Thursday, June 12, 2014

17 வயது மாணவர் பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு


சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் 17 வயதில் எம்.சி.ஏ. முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அறிவாற்றல் மிக்க இளம் மேதாவி மாணவர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீண், பி.முஹம்மது ஸுஹைலிடம் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை புதன்கிழமை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அறிவாற்றல் மிக்க மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் தனித்திறன் மிக்க மாணவராகத் திகழ்கிறார். இவரைப் போன்று இளம் வயதில் பன்முகத்திறன் மிக்க அறிவாற்றல் நிறைந்த மாணவர்கள் உரிய அறிமுகம், அடையாளம், மதிப்பு கிடைக்காமல் உள்ளனர்.

மாணவர் பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு பயிலும்போது அவர் கல்விக் கட்டணம் இல்லாமல், உணவு, தங்குமிடம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட வசதிகளும் இலவசமாகப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் பேசும்போது, கோயம்புத்தூர் கார்மல் கார்டன் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தபோது மேஸ்நெட் நிறுவனத்தில் பகுதி நேர கம்ப்யூட்டர் படிப்பில் சேர்ந்து படித்தேன். 8வது படிக்கும்போதே 15 வகை கம்ப்யூட்டர் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளை நிறைவு செய்து விட்டேன். பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்விப் படிப்பு எம்.சி.ஏ. பயில விண்ணப்பித்தேன். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவினர் 20 பேர் கொண்ட குழுவினர் என் திறமையை நேர்காணலின் போது பரிசோதனை செய்து, என் திறமையின் அடிப்படையில் எம்.சி.ஏ. படிக்க அனுமதித்தனர். தற்போது எம்.சி.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேறி 78.5 மதிப்பெண் பெற்றுள்ளேன்.
தற்போது எனது உறவினர் தாத்தா ராயப்பேட்டை புதுக்கல்லூரி பேராசிரியர் காஜா முஹைதீன் வழிகாட்டுதலுடன் இங்கு எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள சேர்ந்துள்ளேன். எனக்கு இங்கு உயர்கல்வி பயில அளிக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளுக்காகவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இணையதள முடக்கம், சைபர் கிரைம் தொடர்பான கணினி தொழில்நுட்பத்துறையில் எனது ஆய்வுப் படிப்பை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
இவர் தன்னுடைய 14வது வயதிலேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார். 9ம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பல்கலைக்கழகம்  இவருக்காக வயது வரம்பை தளர்த்தியது குறிப்பிடதக்கது.

 நன்றி http://mudukulathur.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails