Monday, July 6, 2015

காயிதே மில்லத்தும் நாகூர் ஹனீஃபாவும் !

நெஞ்சைத் தொட்ட நிகழ்வு

    காயிதே மில்லத்தும் நாகூர் ஹனீஃபாவும் !

         -வி.எஸ். முஹம்மத் பஸ்லுல்லாஹ்

  மர்ஹூம் இசை முரசு நாகூர் இ.எம். ஹனீஃபா அவர்களுக்கு 19 வயது ஆன போது நடந்த நிகழ்வு. இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்களுடன் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவும் கலந்து கொண்டார்கள்.

  தினசரி இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் காயிதே மில்லத் சிறப்புரையாற்றினார்கள். தலைவர் பேசும் கூட்டங்களில் இசைமுரசு இரண்டு, மூன்று பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தார்கள். கடுமையான அலைச்சல், ஓய்வுமில்லை. கடைசிக்கூட்டம் இராமநாதபுரம் நகரில் நடந்தது. கூட்டம் முடிய நடு இரவு 1 மணி ஆகிவிட்டது. பின்னர் ஒன்றரை மணிக்கு முஸப்பரி என்ற பங்களாவில் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  எல்லோரும் உணவருந்தத் தயாராகி கைகழுவிக் கொண்டிருந்தபோது ஹனீஃபாவுக்கு வயிற்றில் ஒரு குமட்டல், இரத்த வாந்தி எடுத்து, மயக்கமுற்று விழுந்துவிட்டார். அருகிலிருந்த தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் மிகவும் பயந்துவிட்டார்கள். உடனே டாக்டர் அழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. ஒரு வாரக் காலமாகப் பாடி வந்ததாலும் ஓய்வு இல்லாததாலும் ஏற்பட்ட அசதிதான் இதற்குக் காரணம் என்று டாக்டர் கூறினார்.

  பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஹனீஃபா அவர்கள் கண் விழித்துப் பார்த்தபோது அவர் அருகில் தலைவர் காயிதே மில்லத் அவர்கள் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துத் திகைத்தார் இசை முரசு ஹனீஃபா .

  என்ன ஹனீஃபா சாப், எப்படி இருக்கிறது என்று தலைவர் அன்பொழுகக் கேட்டார்கள். நன்றாக இருக்கிறது ஒன்றுமில்லை என்று ஹனீஃபா கூறியபோது, அல்ஹம்து லில்லாஹ்… என்ற வார்த்தை தலைவரின் வாயிலிருந்து வந்தது. சிறிது தெளிவு பெற்றுப் பார்த்தபோது நாகூர் ஹனீஃபாவைச் சுற்றிலும் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள்.

  அதில் ஒரு பிரமுகர், ஹனீஃபா அண்ணே, நீங்கள் இரத்த வாந்தி எடுத்ததிலிருந்து உங்கள் பக்கத்திலேயே தலைவர் அவர்கள் உட்கார்ந்தபடியிருக்கிறார்கள். எவ்வளவு வற்புறுத்திக் கூப்பிட்டும் சாப்பிடவில்லை. ஹனீஃபா சாஹிப் சாப்பிடாமல் நான் சாப்பிடுவதில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆகையால் நாங்களும் சாப்பிடாமல் இருக்கிறோம் என்று கூறினார். பிறகு அனைவரும் இரவு 2 மணிக்கு உணவு சாப்பிட்டார்கள்.

  ஊரெல்லாம் சுற்றி அலைந்து நன்கு களைத்துப் போய் இரவு ஒரு மணிக்கு மேல் சாப்பிட உட்காரப் போகும் நேரத்தில் ஹனீஃபாவுக்காக மேலும் ஒரு மணி நேரம் தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் தங்களது உடல் நலனையும் ஓய்வு நேரத்தையும் பாராமல் ஒரு தொண்டனின் நலனில் அக்கறை காட்டியதை நினைத்துப் பூரிப்படைந்து போன இசை முரசு ஹனீஃபா வாழ்க்கையில் மறக்க முடியாத, மனதைத் தொட்ட, நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் என்று இசை முரசு நாகூர் ஹனீஃபா ஒரு கட்டுரையில் நினைவுகூர்ந்து குறிப்பிட்டார்.

  ஆதாரம்: காயிதே மில்லத் (ரஹ்) நினைவு மலர் 1990

( இனிய திசைகள் – மே 2015 இதழிலிருந்து )
Muduvai Hidayath
 <muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails