Wednesday, June 24, 2015

சிரித்து வாழவேண்டும் ! பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே !?

மனிதப்பிறவியைப் பெற்றிருக்கும் நமக்கு மனிதனுக்கான அனைத்து தகுதிகளையும் அறிவுகளையும் இறைவன் வழங்கியுள்ளான். நாம் அதை உபயோகிக்கும் விதத்தில்தான் நமது வாழ்க்கைத் தரம் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக அமைகிறது. அப்படி அமைத்துக் கொள்ளும் வாழ்க்கையில் ஒன்றுதான் நாம் சிரித்து சந்தோசமாக வாழ்வதும் , பிறர் சிரிக்க நாம் கேலிச் சித்திரமாய் ஆவதுமாக இருக்கிறது. சிரித்து வாழ்வதும் பிறர் சிரிக்க வாழ்வதும் எல்லாம் தத்தமது பழக்க வழக்கம், நடவடிக்கை, அணுகுமுறை, செயல்பாடு இவைகளில்தான் அடங்கியுள்ளது.

சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்றுகூட ஒரு பழைய தத்துவ பாடல் ஒன்று நாம் கேட்டிருப்போம். இதன் பொருள் நாம் என்றைக்குமே மகிழ்வுடன் வாழ நமது வாழ்க்கையை வளமாக வழிவகுத்துக் கொண்டு எப்போதும் இன்முகத்துடன் சிரித்து சந்தோஷமாக இருக்க வேண்டும். அதேசமயம் பிறர் நம்மை ஏலனமாக பார்த்து கேவலமாக நினைக்கும்படியும் கைதட்டி சிரிக்கும்படியும் ஒருபோதும் நாம் ஆகிடக் கூடாது என்பதேயாகும்.

இதற்க்கு உதாரணத்திற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியத் தேவையில்லை.ஒவ்வொருவரது வாழ்விலும் எத்தனையோ பல மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்திருக்கும். சில நிகழ்வுகள் நம் ஆயுட்காலம் வரை மனதை விட்டு நீங்காத நிகழ்வாக பிறர் நம்மைப் பார்த்து சிரிக்கும்படி நடந்திருக்கும்..சில நிகழ்வுகள் பிறரைப் பார்த்து நாம் சிரிக்கும்படியாக நடந்திருக்கும். அதன் தாக்கத்தில் அதுவே நமக்கு நல்ல பாடமாக உந்தல் சக்தியாக நாம் முன்னேற ஒரு பாதையாக அமைந்துவிடுவதும் உண்டு.

சிரித்து வாழும் வாழ்க்கை சாதாரணமாக கிடைத்து விடாது. அந்த வாழ்க்கை வாழ ஆரம்பத்தில் நாம் பலவகையிலும் பற்ப்பல கஷ்டங்களை அனுபவித்து எண்ணிலடங்கா சிரமங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி பல உலகப் பாடங்கள் கற்றறிந்து புத்திபடித்து கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி இறுதியில் நாம் ஒரு நல்ல நிலையை அடைந்து நிம்மதி பெற வேண்டும்.அப்படி நிம்மதிப் பெருமூச்சுடன் கிடைக்கப் பெற்ற வாழ்க்கை இருக்கிறதே அதுவே நமக்க உண்மையான மகிழ்வுடனும் சந்தோசத்துடனும் சிரித்து வாழும் வாழ்க்கையாக இருக்கிறது.

ஆனால் பிறர் நம்மைப் பார்த்து சிரிக்கும்படியான வாழ்க்கை இருக்கிறதே இதை அடைவதில் எந்தச் சிரமமும் கஷ்டமும் பட வேண்டிய அவசியம் இருக்காது.. எப்படிஎன்றால் நமது இயலாமை எதிலும் அலட்சியப் போக்கு, சோம்பேறித்தனம், தாழ்வு மனப்பான்மை எதையும் எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத்தனம் இவைகளே பிறர் நம்மை பார்த்து ஏலனமாக பார்க்கும்படியும் சிரிக்கும்படியும் ஆக்கிவிடுகிறது.

பிறர் நம்மைப் பார்த்து கேலியாக சிரிக்கும்படியான வாழ்க்கை மிகக் கீழ்த்தரமான வாழ்க்கையாகும்.தமது தன்மானத்தை தலைகுனியச் செய்யும் வாழ்க்கையாகும். நம்மை ஒரு அற்பமாக நினைக்கும்படியும் சமுதாயத்தார் மத்தியில் அங்கீகாரமில்லாதவர் போல பார்க்கும்படியும் ஆகிவிடுகிறது. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் மனிதப் பிறவி எடுத்ததற்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுகிறார்கள்..

எனவே நமது ஆரம்ப காலங்களை அலட்சியப் போக்கால் ஏதும் அறியாதவர்களாய் இருந்து உலகநடப்புக்கள் தெரியாமலும் பொது அறிவு இல்லாமலும் ஊர் தூற்றும்படி நடந்து கொள்ளாமல் பிறர் கேலிக்கும் பேச்சுக்கும் இடமளித்து இழிவுச்சொல்லுக்கு ஆளாகிவிடாமல் பலகீனமானவர்களாக இல்லாமல் புத்தியை பயன்படுத்தி தமது கடின உழைப்பிலும் நேர்மையான நடவடிக்கையிலும் முன்னேறி அறிவார்ந்த செயல்களும் சாதனைகளும் செய்து சமூகத்தாருடன் சுமூக உடன்பாடுடன் பழகி தனது வாழ்க்கையை தரத்துடன் அமைத்துக் கொண்டு எப்பொழுதும் நாம் சிரித்து வாழ்வதற்க்கான வழிமுறைகளை அமைத்துக் கொண்டு சந்தோசமாக கூடிச்சிரித்து மகிழ்வுடன் வாழ முயற்ச்சிப்போமாக...!!!

அதிரை மெய்சா
http://adiraimysha.blogspot.in

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails