Tuesday, January 31, 2017

அஹமது ஹுஸைன் தீதாத், ஓர் ஆச்சர்யக் குறி!

Yembal Thajammul Mohammad 



அஹமது ஹுஸைன் தீதாத், ஓர் ஆச்சர்யக் குறி!


இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்; தென் ஆஃப்ரிக்க எழுத்தாளர்,பேச்சாளர்.
இஸ்லாமிய அழைப்பாளர் என்று உலகெங்கும் அறியப்பட்ட ஒற்றை மனித ராணுவம்!
அந்த வகையில் அரை நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ உலகை அதிர வைத்தவர்!
ஆறாம் வகுப்புக்கு மேல் முறையாகப் படிக்க இயலாத அவர், தன் முயற்சியால் கற்றவற்றைக் கசடறக் கற்றார்.
அவர் பேசிய ஆற்றொழுக்கான ஆங்கிலத்தின் மூலம் இஸ்லாமிய தீபத்தை எங்கெங்கும் ஏற்றிவைத்தவர். அது இன்றும் ஒளிவீசிக் கொண்டிருப்பது.
ஒரு மனிதர் எந்த மேடையில் எப்போது பேசினாலும் அப்படியே அச்சேற்றி விட முடியாது.ஆனால் அஹமது தீதாத் அவர்களின் பேச்சுக்கு அந்த மதிப்பு இருந்தது.

அவருடைய நூல்களும் அப்படியே.அவற்றைப் பதிப்பித்ததில் அவர் ஒரு புதிய முன் மாதிரியை வகுத்தார். அதை அரிதாகவே பின்பற்ற முடியும். அவருடைய நூல் வெளியீடுகள் சிறிதாயினும் பெரிதாயினும் பார்க்க, படிக்க, சிந்திக்க… பரவசப்படுத்துபவை.நான் அறிந்தவரை அவற்றுள் தலைசிறந்தது, “The choice”!
உலகில் மில்லியன் கணக்கான மக்களின் கைக்குச் சென்று சேர்ந்து சிந்திக்க வைத்த நூல்…அவர் கையெழுத்திட்டுக் கொடுத்த அந்த நூலின் பிரதி என் கைக்கு வந்தபோது புதையல் கிடைத்ததுபோல் பூரித்துப் போனேன்.
நான் எழுதிய ”இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்” என்ற வித்தியாசமான நூல் வெளிவந்து வெற்றிபெற்றபோது அதை ஆங்கிலத்தில் வழங்குமாறு அருமைச் சகோதரர்கள் ஆர்வமூட்டினர்.
அந்த மொழிபெயர்ப்பு நூலை, “The choice”-ஐப் போலப் பதிப்பிப்பது என்று முடிவு செய்தேன். (Identical edition with a difference in stuff)
அல்லாஹ்வின் அருளால் கடந்த 2000-இல் அவ்வாறே வெளியானது.அது பின்னர் அன்றைய பாராளுமன்ற மேலவையின் துணைத் தலைவர் ரஹ்மான் கான் அவர்களால் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் 15 ஆண்டுகள் கழித்து அது மீண்டும் வெளிவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முயற்சிகள் வெற்றிபெற....
தூய நெஞ்சங்களின் துஆவை விரும்புகிறேன்.

Yembal Thajammul Mohammad 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails