Monday, August 22, 2016

கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்!

பொதுவாக இஸ்லாமிய மக்களின் திருமணத்தின் போது மணமகளுக்கு, மணமகன் 'மகர்' எனப்படும் திருமணக்கொடை வழங்குவது வழக்கம். அது தங்கமாக இருக்கலாம் அல்லது பொருளாக இருக்கலாம். அன்பின் அடையாளமாக இது கருதப்படுகிறது. ஆனால் மகராக புத்தகங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் , கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர்.  

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை ஷாக்லா, ஹைதராபாத் பல்கலையில் 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' படித்தவர்.  இவருக்கும் ஆனீஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷாக்லா, தனது வருங்கால கணவரிடம், மகராக தங்க நகையோ பணமோ கேட்கவில்லை. மாறாக 50 புத்தகங்களை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். 'இஸ்லாமிய பெண்ணிய இலக்கியம், இலக்கிய புத்தகங்கள், அறிவியல் மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்கள் தேவை' என அனீஷிடம், லிஸ்டையும் எழுதியும் கொடுத்து விட்டார்.


மனைவியாகப்போகிறவரின் இந்த வித்தியாசமான மகர் ஆசையை நிறைவேற்ற அனீஷ் ஒவ்வொரு கடை கடையாக ஏறி, இறங்கினார்.  வருங்கால மனைவி கேட்ட புத்தகங்களை வாங்க பெங்களூரு வரைக்கும் கூட அனீஷ் போக நேர்ந்தது. ஷாக்லா கூறிய 50 புத்தகங்களையும் வாங்கி, ஆகஸ்ட் 11 ம் தேதியன்று நடைபெற்ற திருமணத்தின் போது மகராக வருங்கால மனைவியிடம் அளித்தார்.



இது குறித்து ஷாக்லா கூறுகையில், ''இஸ்லாமிய சம்பிரதாயப்படி, மணமகள் மணமகனால் தரக் கூடிய எதையும் மகராக பெற்றுக் கொள்ளலாம். ஒரு பெண் சுயமாக, தான் விரும்புவதை கேட்டுப் பெறவும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இன்னொரு விஷயம், தங்கத்தையோ பணத்தையோ அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் திருமணத்தை நான் விரும்பவில்லை. திருமணத்தை மையமாக வைத்து இரு வீட்டாரிடம் இருந்து தங்கமோ நகையோ கூட கை மாறக் கூடாது என நினைக்கிறேன். அதனாலேயே எனது வருங்கால கணவரிடம் புத்தகங்களை மகராக கேட்டேன்'' என்றார்.
நன்றி : http://www.vikatan.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails