Monday, August 10, 2015

எண்ணமும் எடையும்!

இதென்ன
இப்படிக் கனக்கிறது!

எண்ணங்களுக்கு எடையுள்ளதா
எனும் கேள்விக்கு விடையுள்ளதா?

கண்டெத்திய பாவங்களின்
கணக்கொரு கனம் - நாவால்
சொல்லிச் சேர்த்த பாவச்
சுமையொரு கனம்

செயல்களால் சேர்ந்ததும் - செய்ய
முயல்தலால் சேர்த்ததும்
நனவினில் சேர்த்ததும் - கண்ட
கனவினில் சேர்ந்ததும்

கேட்காமல் தேடிவந்த
கேளிக்கை கலைக்கூத்தென
செவிசேர்த்தப் பாவங்கள்
சிந்தையில் கனம் கூட்ட

வயல்வெளி விளைக்கும் நெல்லுடன்
இயல்பென விளையும் புல்லென
பொதியாகக் கூடிப்போய் - பாவம்
விதியாகிக் கனக்கிறதே!

மூட்டையின் முனைகளின்
ஓட்டைகள் வழியாக
நன்மைகள் நழுவிட
தங்கிய பாவங்கள்
தொங்கிய கழுத்தில்
இப்படிக் கனக்கிறதே!

அடுத்தவர் வாழ்க்கையைக்
கெடுத்தவ ரல்லர் - நாம்
கனியிருப்பக் காய்
கவர்ந்தவரு மல்லர்

தெரிந்தே பாவம்செய்ய
தேர்ந்தவ ரல்லர் - நாம்
புரிந்தே பிறர்க்குத் தீங்கு
புரிந்தவரு மல்லர்

முன்னிலை மனிதரைச்
சகிக்கின்ற தன்மை - பாவமின்றி
படர்க்கை மக்களுக்கும்
பலவற்றையும் பகிர்பவர்

எத்துணை பலம்கொண்டு
இறுக்கிப் பிடித்தாலும்
எண்ணப் பறவை
இழுத்துவந்த இன்பத்தில்
இழையோடிய பாவங்கள்

நடந்து செல்லும் பாதையில்
மிதிபட்டுச் சாகும்
விதிமுடிந்த நுண்ணுயிரைக்
கொலைசெய்த பாவங்கள்

கனம் குறைக்க வேண்டி
மனம்
தினம் செய்யும் பிரார்த்தனைகள்
எண்ணத்தின்
எடை குறைப்பதாய் உணர்வு

எனினும்
எண்ணங்களுக்கு எடை உண்டு

தூய எண்ணங்கள் இலேசானவை
தீய எண்ணங்களே கனமானவை

கைசேதம் அறியும் முன்
கரைசேர்வேனா - இல்லை
கனம்கூடி கனம்கூடி
விடையறியாக் கேள்விகளை
உன்முன்
எதிர் கொள்வேனா, இறைவா?

- சபீர்
http://www.satyamargam.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails