Thursday, June 16, 2016

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 30. கை கழுவும் தினம்

கை கழுவுவது குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி அக்டோபர் 15-ந் தேதி 'உலக கை கழுவும் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்ததும், கையைக் கழுவ வேண்டும் என்பதையே ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய முதல் செயலாக இஸ்லாம் கற்றுத் தருகிறது.
'உங்களில் ஒருவர் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து பாத்திரத்திற்குள் கையை விடுவதற்கு முன்பு தன் இரு கைகளையும் மூன்று முறை நன்றாகக் கழுவிக் கொள்ளட்டும். ஏனெனில் இரவில் அயர்ந்த தூக்கத்தில் நமது கைகள் எந்த நிலையில் இருந்தது என்று நமக்குத் தெரியாது' என்பது நபிகளாரின் கூற்று.
ஒவ்வொரு நாளும் கை கழுவிய பின்னரே அன்றைய வாழ்க்கை நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை 1,400 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் சொல்லித் தந்துள்ளது. இரு கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உலக கை கழுவும் தினம் நமக்கு வலியுறுத்துகிறது.  முகம், பல், காது, கால்கள், மூக்கின் துவாரம் உள்ளிட்ட உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் தூய்மையாக வைத்திருத்தலை 'ஒளு' (அங்கத் தூய்மை) கற்றுத் தருகிறது.

சிறுநீர் கழிப்பதில்கூட சிறந்த முறைகளைச் சொல்லித் தருகிறது, இஸ்லாம்.
சிறுநீர்த் துளிகள் தெறித்து விடாதபடி மிருதுவான தரையில் சிறுநீர் கழிக்க வேண்டும். எப்போதும் அமர்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும். நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது மிகவும் மோசமான நடைமுறையாகும். அதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
குளியல் அறை மண் தரையாக இருக்கும் பட்சத்தில் அதில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்த்துக் கொள்வது  நல்லது.
மலஜலம் கழிக்கச் செல்லும்போது கண்டிப்பாக காலணி களை அணிந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'சாபத்திற்குரிய மூன்று செயல்களில் இருந்து விலகி இருங்கள். அவையாவன: நதிக்கரைகளிலும், சாலைகளிலும், நிழல் தரும் இடங்களிலும் மலஜலம் கழித்தல்'.
மேலும் தேங்கும் தண்ணீர், ஓடும் தண்ணீர் போன்றவற்றில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
'உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்க நினைத்தால் அதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்து கொள்ளட்டும்' என்பது நபிமொழியாகும்.
சிறுநீர் கழிக்கும்போது அது தனது உடலிலோ, உடையிலோ விழாதவாறு கழிக்க வேண்டும்.
ஹங்கேரியில் ஒரு யூதக்குடும்பத்தில் பிறந்து 1972-ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட லியோ பால்டு அஸத் என்பவர் தன்னை இஸ்லாம் ஆட்கொண்ட விதத்தைப் பற்றிக் கூறியதாவது:-
'முஸ்லிம்கள் சிறுநீர் கழிக்கும் முறையும், அதன் பிறகு துப்புரவு செய்யும் பாங்குமே என்னை முதலில் கவர்ந்தன. மற்றவர்கள் மிகவும் அலட்சியமாகக் கழித்து விட்டு மிகச்சாதாரணமாக எழுந்து செல்லும் இந்தக் காரியத்தைக்கூட முஸ்லிம்கள் பேணுதலுடனும், ஒரு மரியாதையுடனுமே செய்து முடிக்கிறார்கள். இதன் பிறகு, நான் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள மேலும் மேலும் படித்தேன். படிக்கப் படிக்க அதன் ஒவ்வொரு படியும் என்னை அதை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு சென்றது. நான் முஸ்லிம் ஆகி விட்டேன்'.
அங்கத் தூய்மையை முறிக்கின்ற தூய்மைக் கேடான சில இயற்கை உபாதைகள் உண்டு. சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், நாற்ற வாயு பிரிதல் ஆகியவைதான். இவற்றுக்கு 'சிறு துடக்கு' என்று பெயர். 'சிறு துடக்கு' ஏற்பட்டால் மீண்டும் 'ஒளு' செய்ய வேண்டும். ஆனால் தாம்பத்திய உறவு மற்றும் விந்து வெளியாதல் போன்றவற்றைப் 'பெருந்துடக்கு' என்பர். இதற்கு குளிப்பு கடமை ஆகிறது. குளிப்பு என்று சொன்னால் உடல் முழுவதும் தண்ணீரால் தூய்மை செய்வது என்று அர்த்தம்.
'(நபியே!) மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அது ஓர் இயற்கை உபாதை. எனவே மாதவிடாயின்போது (தாம்பத்திய உறவு கொள்ளாமல்) பெண்களிடம் இருந்து விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள்' என்று திருமறையில் (2:222) இறைவன் கூறுகின்றான்.
'தூய்மையாகும் வரை' என்றால் குளிக்கும் வரை என்று பொருள். 'நீங்கள் பெருந்துடக்கு உடையவர்களாய் இருக்கும் நிலையில், குளிக்கின்ற வரை தொழுகையை நெருங்காதீர்கள்' (4:43) என்கிறது, இறை வசனம்.
மாதவிடாய் என்பதைக் குறிக்க மூலத்தில் 'அல்ஹைள்' என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இஸ்லாமிய வழக்கில் 'ஹைள்' என்பது, பெண் பருவ வயதை அடைந்த பிறகு கருப்பையில் இருந்து மாதந்தோறும் குறித்த நாட்களில் வெளியேறும் குருதியைக் குறிக்கும். சிறுநீரகத்தில் இருந்து சிறுநீரும், குடலில் இருந்து மலமும் வெளியேறுவதைப் போன்று, கருப்பையில் இருந்து வெளியேறும் ஒரு கழிவே மாதவிடாய் குருதி ஆகும். கருப்பையின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மாதவிடாய் மற்றும் பிரசவ ரத்தம் வந்தவர்கள் நோன்பு நோற்கவும், தொழுகையில் ஈடுபடவும் கூடாது. ஆனால் தூய்மையான பிறகு, விட்டுப் போன நோன்புகளை நோற்பது கட்டாய கடமையாகும். அதே நேரத்தில் விட்டுப் போன தொழுகைகளை மீண்டும் தொழுவது கட்டாயமில்லை.
ஒருமுறை நபிகளார் பள்ளிவாசலில் இருந்த தொழுகை விரிப்பை எடுத்துத் தருமாறு ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா, 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே' என்றார்கள். அப்போது நபிகளார், 'மாதவிடாய் உன் கையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை' என்று பதில் அளித்தார்கள்.
மாதவிடாய் உள்ள ஒரு பெண் ஒரு பொருளைத் தொடுவதால் அது அசுத்தமாகி விடும் என்ற மூட நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. தீட்டு, தீண்டாமை ஆகியவை இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைகளாகும்.

from Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails