Wednesday, June 28, 2017

காஃபிர் என்பது இழிசொல்லல்ல

முஸ்லிம் அல்லாதோரை இஸ்லாம் காஃபிர் என்று இழிவுபடுத்துகிறது எனச் சிலர் குற்றஞ்சாட்டுவதுண்டு.
காஃபிர் என்பதன் பொருள் இறை நிராகரிப்பு என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன். அதன் வேர்ச்சொல் எப்படியெல்லாம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என விளக்கி காஃபிர் என்பது இழிசொல்லல்ல என்கிறார் Abdurrahman Umari. அவரின் பதிவு இங்கே...
மறைப்பதும் மூடிவைப்பதும் மனித வாழ்க்கையில் அன்றாடம் தொடர்கின்ற நிகழ்வுகள்.
.
மனிதன் தன்னோடு தொடர்புடைய அனைத்தையும் மூடி வைக்கவே ஆசைப்படுகிறான். தனது வருமானத்தை மூடிவைக்கிறான், தன்னைப் பற்றிய உண்மைகளை மூடி வைக்கிறான். தனக்காக சமைக்கப்பட்ட உணவுகளையும் மூடி வைக்கிறான். தனது அழகையும் மூடி வைக்கிறான்.
.
ஏன், உங்கள் அழகையும் அலங்காரத்தையும் ஊர்உலகிற்குக் காட்டாமல் மறைத்தே வைக்கின்றீர்கள் என தொடர்ந்து முஸ்லிம் பெண்களைப் பார்த்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

.
தவறிழைப்பவன் யாருக்கும் தெரியாமல் அதனை மூடி மறைக்கவே ஆசைப்படுகிறான். பொய் சொல்பவன் உண்மையை மறைக்கிறான்.
.
அனைத்தையும் மறைக்கின்ற மனிதன் தனது உள்ளத்து ஓசையையும் மறைக்க முயலுகிறான். உள்ளத்தில் ஓயாது எழுகின்ற ஒரு குரலை அதிகரித்துக் கொண்டே செல்லும் அதன் வீரியத்தை மறைத்து அடக்க முயன்று ஒரு கட்டத்தில் புதைத்தே விடுகிறான், அதனை!.
.
இறைவனிடமிருந்து அருட்கொடையாகப் பெற்ற உயிர்வளிதான் மனித மொழியில் ஆன்மா எனப்படுகின்றது.
.
உண்மையைத் தவிர வேறெதுவும் தெரியாது, அதற்கு.
.
உண்மையை உன்னைப் படைத்தவனைப் பற்றி ஓயாது பேசிக் கொண்டே இருக்கின்றது, அது.
.
உண்மையோடு ஒத்துப்போகாத செயல்களை மனிதன் செய்யும் போது உறுத்தவும் தொடங்குகின்றது.
.
உள்ளே இருக்கும் உயிர்வளியோடு ஆன்ம ஒளியோடு ஒத்துப் போவதால் தான் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இம்மார்க்கம் இயல்மார்க்கம் எனப்படுகின்றது.
.
மனிதரை இறைவன் உருவாக்கியுள்ள இயப்போடு ஒத்தமைந்த இந்த இயல் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் என வான்மறை குர்ஆன் அழைக்கின்றது. (30/30)
.
மறைப்பது என்பதை அரபி மொழியில் குஃப்ரு என்கிறார்கள்.
.
சொல்லவரும் விஷயம் இதுதான்.
.
காஃபிர் என்பதை இன்றென்னவோ கெட்ட வார்த்தையாகப் பார்க்கின்றார்கள். கெட்ட வார்த்தையைப் பற்றி பேசுகின்ற கெட்ட நூலாக ஆகிவிடப்போகின்றது, குர்ஆன்.
.
அனைத்துப் பொருட்களையும் கவிந்து மூடிவிடுகின்றது, இருள். எனவே இரவை காஃபிர் என்கின்றார்கள்.
.
உள்ளே இருக்கும் கனியை வெளித்தெரியாமல் மறைத்துவிடுவதால் அதன் தொலியை, காஃபூர் என்கின்றார்கள்.
.
இரவுவானில் விண்மீன்களைக் காணவிடாது மறைத்து விடுகின்ற மேகங்களை காஃபிர்கள் என்கின்றார்கள்.
.
தங்கள் உரிமைகளுக்காக இன்று அரைநிர்வாணப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்களே, விவசாயிகள் அவர்களையும் காஃபிர்கள் என்கின்றார்கள். வான்மறை குர்ஆனும் விவசாயிகளை காஃபிர்கள் என்கின்றது. (59-20)
.
விதைகளைக் கொண்டுபோய் அவர்கள் மண்ணில் மூடி மறைக்கின்றார்கள் அல்லவா, அதனால்!.
.
தண்டனை அறிவிக்கப்படாத குற்றம் ஒன்றை நீங்கள் செய்துவிட்டால் அதற்குரிய ‘மறைப்பை’ நிறைவேற்றி குற்றமற்றவர்களாக ஆகிவிடுங்கள் என்கின்றது ஷரீஅத். பரிகாரம் என்று அதனை நாம் சொல்லிக் கொள்கின்றோம்.
.
(பரிகாரம் என்பதற்கு என்ன தமிழ்ச்சொல்? Siraj Ul Hasan அவர்களே,)
.
இந்த பரிகாரத்தை கஃப்பாரா என்கின்றார்கள். அதாவது மூடிமறைப்பான் அல்லது மூடும் மறைப்பான்.
.
ஓரிறைவனைப் பற்றி எந்நேரமும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் அகத்தின் குரலை ஒருவர் அடக்கி வைக்கிறார், சிந்தனைக்கு செல்ல விடாமல் மூடி மறைத்து மடக்கி தடுக்கிறார் என்றால் அவர் ஷரீஆவின் மொழியில் காஃபிர் ஆகிவிடுகிறார்.
.
அவ்வளவுதான்.
.
ஈதொன்றும் கெட்டவார்த்தை அல்ல. செயலாகு பெயர்.
.
நீர் ஒரு காஃபிர்தானே என பார்வோன் இறைத்தூதர் மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களைப் பார்த்து கேட்கிறான். (26/19)
.
செய்நன்றி மறந்தவர் இல்லையா? என்னும் பொருளில்.
.
நன்றிமறந்தவன் காஃபிர் என்னும் பொருளில் ஏராளமான இடங்களில் இச்சொல்லை வான்மறை கையாண்டுள்ளது.
.
நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் நறுமணம் கமழும் தெவிட்டாத பானமொன்று புகட்டப்படும். அதன் பெயர் காஃபூர்.
.
அதாவது அதன் இயற்தன்மை வெளித்தெரியாதளவு அதன் மணம் தூக்கலாகக் காணப்படும்.
.
நம்பிக்கையாளர்களின் சிறுகுறைகளை இறைவன் மூடி மறைத்துவிடுவான் என்பதைக் குறிப்பிடவும் இதே சொல்லை - கஃபர - வான்மறை குர்ஆன் பயன்படுத்தியுள்ளது. (காண்க 5/65)
.
மண்ணறைகளில் புதைக்கப்பட்டுள்ளோரைப் பார்த்து அஹ்லுல் கஃபூர் என அமீர் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விளித்துள்ளார்கள்.
.
அவ்வளவு ஏன்? நம்பிக்கையாளர்களும் இதே சொல்லால் விளிக்கப் படுகின்றார்கள்.
.
அல்முஃமினு முகஃப்பருன்
.
செயலாலும் செல்வத்தாலும் அவனிழைத்த சிறுசிறு பிழைகள் யாவும் மன்னிக்கப்படுபவன் எனப்பொருள்.
.தகவல் தந்த
அழகப்பன் அப்துல் கரீம் அவர்களுக்கு நன்றி 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails