Friday, April 10, 2015

என்னமாய் ஒரு கனிவான உபசரிப்பு அந்த மனிதருக்கு ...

ஒன்றரை வருடங்களாயிற்று ...நாகூர் ஹனிபா மாமாவை பார்க்க என்று இருவரும் சென்றிருந்தோம் .காதில் விழாத காரணத்தினால் பேப்பரில் எழுதிக்காண்பிக்கச் சொன்னார்கள் .படித்துவிட்டு ஹாருன் அவர்களை தன் கரங்களால் வளைத்து அணைத்துக்கொண்டார் .

பக்கரண்ணன் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் .1978-ல் வடகரை எம் .எம் .பக்கர் .எம் எல் சி மறைந்த நாளை மறக்காமல் நினைவு கூர்ந்தார் .தான் இரவு லேட்டாக வீட்டுக்கு வந்ததாகவும் ..தன் மகள் மும்தாஜ் ஓடிவந்து ..'வாப்பா ...பெரிய வாப்பா நம்மையெல்லாம் விட்டு விட்டு சென்று விட்டார்கள் ...'என்று கதறி அழுததாகவும் ...உடனே தாமதிக்காமல் தான் வடகரை கிளம்பி வந்து விட்டதாகவும் ...எந்த சம்பவத்தையும் மறக்காமல் ..பேச்சில் தங்கு தடையில்லாமல் ...கம்பீரமான குரலில் பேசி எங்களை கலங்கடித்தார் .
என்னால் அவர் எதிரில் உட்கார முடியவில்லை .மனசில் என்னமோ கலக்கம் .எங்கள் சிதம்பரம் வீட்டிற்கு தா.காசிம் அவர்கள் ,நாகூர் ஈ.எம்.ஹனிபா அவர்களையெல்லாம் அழைத்து வந்து பக்கர் மாமா விருந்துண்ணும் காட்சிகளெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து போயின .நான் ரொம்பவும் சின்னப்பெண் அப்போது .மாமா என்னை அவர்கள் முன் பாடச்சொல்வார்கள் .எனக்கு பயத்தில் தொண்டை வற்றும் .ஆனாலும் சில வரிகள் பாடுவேன் .என் தலைகோதி அணைத்துக்கொள்வார்கள் .அந்தக் காலமெல்லாம் திரும்ப வராதுதானே !...

தி .மு க .பீரியடில்தான் ஹனிபா மாமாவுக்கும் ,பக்கர் மாமாவுக்கும் எம் .எல் .சி பதவி அளிக்கப்பட்டது .1973-1978..என்று நினைக்கிறேன் .

'பக்கர் அண்ணன் ..எங்களுக்கெல்லாம் அண்ணன் மட்டுமல்ல .அரசியல் ஆசான் ...!..'என்று நா தழு தழுத்தார் .

எங்களுக்கு தெரியாத எங்கள் பரம்பரை ...மனிதர்களை ...ஹாருன் அவர்களின் சிறிய தந்தைமார்களை நினைவு படுத்திப் பேசினார் .பக்கர் மாமாவின் பூர்விக வீட்டைப்பற்றி பேசினார் .எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது .உங்களுக்கு ஒரு தம்பி இருப்பாரே ..என்று அவர் பற்றிக்கேட்டார் .

எம் எல் ஏ ..ஹாஸ்டலில் அடுத்தடுத்த அறைகளில் இரண்டு மாமாக்களும் இருந்தனர் .அவர்களின் உறவு கேலியும் ,கிண்டலுமான நெருக்கமான உறவாக இருந்தது .சின்ன வயதில் சென்னைக்கு முதன் முதலாக நான் எங்கள் வீட்டினருடன் சென்றிருந்த பொழுது ஒருநாள் முழுக்க அவர்களுடன் எம் .எல் .ஏ ஹாஸ்டலில் ...தங்கியிருந்து ...முதன் முதலில் 'லஸ்ஸி 'குடித்துக் குமட்டியதும் நினைவுக்கு வருகிறது .தயிரில் சீனி போட்டு அதுவரை அப்படியொரு பானம் நான் குடித்ததில்லை .

'தங்கிவிட்டு போகலாமே !....சாப்பிடலாமே !...'என்று என்னமாய் ஒரு கனிவான உபசரிப்பு அந்த மனிதருக்கு ...

ஹாருன் கையைப்பிடித்துக் கொண்டு 'ஒரு போட்டோ எடுத்துக்கலாமே !..'என்றார் நாங்கள் கேமரா கொண்டு போகவில்லை .இவர் தன் மொபைல் போனை டிரைவரிடம் கொடுத்து போட்டோ எடுக்கச்சொன்னார் .

இப்போதும் அதைதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் .மனசு வராமல் அன்று அவரைப் பிரிந்து வந்தோம் .

இன்றும்தான் !....

J Banu Haroon

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails