Monday, February 24, 2014

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.

சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.

இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.

“விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்”
என்கிற நபிமொழி (நூல்: அபூதாவூத்) பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.

மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.

தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். “எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.

ஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்” என்று மொழிந்தார்கள். தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே?” என்று கேட்க, நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்) வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே, அவர்கள்தாம்” என்று கூறினார்கள் (நூல்: அத்-தப்ரானி).

யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.

நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும்,  வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து  ஷைத்தான் கொண்ட பொறாமை!

இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.

இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.

“மேலும், அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் மேன்மை அளித்துள்ளான் ...”
(16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.

அதுமட்டுமின்றி இறைமறை, வேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு, வேறு சிலரைவிட, உயர்பதவிகளை அளித்தோம்; இவர்களில், சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ...”(43:32) என்றும் குறிப்பிடுகிறது.

“இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது” என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]

“... உங்களில், இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர், இறையச்சமுடையவரே ...” என்கிறது இறைமறை (49:13).

மேலும் “... மறுமையோ, இறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும் கூறுகிறது.

இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.

மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.

தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து “இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்” என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.

இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.

சுருங்கக் கூறின்,

    ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.
    பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.
    இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.
    ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.
    தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.
    உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்
    மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.
    தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.
    பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக!


ஆக்கம்: இப்னு ஹம்துன்

 நன்றி Source : http://www.satyamargam.com/

1 comment:

Kollapuram.com said...

போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த காலகட்டதில் அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails