Friday, March 6, 2015

பசுவதைப் பற்றி - துக்ளக் சோவின் கேலியும் சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமதின் ஞானமும்

சோவின் துக்ளக் இதழ் தொடங்கிய காலக்கட்டத்தில்
தமிழகத்தின் பிரபலமான அரசியல் புள்ளிகள் பலரிடம்
சோ நேர்காணல் நடத்தினார்.

பிராமணர்களுக்கும்
பிராமணர் அல்லாதோருக்குமான
மறைமுக யுத்தம்
நடந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது..

சோ வக்கீலுக்குப் படித்தவர்.
தொழில் முறையில் அவர் படித்த
திறமை / தர்க்கம் மொத்ததையும்
பத்திரிகை வழியே பிராமண அல்லாதோரின்
சமூக சிந்தனையையும்
அவர்களது அரசியலையும்
மிகத் துணிவாகவே கிண்டலடித்து
பந்தாடவே பயன்படுத்தினார்.

குறிப்பாய்
அவரது அந்த நேர்காணல்
அதற்கு ஓர் சான்று.
அது அவரது புகழை கூட்டிய சங்கதியும் கூட.

கம்யூனிஸ்ட்...
இடது / வலது தலைவர்கள் முதலாக
திராவிடக் கட்சியின் செயலாளராக இருந்த
ஆசிரியர் வீரமணி வரை
அந்த நேர்காணலில்
சோவின் தர்க்க ரீதியான கேள்விகளில் இருந்து
வென்று மீண்டுவர முடியவில்லை.

// அந்த வரிசையில்...
முஸ்லிம் லீக தலைவரான
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்களையும்
சோ நேர்காணல் நடத்தினார்.
அந்த நேர்காணல் துக்ளக் இதழிலும் வந்தது.
பிற தலைவர்களை மிகச் சுலபமாக
தன் வாதத் திறமையால் / தர்க்கத்தால்
உருட்டிவிட்ட மாதிரி
அப்துல் சமதிடம் நடக்கவில்லை!

பேட்டி நடந்தக் காலக் கட்டத்தில்
பசுவதையை எதிர்த்து
ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.
(இப்போது அதனை
அவர்கள் மறந்து போனார்கள் என்பது வேறுகதை)

பசுவதையொட்டிய ஒரு கேள்வியாக
துக்ளக் சோ, அப்துல் சமதிடம் கேட்டார்:

"முஸ்லிம்கள் ஏன் பசு மாமிசத்தை சாப்பிடுகிறார்கள்?"

"பசு மாமிசத்தை...
முஸ்லிம் அல்லாதோர்களும்தான் சாப்பிடுகிறார்கள்.
சொல்லப் போனால் பொதுவில்
முஸ்லிம்கள் விரும்பி சாப்பிடுவது குறைவு.
வட இந்தியாவில் சில இடங்களில்
ஏழைகள் சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்"

"அப்போ விலை குறைவு என்பதற்காக
முஸ்லிம்கள் எது வேன்டுமானாலும் சாப்பிடுவார்களா?"

"மிஸ்டர் சோ, விலை மலிவு என்பதற்காக
உங்கள் மதத்தில் உங்கள் மக்கள்
எதுவேன்டுமாலும் சாப்பிடுவார்களோ... என்று
எனக்கு தெரியாது.
ஆனால்,
எங்கள் மதத்தில்
நாங்கள் எதையெல்லாம் சாப்பிடலாம்..
எதனையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று
மதக் கட்டளையே இருக்கிறது!
அதனை நீங்கள் அறியவர மாட்டீர்கள்.
அதனால்தான் இப்படி கேட்டுவிட்டீர்கள்!"

தொடர்ந்து...
சோவால் 'பசு மாமிசம்' குறித்து
கேள்வியை தொடரமுடியவில்லை.

- அந்த நேர்காணலில் சோவின்
வாதத்திறமையையும் / லாஜிக் திறமையையும்
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்கள்
இப்படி உடைத்தெறிந்ததை
என்னால் இன்னும் மறக்க முடியவில்லை!

// நான் அறிந்து சோவை இப்படி மடக்கிய
இன்னொருவரை
இன்றுவரை இன்னும் நான் கண்டதில்லை.

*




புகைப்படம் - காயிதே மில்லத்தும் அப்துல் சமத் சாகிப்பும்
*******************
R,S.S. இப்போது மீண்டும் பசுவதைப் பற்றி பேச
மத்திய அரசு அதற்கோர் சட்டமும் இயற்றி இருக்கிறது.
அதனை மனதில் கொண்டே
இந்த என் பழையப் பதிவை மீள்பிரசுரம் செய்திருக்கிறேன்.

- தாஜ் Taj Deen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails