Monday, March 23, 2015

தி. ஜானகிராமன் எழுத்தில் - வேதாந்த சாயபு...


மனுதர்மம் இரண்டாயிர வருஷப் பழசாகி, பிராமணர்கள் பலர் அதை மேற்கோள் காட்டவும் வெட்கப்பட்டு, பரண்மேல் ஏற்றிய காலம்தான்.... இந்த வேதாந்த சாயபு என்கிற தலித்தின் காலம்.

என்றாலும், சில மனுதர்மவாதிகள் பழைய ஆக்ரோஷத்தோடு அன்றைக்கும் இன்றைக்கும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள தவறவில்லை.

மடங்கள் அமைத்து, 'மதத்தை காபந்து செய்கிறேன்' பேர்வழியாக மனுதர்மத்திற்கு முட்டு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்!.
இங்கே பேசப்படுகிற வேதாந்த சாயபு என்கிற நம்ம தலித், அன்றைய கால கட்டத்தில் சமூகத்தால் தீண்டதகாதவராக, ஒடுக்கப்பட்டவராக நடத்தப்பட்டாலும் அவரது அறிவும், அதன் தகிப்பும் வஞ்சனையில்லாமல் அவரிடம் கிளைத்தது.

சுயசிந்தனையும், தன் முனைப்பாலும், பிறப்பை முன்வைத்து தனக்கு நிகழும் அவலத்திற்கு விடை தேடியவராக, ஒரு கட்டத்தில் அவர் இஸ்லாத்திற்கு மதம் மாறுகிறார்.

அப்படி அவர் மாறியநொடியில், பிறப்பால் படிந்த அத்தனை கசடுகளும் பொலபொலவென உதிர்ந்து விடுகிறது. இப்பொழுது அவர் எந்த அக்ரஹாரத்திற்குள்ளும் போகலாம் வரலாம். யாரும் ஏன் என்று கேட்க முடியாது.

இப்பொழுது அவர் தீண்டதகாதவர் இல்லை! அவர் இஸ்லாம்! இஸ்லாம் ஆனவர்!

தலித்திலிருந்து இஸ்லாமானப்பொழுதின், அந்த மந்திர கணத்தின் வியப்பு வேதாந்த சாயபுக்கு எப்பவும் உண்டு! அதன் வெளிப்பாட்டு மொழிதான் அவரின் வேதாந்தாந்தம்!

இன்றைக்கு அவர் வேதாந்தம் பேசுபவராக, வெற்றிலை விற்பவராக பிராமணர்களோடு சகஜம் பாராட்டுகிறார்! அவர்களும் இவரிடம் தீண்டாமை பாராது வெற்றிலை வாங்குகிறார்கள். அவரது வேதாந்தக் கருத்துகளுக்கும் காது கொடுக்கிறார்கள்! அந்தக் கருத்துக்கள் தங்களை மறைமுகமாக இடித்துரைக்கிறது என்றாலும்!

அந்த வேதாந்தி காலத்தை மிகசுலபமாக, லாகுவாக மாற்றிக் காட்டிவிட்டதையும், அதற்கு உயர்ஜாதிக்காரர்கள் இணங்கவேண்டி வந்த நிர்பந்தத்தையும், தி.ஜா. தனது அடியோட்டமான மொழியில் கிண்டலும் கேலியுமாக அந்தக் கட்டுரையைப் பின்ணியிருந்தார்.

ஒரு வகையில் எங்களது மூதாதையர்களின் பாடும் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை அவரது இந்தப்பதிவின் வழியே உணரமுடிந்தது! ஏனென்றால், நாங்களும் 'இஸ்லாம் ஆனவர்கள்' தானே!

*
தி.ஜானகிராமனின் வேந்த சாயபு - வை முன்வைத்து
நான் எழுதிய கட்டுரையில் இருந்து....

 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails