Monday, October 20, 2014

கேள்வியின் நாயகன்....

நாகூர் ,கவிஞர் இசட்.ஜபருல்லா
அண்ணன்அவர்கள், என் மீதும் என் குடும்பத்தின் மீதும் குறிப்பாக என் வாப்பாவின் மீதும் மாறாத அன்பும் பாசமும் கொண்டவர்கள்.
“ஜபருல்லா பிறந்த செய்தியை நான் தான் கொழும்பில் இருந்த அவரது தந்தை நண்பர் ஜக்கரியாவிடம் சொன்னேன்” என்பார் இசை முரசு நாகூர் ஹனீபா.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று,பீ.ஜி.எல்.வரை போய்,என்ன காரணத்தினாலோ சட்டம் முடிக்காமல் இருந்துவிட்டார்.

அவர் எழுதிய கவிதைகள், அதுவும் சாட்டியடிக் கவிதைகள் அமிழ்தையும் கொடுத்து,அமிலத்தையும் காட்டி,நக்கல் நையாண்டி பெருக்கெடுத்தோடும்.வகையில் இருக்கும்.
அவர் தனி ரகம்.தனி ராகம்.அவரது பாடல்கள் தமிழகம் முழுதும் அறிமுகமானவை.
அதில் "அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்", உவமை சொல்லமுடியாதது.
"இறைவா", எனத் தலைப்பிட்டு அவர் எழுதியவை, அவரது கவிதைகளின் தலைப்பா வாக இன்றும் வாழ்த்தப்படுகிறது.

மிகச்சிறந்த சிந்தனையாளர்.திருமறையின் வசனங்களுக்கு அவர் தருகிற விளக்கம் ஆழ்ந்து வியக்க வைக்கும்.சாதாரண வார்த்தைகளால் உரையாடும் அவரின் உதாரணங்கள் அரிதான சிந்தனைகளைத் தூண்டும்.

சமுதாயச்சாடல்கள் பேச்சில் நிறைய வந்து கொண்டே இருக்கும். சமூக அவலங்களைச் சொல்லிக்காட்டி  வெளிப்படுத்கிக்கொண்டே இருப்பார்.

அடிக்கடி திருநெல்வேலி, மேலப்பாளையம்  வந்து கொண்டே இருந்த ஜபருல்லா அண்ணன், சமீபத்தில் அதிகமாக வரமாட்டேன் என்கிறார்..கேட்டால் "வருவங்க" என்கிறார்.

ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு முடித்துவிட்டு அவர் பேசிக்கொண்டிருந்தார்."தம்பி,கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் தாங்களேன்" "பிரிட்ஜ் தண்ணீரா இருந்தாலும் பரவாயில்லை".என்றார்.

தண்ணீர் வந்தது.அதை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றிக்கொடுத்தேன்.வாயில் வைத்துக் குடிக்கப்போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தால் அதை முகர்ந்து பாத்தார்.

"என்னண்ணே தண்ணியை மோந்து பாத்துக்கிட்டு? வாடை கீடை  வரல்லியே?"அவர்முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
தண்ணியில மீன் வாடைஏதும்அடிக்குதோன்னு கொஞ்சம் சந்தேகம்.
"நாகூர்காரருக்கு மீன் என்ன பிடிக்காமலா போய்விடும்?" என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
“தம்பி இந்த தண்ணீ பிரிட்ஜில் இருந்து எடுத்தது தானே?”.......
“என்னண்ணே, என்ன சந்தேகம்? மோந்து பாக்கியோ?”........
“முந்தியெல்லாம் மீந்து போன உணவுச்சாமாங்களை அக்கம் பக்கத்து மக்களுக்கு கொடுப்பார்கள்.இப்போ அப்படியில்லியே .அதை யார் தடுத்தாங்க?சொல்லுங்க பாப்போம்”.........
நான் கவிஞர் என்ன சொல்ல வாராரோன்னு யோசிச்சிக் கொண்டிருந்தேன்.
“இந்த பிரிட்ஜ்ங்கறது வீட்டுக்கு வீடு வந்ததுல, எல்லா மக்களுக்கும் தனக்கு போக மீந்து போன சாப்பாட்டை, கறிவகைகளை மத்தவங்களுக்கு கொடுக்கனும்ன்னு இருந்த நினைப்பு மறந்து போச்சே கவனிச்சீங்களா?”
“என்னண்ணே இத வேற புதுசா கண்டுபுடிச்சிருக்கீங்க?”
“ஆமா தம்பி........ஒரு பிரிஜ் உள்ளே பாத்தீங்கன்னா போன வாரத்துல சமச்ச மீன் குழம்பு,,அஞ்சு நாளைக்கு முன்னால வச்ச பொரிச்ச கறி.இட்லிக்கு தொட்டுக்க வாங்கின சாம்பார் சட்னி,என்னைக்கோ வச்ச மல்லிக்கீரை புதுனா,வெளியே வச்சிருந்தா எப்போவோ குஞ்சா வந்திருக்கவேண்டிய கோழி முட்டைகள்,புள்ளைகளுக்கோ,பொன்ஜாதிக்கோ வாங்கி பத்திரப்படுத்தி வச்ச மல்லிப்பூ,பிச்சிப்பூ.இதையும் தாண்டி ஆரஞ்சு.ஆப்பிள் பழங்கள் வேறு.”
“சரிண்ணே, இதெல்லாம் என்னத்துக்கு சொல்ல வாறிய?........

“ கோடை வெயில்ல அலைஞ்சு, திரிஞ்சு வந்ததுக்குப் பிறகுரொம்ப ஆசைப்பட்டு, குளிர்ந்த தண்ணி தாங்களேன்னு சில இடங்கள்லே கேட்டு வாங்கி குடிக்கப்போனா, முன்னால நான் சொன்ன அத்தனை வாசமும் ஒன்னு சேர்ந்து தண்ணியிலே வந்து குமட்டிடுது.குளிர்ந்த தண்ணி குடிக்கிற ஆசையை போக்கிடுது.”அதுக்கு தான் உங்க வீட்டு பிரிட்ஜ் தண்ணியும் அப்படியான்னு பாத்தேன்......படு சுத்தமா இருக்கு.”
“பிரிட்ஜ் தண்ணீல இம்புட்டு கதை இருக்கா?”ன்னு என் பக்கத்தில் இருந்த சிந்தா புகாரி மாமா கேட்டுக்கொண்டார்.
அண்ணன் சொன்னது என்னை வியக்க வைத்தது.
அண்ணன் வழக்கமா என்னை குடும்ப இனிசியலை சொல்லித்தான் அழைப்பார்.என்ன எல்.கே.எஸ்.சரிதானா?
இன்னொன்னை கவனிச்சீங்களா?
“மேலப்பாளையம் கடையநல்லூர்,தென்காசி.நாகூர் மாதிரி அடுக்குத்தொடரா வீடுங்க உள்ள ஊர்ல எந்த வீட்டிலாவது நல்லது பொல்லாது நடந்தா அங்கே வந்தவர்கள் வீட்டுக்கு வெளியே பந்தலில் நாக்காலி போட்டு உட்காருராங்களே ஏன்னு கவனிச்சீங்களா?
“ஆமாண்ணே”சொல்லுங்கண்ணே..."
“வீடுகளெல்லாம் நாகரீகமா காங்க்ரீட்டோடு கட்டுனதுல, ஒன்ன மறந்துட்டாங்க........"
"சொல்லுங்க"
"அதுதாங்க....... திண்ணை.வச்சு வீட்ட கட்டுறது"..
"இந்த திண்ணைகளில் ரா வேளைகளில் ஊர் அடங்குனதுக்கு பொறகு பெண்டு பிள்ளைகள் மறைவா இருந்து ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக்கு வாங்க.இப்போ வீடுகளுக்கு திண்ணை வச்சுக் கட்டுறதுமில்லை,அங்க உக்காந்து பெண்மக்கள் பேசுரதுமில்லை.அவர்கள் மன பாரங்களை யாரிடம் இறக்கி வைப்பார்கள்? உற்ற தோழிகளிடம் தானே? அதற்கும்.இப்போ வாய்ப்பில்லையே".......
பெரிய நஷ்ட்டம் என்னான்னா........ எங்கேயாவது ஒரு வீட்டுல ஒரு மவுத் வந்துட்டா கொளுத்துகிற வெயில்கஷ்ட்டதுல பக்கத்துல எங்கேயும் போய் உட்கார முடியல்லே. போட்டிருக்கிற பந்தல்லே எத்தனை பேர்கள் தான் உட்ட்காருவது?”
"முந்தியெல்லாம் பக்கத்துக்கு வீட்டுத் திண்ணைகளில் மற்றவர்கள் உக்கார,பாய் விரிச்சு வைப்பாங்க.இப்போ அதுவும் போயிடுச்சு.பலர் பக்கத்துக்கு வீடுகளை பூட்டி வச்சிருக்காங்களே? "
"மனித மனங்கள் குறுகி விட்டதா நினைக்காதீங்க அண்ணே "..........
"பின்ன என்னங்க, இருக்கிற பழைய வீடுகளினுடைய திண்ணைகளில் எல்லாம் இப்போ க்ரில் போடுகிற பழக்கம் வந்துட்டதே.".....
"சரி அது ஒரு வகை பாதுகாப்புக்குத்தாங்களே”"............
"இல்லையில்லை, யாரும் இங்க வராதீங்க உட்ட்காராதீங்க,இந்தத் திண்ணை எங்க வசதிக்கு மட்டும் தான்னு யாரும் இன்னும் அறிவிப்புச் செய்யல்லே........இல்லையா.".................
"பள்ளிவாசல்களில் கட்டில்கள் மொவ்த்தாப் போன வீட்டுக்கு கொடுக்காங்களே அது என் தெரியுமா?".......
"சந்தூக் மட்டும் மட்டும் தான் பல ஊர்களின் பள்ளிவாசல்களிலே இருக்கும்.....
ஒரு காலத்திலே யார் வீட்டிலாவது ‘மையத்’ விழுந்து விட்டால் அக்கம் பக்கம் வீடுகள்ளே இருந்து கட்டில் கொடுப்பார்கள்.அதை எடுப்பார்கள்.இப்போ யார் அப்படி வச்சிருக்காங்க?உங்களுக்கு கட்டிலைத்தந்தா மெத்தையை நாங்க என்ன செய்ய?கட்டிலையும் மெத்தையையும் பிரிக்கலாமா?அப்படீன்னு புது பார்முலா சொல்லுறாங்க "
அதனால தான் எதுக்கு இந்த பொல்லாப்பு.ஊருக்கு ஊர் பள்ளிவாசல்களிலேயே கட்டில்களை வச்சிருக்காங்க தெரிகிறதா?".....
"சொல்லுங்கண்ணே......"
கவிஞரின் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தேட வேண்டும் நிலையில் நாம் உள்ளோம்.
 

எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகைதீன்
மேலப்பாளையம், திருநெல்வெலி
நன்றி http://nagoori.wordpress.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails