Tuesday, August 25, 2015

அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனைப் பெண்மணி பாத்திமா இஸ்மாயில்

 பதிவை வாசிக்கும் முன்னர் சிறு முன்னோட்டம்...

60'களில் பிறந்த நடுத்தர குடும்ப இஸ்லாமியப் பெண் ,  இராமநாதபுரத்தின் கடற்கரை கிராமம்   தான் பிறந்து வளர்ந்த ஊர் , இவர்   தான் மூத்த மகள், இவருக்கு பின் 6 பிள்ளைகள் . இந்த   அறிமுகத்துடன் அந்த  காலக்கட்டத்தில் பயணிக்கும்  போது நம்  கற்பனைக்கு வந்த கதாபாத்திரம் இப்படியிருந்திருக்க கூடும்..

    தலைமை ஆசிரியரான தந்தையின் கடுங்கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டு பள்ளிக்கூட வாசனையை நுகராதவர்?
    கணவன் கொண்டு  வரும்  போதாத மாத சம்பளத்தில் வீட்டை நிர்வகிக்கும்  அம்மாவால் சொல்லப்படும்  வீட்டு வேலைகளால்  கசக்கி பிழியப்பட்டு எந்நேரமும் களைப்புடனும், எண்ணெய் வழியும் முகத்துடனும் நான்கு சுவருக்குள் முடங்கி கிடப்பவர் ?
    பள்ளிக்குச் செல்லும் தன் சகோதரர்களுக்கு எடுபிடி வேலை செய்துக்கொண்டு எதிர்காலம் குறித்த கனவு காண கூட சுதந்திரமல்லாதவர்?
    "சனியன் தொலஞ்சா போதும்" என பருவமடைந்தவுடனே திருமணம் செய்துவைக்கப்பட்டு கணவன் வீட்டில்,  மாமியாரின் அதிகாரத்தில் அடங்கியிருப்பவர் ?
    பக்குவம் பெறாத  வயதிலேயே கணவனின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு  இருப்பவர் ??

போதும் போதும்... நம் கற்பனைகள் நீளலாம். ஆனால்  அவை அனைத்தையும் தகர்த்தெறிந்தவர் தான், நாம் பார்க்கவிருக்கும் சாதனைப் பெண்மணி.

    படிக்கும் போதே தேசிய அளவில் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகள் குவித்தவர்,
    "திறமையான மாணவி" என அடையாளம் காணப்பட்டு தமிழக அரசின் ஸ்காலர்ஷிப் பெற்றவர்,
    கிரசண்ட் கல்லூரியில் ஹிஜாபை கட்டாயமாக்க காரணமாக இருந்தவர்,
    இராமநாதபுர மாவட்டத்தில் மின்சார வாரியத் துறையில் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி என நாளிதழ்களில் அதிகம் பேசப்பட்டவர்,
    இப்போது 60க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருக்கும் தொழில் அதிபர்.

இதுமட்டுமல்ல... இன்னும் இன்னும் ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தமானவர் தான்  பாத்திமா  இஸ்மாயில்.

              நம்புதாழை என்பது  இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்திருக்கும் முஸ்லிம்களும்,  கட்டுப்பாடுகளும் மிகுந்த கிராமம்.  பொதுவாகவே  இம்மாவட்டத்தில்  கல்வி விழிப்புணர்வு மிகவும் குறைவே.  இதற்கு ஆணாதிக்கச் சிந்தனை  என்று கூட நீங்கள் பெயர் சூட்டிக்கொள்ளலாம். ஆனால் அதே ஆண்களால் தான்  கல்வி இஸ்லாமிய பெண்களுக்கு கிடைக்கப்பெற்றது.  படித்த ஆண்கள் தங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்களாகினர். அதன் விளைவாக தன் வீட்டுப்பெண்களுக்கு கல்வி புகட்டியதோடு அல்லாமல் சமுதாயத்தில் மிளரவும் வைத்தனர்.

             நம்புதாழையின் இத்தகைய சூழலில் வளர்ந்த     ஜக்கரியா,  உற்றார்  உறவினர்கள்,  நண்பர்கள்  ஆலோசனைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் மூத்த மகளான பாத்திமாவை, தன் ஆண் குழந்தைகளுக்கு  நிகராக படிக்க வைக்கத் தீர்மானித்தார். அந்த காலக்கட்டத்தில் இதொன்றும் சாதாரண விஷயமல்ல! ஒவ்வொருவரின் கருத்துக்களையும் எதிர்க்கொண்டு தன் பெண்ணின்  வளர்ச்சிக்கு முதல் விதையை ஆழமாக விதைத்த பெருமை தந்தை ஜக்கரியாவையே சேரும். இதில் அம்மா கைருன்னிஷா அவர்களின் தூண்டுதலும்  ஒத்துழைப்பும்  மகத்தானது.  அதிகம் கல்வியறிவு பெற்றிடாத பெண்மணியாய் இருந்தும் பழமைக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் இரையாகாத இன்னுமொரு சாதனைப்பெண்மணி இவர்.
விதை தூவிய தருணம் :
           
                           இளையான்குடியில் சாதாரண கணக்கு ஆசிரியராய் வேலைப்பெற்ற தந்தையால்  ஆரம்ப கல்வி இளையான்குடியிலும் ,  விரைவிலேயே   கீழக்கரையின் Hameediah Boys Higher secondary school லில் தலைமையாசிரியராய் தந்தை  பணி உயர்வு பெற்றதால் 3ம் வகுப்பு முதல் Hameediah girls Higher secondary schoolலும் கல்வி பயின்றார். பலரின் எதிர்ப்பையும் மீறி வளமான கட்டமைப்பில் விதைத்த பயிர் தன் வளர்ச்சியை துளிர்விடும்  பருவத்திலேயே அனைவருக்கும் காட்டியது. பள்ளியில் அவுட்ஸ்டான்டிங் ஸ்டூடண்ட். பள்ளி பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் பாத்திமா பிந்த் ஜக்கரியா பெயர் ஒலிக்காமல் நிறைவு பெற்றதில்லை. பேச்சுப் போட்டியாகட்டும் இன்ன பிற போட்டிகளாகட்டும் அனைத்திலும் தன் திறமையை காட்டிக்கொண்டிருந்த வேளையில் பல்வேறு  பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் மாவட்ட அளவிலும்  மாநில அளவிலும் பரிசுகள் பெற்று தான் பயின்ற பள்ளிக்குப் பெருமை சேர்த்தவர்.  தன் மகளின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிகளை பார்த்த தாயும் தந்தையும் மகளை செதுக்க ஆரம்பித்தனர். தந்தையின் சகோதரியான லதிபாவின் பங்கும் மிக அதிகம். கணவர் இறந்ததால் தன் சகோதரனுடன் தங்கிவிட்ட மாமி லதிபா தான் ,  சகோதரி பாத்திமா இரவில் தூங்கும் வரையிலும் விழித்திருந்து உதவிகளை செய்யக்கூடியவர்.  தன் சகோதரன் மகளின் படிப்பின் மீது அதிக அக்கறை கொண்டவர்.

                இப்படியாக ஒவ்வொருவரும் செதுகக்ச் செதுக்க பளபளக்க ஆரம்பித்தார் சகோதரி பாத்திமா. எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தமிழக அரசால் திறமையான மாணவி என அடையாளம் காணப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பெற்றவர். அதன் தொடர்ச்சியாக அடுத்த 4 ஆண்டுகளுக்கான  கல்விச் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள ,  விடுதியில் தங்கியபடியே தேவகோட்டை செயின்ட் மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ராமநாதபுரம்  செயின்ட் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிபடிப்பை தொடர்ந்தார். தேவைக்கோட்டைக்கு சென்றதும் மொத்த குடும்பமும் அவருக்காக தேவக்கோட்டை சென்று அங்கு குடியிருந்தது.

               சகோதரி  பாத்திமாவிற்கு மட்டுமல்ல, அவரைத் தொடர்ந்து அவரின் ஓர் சகோதரிக்கும், 5 சகோதரர்களுக்கும் தரமான கல்வியை தந்தை ஊட்டினார். ஆனால் தன் வருமானம் போதாததாக இருந்தது. சொத்துக்கள் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாத நிலையில் உறவினர்களும் உதவி செய்ய மறுத்த சூழல் நிலவியது.  தலைமை ஆசிரியராய் இருந்தபோதும்  வருமானம் தன் லட்சியங்களையும்  பிள்ளைகளின் கனவையும் நனவாக்க உதவாது என்பதை உணர்ந்த அவர், தன் கனவுகளை புதைத்துவிட்டு தலைமை ஆசிரியர் பதவியை துறந்து சார்ஜா சென்று அங்கே வேலை செய்ய எத்தனித்தார். இது பற்றி சகோதரி பாத்திமாவின் அன்னை கைருன்னிஷாவிடம் கேட்டபோது " என் கணவர் கொண்டு வரும் 1500 ரூபாய் ஊதியத்தில் 25 ஆயிரம் அளவுக்கு நன்கொடையும் செமஸ்டர் , ஹாஸ்ட்டல் மற்றும் இன்ன பிற படிப்பு செலவுகளையும் சமாளிக்க போததாக இருந்ததால் தன் கனவுப்படி மகளை இஞ்சினியர் படிக்க வைக்க ஆசைபட்டு அவளுக்காகவே அவ்வயதில் சார்ஜா சென்றார்" என்றார்.
                            அன்னை கைருன்னிஷா - கல்வி உதவிதொகை வழங்கும்  நிகழ்ச்சியில்
                 இளமைக் காலமெல்லாம் தன் மனைவி மக்களுடம் கழித்துவிட்டு ஓய்வெடுக்கும் வயதில் குடும்பம் பிரிந்து வளைகுடா செல்வது எவ்வளவு கொடுமையானது ?  இந்த நிலையில் தான் சகோதரி பாத்திமா உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்திருந்தார்.  பெண்பிள்ளை தானே என்று  உடனே ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கோ,    பேருக்கு பின் போட்டுக்கொள்ள சாதாரண பட்டம் பெற்றால் போதும் என  கலைக்கல்லூரிக்கோ அனுப்பிவிட நினைக்கவில்லை தந்தை. தன் ஆண்  பிள்ளைகளை போலவே பெண்பிள்ளைகளும் பொறியியல் துறையில் பயில வேண்டும் என்ற கனவு அவருக்கிருந்தது.    பெண்களுக்கா? பொறியியல் கல்லூரியா? அந்த காலகட்டத்தில் இது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

                  அப்போது தான் சென்னை கிரசண்ட் கல்லூரியில் பொறியியல்-கான துறை 1984ம் வருஷம்  தொடங்கப்பட்டது.  ஹாஸ்ட்டலில் தான் அடுத்த நான்கு வருடங்களில் தங்கியாக வேண்டும், தந்தை வளைகுடாவில் இருக்கும் காரணத்தால் ஆண் துணை அல்லாத தாயால் அடிக்கடி சென்னை சென்று வர முடியாத சூழல் நிலவும்,  பயண வசதிகள் சுலபமல்லாத கால கட்டத்தில் இருந்தபடியால் தனியே  தகுந்த துணை அல்லாமல் பயணித்து அடிக்கடி சென்னையிலிருந்து தன் கிராமத்திற்கும் வர முடியாது போகலாம், தந்தை எப்போது  ஊருக்கு வருகிறாரோ அப்போது வந்தால் மட்டும் போதும்- இந்த கன்டிஷன்களுக்கு ஓக்கே என்றால்  சென்னை கல்லூரியில் சேர்க்கத் தயார் என்றார் தாயார். கொஞ்சம் கூட யோசிக்காமல் சரி என ஒப்புக்கொண்ட சகோதரி பாத்திமா சென்னை கிரசண்ட்டில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை தேர்ந்தெடுத்து  சேர்ந்தார்.  அடுத்த நான்கு வருடங்களில் நான்கு முறை மட்டுமே அவர் விடுமுறையில் ஊருக்குச் செல்ல முடிந்தது. ஆனாலும் தனிமை அவரை  வாட்டவில்லை,  தன் அருகில் யாருமில்லையே என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கிடைக்கும் விடுமுறைகளிலெல்லாம் உடன் தங்கியிருக்கும் மாணவிகள் ஊருக்கு சென்றுவிட அன்றைய நாட்களிலும் அவர் ஏங்கவில்லை. மாறாக கிடைத்த  நேரங்களையெல்லாம் தன்  புத்தகத்திற்காக செலவிட்டார்.    தன் கல்லூரி தனிமை வாழ்வைப்பற்றிய நினைவுகளில் தனக்கு உதவியவர்களை சகோதரி பாத்திமா நினைவு கூர்ந்தார் , " கல்லூரி இயற்பியல் துறையில் பேராசிரியரும் தற்போதைய துறைத் தலைவருமான சமீம் பானு அவர்களும், கணிதத்துறை  பேராசிரியராக பணியாற்றிய ஆமினா பீவி அவர்களும் தென் மாவட்டத்திலிருந்து தனியா வந்ததால் வந்த பரிதாபத்தில்  பெற்றோராக இருந்து எந்த ஒரு குறையும் இன்றி குடும்பத்தை பிரிந்திருந்த வருத்தமுமின்றி மிக அன்பாக அரவணைத்துப் பாதுகாத்து வந்தனர் "

                                      தந்தை மர்ஹூம் . ஜக்கரியா

                    கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில் தம் பிள்ளைகளின் மார்க்க ஒழுக்கம் மற்றும் இஸ்லாமிய அறிவை ஊட்டுவதிலும் பெற்றோர்கள் தவறவில்லை. இஸ்லாமியச் சூழலில் பயின்றதால் மார்க்க நடைமுறைகள் அவருக்கு சுமையாக இருக்கவில்லை. அதனால் தான் கல்லூரியில் பயின்ற  அத்தனை மாணவிகளுக்கு மத்தியிலும் தனி ஆளாய் ஹிஜாப் பேணி வந்தார்.  இதனால் கல்லூரியில் அனைவரும்   வித்தியாசமாகவே பார்த்தார்கள்,  பழகினார்கள்.   முஸ்லிம் பெண்கள் மேற்படிப்புக்கு வரும் போது கல்லூரிகளிலும்,பணியிடங்களிலும் ஹிஜாப் அணிவதை பெரும் பிரச்சனையாகவும் அநாகரிகமாகவும் கருதிய காலம். அதற்கு காரணம் அறியாமை என்றே கூற வேண்டும். கல்லூரி பேராசிரியையாக இருந்தாலும் சரி,மாணவிகளாக இருந்தாலும் சரி யாருமே ஹிஜாப் அணிவது புழக்கத்தில் இல்லாத நிலையாயிருந்தது. இதில் தான்  சகோதரி பாத்திமா தனித்து தெரிந்தார்கள்.  அச்சமயத்தில் தான் கல்லூரியின் சேர்மன் மர்ஹூம்   அப்துர்ரஹ்மான் அவர்கள் அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகளையும் அழைத்து சகோதரி பாத்திமாவை  எடுத்துகாட்டாக நிறுத்தி “ இந்த பெண்ணால் கல்லூரி மற்றும் செய்முறை கூடங்களில் (laboratories) ஹிஜாப் அணிந்து வர முடிகிறதெனில்  எல்லாருக்கும் அது சாத்தியமே” என்று கூறி  எல்லாரையும் ஹிஜாப் அணிய வைக்க பெரும் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்கள்.  எதிர்பாராமல்  கிடைத்த அந்த பாராட்டையும் அமைதியாய் ஓர் செயல்முறை தாவாவையும் நிகழ்த்திகாட்டிய அந்த தருணத்தை பற்றி கேட்டபோது   சகோதரி பாத்திமா , " அந்த பாராட்டே என்னை இன்னும் இஸ்லாத்தை முழுமையாக நம் சமுதாயம் ,பணியிடம் என எல்லா இடங்களிலும் தைரியமாக செல்ல உதவி செய்தது.  இறைவன் அவர்களுக்கு சொர்க்க பதவி வழங்குவானாக! என்னுடைய பெற்றோர்களுக்கும் அருள் பாலிப்பானாக! ஆமீன் !" என்றார்.
சென்ற இடமெல்லாம் சிறப்பு :
         
                       நான்கு ஆண்டு பொறியியல் கல்வி முடித்த கையோடு அதே வருடம் 1988 ஆகஸ்ட் 8ல் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு அமர்ந்தார்கள். பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் பொறியாளராக ( operation and maintenance field engineer) பணியமர்ந்தார்கள். இராமநாதபுர மாவட்டத்தில் மின்சார வாரியத் துறையில் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி என்று நாளிதழ்களில் பிரசூகரிக்கப்பட்டது. தனது 21ம் வயதிற்குள்ளாகத்தான் இத்தனையும் சாதித்திருந்தார் சகோதரி பாத்திமா. எல்லா புகழும் இறைவனுக்கே ! அமைதியான ஆசிரியப்பணியிலிருந்து சவால் மிக்க பணியை தேர்ந்தெடுத்தது சிரமமாக இல்லையா என கேட்டபோது "என் உடன் வேலை புரிந்தவர்கள் அனைவரும் வயதில் மூத்த ஆண்கள். சவாலான field வொர்க் நிறைந்த அசிஸ்டன்ட் engineer வேலையை என் பெற்றோர் தந்த ஊக்கத்தால் நிறைவாக செய்ய முடிந்தது. என் பெற்றோர் தந்த தைரியம், நம்பிக்கை எல்லாவற்றிற்கும் மேலாக    இறை நம்பிக்கை என்னை பதவியில் மிக சிறந்த முறையில் மிக்க தைரியத்துடன் ஐம்பதுக்கும் மேலான தொழிலாளர்களையும் பல்லாயிரக்கணக்கான நுகர்வோர்களையும் சந்திக்க வழிவகுத்து எந்த வகையான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை தந்தது" என்றார்.
திருமண வாழ்க்கை :
     
                        TNEBயில் வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடமே 1989 ல் சகோதரி பாத்திமாவிற்கு திருமணம் ஆனது. கணவர் இஸ்மாயில் மதுரையில் இரும்பு வியாபாரம் செய்துகொண்டு வந்தார். திருமணத்திற்கு பின்னும் 1988 முதல் 1996 வரை சகோதரி  பணியில் தொடர்ந்தார். ஆணுக்கு நிகராய் வேலை செய்யக்கூடிய சவால் மிக்க, இரவோ பகலோ எந்த நேரத்தில் பிரச்சனை என்றாலும் உடனே  பணியிடத்திற்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பணியை எந்த ஒரு பெண்ணும் விரும்பி செய்வதில்லை. இது பெண்ணின்  கனவாகவே இருந்தாலும் கணவன் பொதுவாக இவற்றை விரும்புவதில்லை. ஆனால் பெற்றோர்கள் தன் மகளுக்கு பொருத்தமான துணையை அல்லவா தேர்ந்தெடுத்து தந்தார்கள்? சகோதரி பாத்திமாவின் பணி காலங்களில் கணவரின் ஒத்துழைப்பு மிக மிக மகத்தானது. ஆச்சர்யத்துடன் அது பற்றி வினவினோம்.  "என்னுடைய கணவர் என் பெற்றோர்களின்  முழுப்பொறுப்பையும் எடுத்து கொண்டு எனக்கு உறுதுணையாக அமைந்தது மட்டுமின்றி என்னை என் பெற்றோர் எவ்வாறு ஆண் ஸ்தானத்தில் வைத்து தைரியமும் நம்பிக்கையும் ஊட்டினார்களோ அதே இடத்தை  தந்தவர் . உறவினர்களால் அக்காலத்திய மனநிலையில்  பலவிதமான எதிர்ப்புகள் வந்தபோதும் என் கணவர் தனி மனிதராக எனக்கு உறுதுணையாக நின்று சாதனைகள் பல நிகழ்த்த வழி வகுத்தவர். என் பெற்றோர்கள் கனவு கடமையென்று எனக்கு துணையாக இருந்திருக்கலாம். அது பெரிய விஷயமல்ல. ஆனால் கணவனின் முதல் எதிர்பார்ப்பு சிறந்த மனைவியாக ,தாயாக,குடும்பப்பெண்ணாக இருப்பதே என்றிருக்கும். அதையெல்லாம் தாண்டி என்னுடைய எதிர்பார்ப்புகளுக்காக ,என் இலட்சியங்களையே குறிக்கோளாக ,என் கனவினை நனவாக்க என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை உண்மையாக்க எனக்கு உறுதுணையாக நின்றவர் என் கணவர்தான்"  என்றார்.


 
                                           போராட்டங்கள் மிகுந்த காலகட்டம் :
               
                 பணியிடத்தில் அதிக சிரமங்களையும்,எதிர்ப்புகளையும்  சந்திக்க வேண்டிய சூழல் வந்தது. உச்சகட்டமாக பணியினை துறக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார் சகோதரி பாத்திமா. இதனால் அருப்புகோட்டைக்கு பணி மாறுதல் பெற்றார். ஆனாலும் அழுத்தங்கள் தொடர்ந்தது. பணியை துறந்து வேலை தேடி துபாய்க்கு பயணமானார்.

எப்படி மீண்டார் , எப்படி சரிவை சரிக்கட்டினார் , 60க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் நபராக எப்படி உயர்ந்தார்  என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்

தொடரும் .....

ஆக்கம் : ஆமினா முஹம்மத்

  நன்றி  Source: http://www.islamiyapenmani.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails