Saturday, July 5, 2014

மறுமையை மறக்கலாகுமா?


அவ்வப்போது உனையழைக்கும்

அலைபேசியின் அழைப்பிற்குத்

தவறாது பதிலளிக்கும் நீ

படைத்தோனின் பள்ளியிலிருந்து

படைத்தோனைத் தொழுதிடவே

பாங்கோசையின் அழைப்பிற்குப்

பதிலளிப்பதில்லையே?


ஏதேதோ பாடங்களை

ஏகமனதோடு

ஏற்றம்பெறக் கற்றிடவே

ஆற்றலுண்டு, நேரமுண்டு

அல்லாஹ்வின் வேதத்தை

அனுதினமும் கற்றிடவே

துளியளவும் நேரமில்லையே?



ஆங்கிலத்தைக் கற்றிடவே

ஆங்குனக்கு நேரமுண்டு

அருள்மறையின் மொழியான

அரபிமொழி கற்றிடவே

ஆங்கொரு நேரமில்லையே?


செல்லுமிடமெங்கும்

செல்பேசியைத் தூக்கிக்கொண்டு

செல்கின்ற நீ

செல்வமென வழங்கப்பெற்ற

செவ்விய வேதமான

திருக்குர் ஆனைச் சுமக்க மறந்ததேன்?


யார் யாரோ இட்ட பதிவுகளை

ஆர்வமுடன் படித்திடவே

முகநூலைத் திறக்கின்ற நீ

பாருலகை ஆளுகின்ற

படைப்பாளனிடமிருந்து

கிடைத்திட்ட

பார்போற்றும் வேதத்தைப்

பார்வையிட மறுப்பதேன்?

எதைஎதையோ வலைதளத்தில்

பதைபதைப்போடு

படிக்கின்ற நீ

ஷரீஅத் சட்டங்களை

வாசிக்க நேரம்

ஒதுக்காததேன்?


பொய்யோ மெய்யோவென

பொழுதுக்கும் வருகின்ற

போக்கற்ற செய்திகளைப்

படித்துத் தெரிந்துகொள்ள

துடிப்பாக உள்ள நீ

பொய்யாமொழியுரைத்த

செந்நாப்போதகரான

அண்ணல் நபியின்

கன்னல் மொழிகளை

வாசித்துப் பார்க்க

யோசித்துப் பார்த்ததுண்டா?


அழியப்போகும் உலகினில்

அழியாப் பொருள்தேட

முனையாமல் நீயும்

அழியும் பொருள்தேட

அயராது பாடுபடலாகுமா?


காலமே கருதி

கடமையைச் செய்யாமல்

மடமையில் வீழலாகுமா?

மறுமையை மறக்கலாகுமா?

-பாகவியார்          
நன்றி : இனிய திசைகள் – ஜுன் 2014
கவிதையை அனுப்பித் தந்தவர் முதுவை ஹிதாயத் அவர்கள்
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails