Saturday, February 27, 2016

‘ஸல்’ என்பதன் பொருள்

பெற்ற தாய், தந்தையை விட வும், இன்னும் சொல்லப் போனால் தன் உயிரினும் மேலாகவும் முஸ்லிம்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்தவர்கள்கூட ஏதாவது அவரிடம் கூற வேண்டுமென்றால், ‘என் தாயும், தந்தையும் உங்களுக்கு சமர்ப்பணம் ஆகட்டும்’ என்று சொல்லி தொடங்குகிற வழக்கம் இருந்தது.

இதனால்தான் அவர்கள் பெயரை எழுதும்போதும், சொல்லும்போதும் ‘ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்’ (இறைவனின் கருணையும், சாந்தியும் அவர்களுக்கு உண்டாவதாக) என்று எழுதுவதும், சொல்லுவதும் வழக்கம். இதைச் சுருக்கமாக ‘ஸல்’ என்று குறிப்பிடுவார்கள். இது நபிகளாருக்காக இறைவனிடம் மக்கள் செய்யும் பிரார்த்தனை ஆகும். இது ‘ஸலவாத்’ எனப்படும். எனவே நபிகளாரின் பெயர் வரும்போதெல்லாம் சுருக்கமாக ‘ஸல்’ என்பது அடைப்புக் குறிக்குள் குறிப்பிடப்படுகிறது.


இதைபோலவே இறைத் தூதர்கள் பெயர் வரும்போதெல்லாம், ‘அலைஹிஸ் ஸலாம்’ (அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று சொல்ல வேண்டும். இறைத் தூதர்களுக்குப் பிரார்த்தனை செய்யும் வகையில் அவர்கள் பெயருக்குப் பின்னால் இதைச் சுருக்கமாக ‘அலை’ என்று குறிப்பிடுவர். சான்றாக இறைத் தூதர் ஆதம் அவர்களைக் குறிப்பிடும்போது, நபி ஆதம் (அலை) அவர்கள் என்று எழுத வேண்டும்.
மேலும், நபித் தோழர்கள் பெயர் வரும்போது ‘ரலியல்லாஹு அன்ஹு’ (அன்னார் மீது இறைவனின் அன்பு உண்டாவதாக) என்று கூற வேண்டும். இது நபித் தோழர்களுக்காக செய்யப்படும் பிரார்த்தனை ஆகும். இதை ‘ரலி’ என்று சுருக்கமாகக் கூறுவார்கள். உதாரணமாக நபிகளாரின் உற்ற தோழரும், முதல் கலீபாவுமான (ஜனாதிபதி) அபூபக்கரைக் குறிப்பிடும்போது, அபூபக்கர் (ரலி) என்று எழுத வேண்டும்.

நபித்தோழர்களுக்குப் பின்னர் வாழ்ந்து மறைந்த இஸ்லாமியப் பெரியவர்கள் பெயர் வரும்போது ‘ரஹ்மத்துல்லாஹி அலைஹி’ (அவர் மீது இறைவனின் அருள் உண்டாவதாக) என்று கூற வேண்டும். இதைச் சுருக்கமாக ‘ரஹ்’ என்று குறிப்பிடுவர். நபி மொழிகளைத் தொகுத்த இமாம் புகாரி அவர்களை இமாம் புகாரி (ரஹ்) என்று எழுத வேண்டும்.

பாத்திமா மைந்தன்
http://mudukulathur.com/?p=38572

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails