Wednesday, August 17, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நினைவு ...ஐந்தாம் பாகம் .../ ஜோர்டானில் அவதி நினைவுக் காற்றை சுவாசிக்கிறேன் ...


Abdul Gafoor

ஜோர்டானில் அவதி
நினைவுக் காற்றை சுவாசிக்கிறேன் ...
--------------------------

இனியவர்களே 
அஸ்ஸலாமு அலைக்கும் ...
எங்கள் வீட்டு மதிலேறி குதித்த ராணுவ வீரர்கள் இருவரும் என்னை நெருங்கினர் ...
ஈராக்கின் மரபு சுமந்து அரபு மொழியில் என்னிடம் உரத்த குரலில் நீ எந்த நாட்டுக்காரன் என்று கேட்டதும் நான் இந்தியன் என்றேன் ...
உங்கள் வீட்டினுள் குவைத்தியர்களை ஒளித்து வைத்திருக்கிறாயா அவர்களை நாங்கள் சுட வேண்டுமென்று என்னிடம் கேள்விகள் கேட்டு என்னை குடைந்த நிலையில் நானும் உடைந்த அரபியில் இல்லை இங்கே யாருமில்லை என்றேன் ...
உறுதியான தேகம் கொண்ட வீரர்களுக்கு என் பதில் சந்தேகம் எழுப்ப எங்கள் வளாகத்தின் பூட்டப்பட்டிருந்த அரபி வீட்டின் மதில் மீதேறி குதித்து தேடினர் அங்கு யாருமில்லாததால் எங்கள் அறைக்குள் நுழைந்து கட்டில்களுக்கு அடியில் எட்டிப் பார்த்து அங்கும் யாருமில்லை என்பதால் என்னை முறைத்துப் பார்த்து சமையலறைக்குள் நுழைந்து குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தனர் ....
உங்களுக்கு என்ன தேவையோ எடுத்து சாப்பிடுங்கள் என்றதும் அதிலிருந்த குப்பூஸ் வெண்ணெய் போன்ற உணவுகளை எடுத்து சாப்பிடத் துவங்கி நீ பயப்படாதே உன்னை நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று 
அவர்கள் சொன்னதும் எனக்குள் ஏறியமர்ந்த பயம் எனனை நோக்கி புன்னகைத்து கீழே இறங்கத் துவங்கியது ...
அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் பசிக்குமல்லவா ...சாப்பிட்டு முடிந்து வெளியேறினர் ....
இப்படியும் அப்படியும் நகர்ந்த நாட்கள் எங்களை எப்படியும் ஊருக்கு தள்ளும் என்கிற உணர்வுகள் எனக்கு ஏற்பட்டது ...
சதாம் உசைனோடு இந்திய வெளியுறவுத் துறை நிகழ்த்திய பேச்சு வார்த்தைகளில் நமது நாட்டவரை இந்திய அரசுச் செலவில் அழைத்துச் செல்ல ஒப்பந்தமானது ...
குவைத்திலிருந்து இந்திய தூதரகத்தில் பெயர்களை பதிவு செய்து சிறிய ராணுவ விமானத்தில் (இருக்கைகள் இல்லாமல் பயணிகள் நின்று செல்லும் விமானம் என்று நினைக்கிறேன்) ஒவ்வொரு குழுவாக ஜோர்டான் நாட்டுக்குச் சென்றனர் ...
அங்கிருந்து வெவ்வேறு விமானங்களில் இந்தியா சென்றடைய காத்திருந்த நாட்களில் நம்மவர்கள் அனுபவித்த சிரமங்களை விவரித்தால் பக்ககங்கள் போதாது ....
பாலைவனங்களில் அமைத்திருந்த கூடாரங்களில் தங்கியிருந்த வேளைகளில் சாப்பாடு இல்லாமலும் ஊர்ந்து செல்லும் பாலைவன பிராணிகளாலும் நமதூர் பிரயாணிகள் பெரும் துயரங்களை அனுபவித்தனர் ....
விமான டிக்கெட்டுகள் வாங்கிட நீண்ட வரிசைகளில் 24 மணிக்கூர்களுக்கும் மேலாக சிறுநீர் கழிக்க இயலாமல் கஷ்டப்பட்டு இறுதியில் தாயகம் சென்றடைந்தனர் ....
மனித தலைகளின் நடமாட்டத்தில் அலைகளாய் ஆர்பரித்த எங்கள் சுற்றுப்புறங்கள் கலையிழந்து அமைதியானது ....
எஞ்சிய கடைசி குழுவான பயணிகளில் நானும் ஒருவனாக ஊருக்கு சென்றிட மனசில்லாமல் அடுத்த அறிவிப்புக்கு காத்திருந்த நிகழ்வை விவரிக்கிறேன் ....
தொடரும் 
இன்ஷா அல்லாஹ் ...
அன்புடன்

Abdul Gafoor அப்துல் கபூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails