்னே இந்த இறைவனின் மூளை...? பூசணிக்காய் எவ்வளவு பெரியது! ஆனால் அதன் கொடி மிகவும் மெலிந்து தான் கொண்டிருக்கும் காய்களையே அதனால் சுமக்க முடியாமல் தரையில் சரிந்து படர்ந்திருக்கிறது.
ஆனால் அரசம மரம் எவ்வளவு பெரியது..? அவ்வளவு வலிமையானதும் கூட..! ஆனால் அதில் உள்ள காய்களும் கனிகளும் அந்த மரத்தின் அளவையும் பலத்தையும் ஒப்பிடுகையில் மிகமிக சின்னஞ்சிறியவை! அவ்வளவு பெரிய பூசணியை பலமில்லாத இளைத்த கொடியில் காய்க்க வைத்த இறைவன் கொஞ்சம் அப்படியே மாற்றி அந்த பூசணியை இந்த அரச மரத்திலும்! அரச மரத்தின் பழத்தை பூசணி கொடியிலும் விளைய செய்திருக்கலாமே! இப்படி யோசனையின்றி மாற்றி படைத்துவிட்டாரே என்று நினைத்து சிரத்துக்கொண்டு உண்ட களைப்பு நீங்க அந்த மரத்தடியில் படுத்து கண்ணயர தொடங்கி ஆழ்ந்த உறக்கத்திற்கும் சென்றார்!
அப்போது காற்று சற்று வேகமாக வீச! அதன் விளைவாக அரச மரத்தின் ஒரு பழம் உதிர்ந்து கீழே படுத்திருந்த வணிகரின் முன் நெற்றியில் விழுந்தது! பழம் விழுந்த மாத்திரத்தில் வணிகர் ஆ....! எனும் அலறல் ஓசையுடன் தூக்கம் கலைந்து எழுந்து வலியால் துடித்த வண்ணம் என்ன விழுந்தது என்று தன்னை சுற்றி பார்க்கும் வேளையில் அவர் அருகில் அந்த அரச மரத்தின் பழம் ஒன்று கிடந்தது!
அதை கையால் எடுத்த வணிகர் இவ்வளவு சிறிய பழமா அங்கிருந்து விழுந்து இவ்வளவு கடும் வலியை எனக்கு கொடுத்தது என்று வலியுடன் கூடிய சிந்தனையில் நெற்றியை தடவ! இப்போது அவரது கண்ணில் பட்டது பூசணிக்காய்!
அதை கண்டவுடன் வணிகரின் சிந்தை சற்று வேகமெடுக்க! என் இறைவா...! சற்றும் அறிவில்லாமல் கொஞ்சமும் புத்தியில்லாமல் உன்னை தவறான முறையில் ஏளனத்துடன் சிந்தித்த எனக்கு நான் எவைகளை ஒப்பிட்டு உன் படைப்பின் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு குறைமதி கொண்டேனோ! அவற்றில் இருந்தே எனக்கு தகுந்த பாடத்தை நீ எனக்கு வழங்கிவிட்டாய்!
ஒருவேளை இந்த பூசணியின் அளவை ஒத்த காய் இந்த அரச மரத்தில் இருந்து நான் கண்ணயர்ந்து உறங்கிய வேளையில் என் தலைமீது அல்லது உடல் மீது விழுந்திருக்குமேயானால் என் நிலை அப்போது அந்தோ பரிதாபம் ஆகிப்போய் இருக்குமே என்று மீண்டும் ஒருமுறை இறைவனிடம் மன்னிப்பு கோரினார்.
நீதி:- படைப்பின் விசித்திரத்தை படைத்தவனே உணர்வான்! அவைகளை மாற்ற முற்பட்டு மனித கைகள் அதில் விளையாடினால் விளைவு விபரீதமாகவே இருக்கும்.
என் இறைவனுக்கு நன்றி!!! 💗

Samsul Hameed Saleem Mohamed

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails