Monday, February 10, 2014

வா ராஜா வா


நம்மில் சிலர் இஸ்லாத்தில் சேரும் நண்பர்களை " இஸ்லாத்திற்கு இவர்கள் வருவதால் இஸ்லாத்திற்கு எந்த ஆதாயமும் இல்லை " என்று பெரிய மேதாவித்தனத்தொடு சொல்வது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. நாம் நினைத்து ஒரு ஆளைக்கூட முஸ்லிமாக்க முடியாது... அல்லாஹ் நினைத்தாலே தவிர. இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் அபு ஜஹலுக்கோ உமருக்கோ ஹிதாயத்தை வழங்கும்படி அண்ணல நபிகள் அல்லாஹ்விடம்தான் முறையிட்டார்கள். அல்லாஹ் உமருக்கு ஹிதாயத்தைக் கொடுத்தான்.

அன்றைய கால கட்டத்தில் உமர் ( ரலி ) ஹம்சா ( ரலி ) ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தது இஸ்லாத்திற்கு வலு சேர்த்தது.
அதன்பின் காலித் பின் வலீதின் வருகை. பல அரசர்களின் மனமாற்றம் எல்லாமே உலக அளவில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

பல நாட்டு அரசர்களுக்கும் இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்துக்கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அண்ணல் நபிகள் ( ஸல் ) அவர்கள் கடிதம் அனுப்பினார்கள்.அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷி அதை மதித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் அந்த நாடு இஸ்லாமியமானது.

அமெரிக்காவில் முகமதலி, மால்கம் எக்ஸ் ஆகியோரின் இஸ்லாமியத் தழுவல் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ஏராளமான மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்துள்ளது.

டாக்டர் அம்பேத்கார் முதலில் இஸ்லாத்தில் இணைவதற்குத்தான்
அபிப்பிராயம் கொண்டிருந்தார். ஆனால் சில பல அரசியல் காரணங்களால் அவர் வேறு இடத்திற்கு போக வேண்டியதாகி விட்டது.
இன்றும் நாம் , " அன்று மட்டும் அம்பேத்கார் இஸ்லாத்தில் இணைந்திருந்தால் ... " என்று புலம்புவதுண்டு.

சமூக நீதிக்காகப் போராடிய பெரியார்கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாத்தைத்தான் பரிந்துரை செய்தார் .

இஸ்லாத்தைப் பற்றி மேடைகளில் அழகாகப் பேசிய அண்ணாவுக்கும்
வலம்புரி ஜானுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் இஸ்லாத்தை ஏற்கும்படி
அழைப்பு விட்டவர்கள் முஸ்லிம்கள்தான்.

முரசொலி அடியாரும் அப்துல்லா தாசனும் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னரே " நீயும் புறப்படு இஸ்லாத்தை நோக்கி " என்று அறைகூவல் விடுத்து ( அவர் எழுதிய நூலின் பெயர் ) இஸ்லாத்தில்
சேர்ந்தவர் கொடிக்கால் செல்லப்பா என்ற ஷேக் அப்துல்லாஹ்.

ஒரு தனி நபரின் மனமாற்றம் ஒரு சமுதாயத்திற்கே மாற்றத்தைத் தரக்கூடும். அதனால் இஸ்லாத்தில் யார் இணைந்தாலும் அதை வரவேற்போம் ...மோடியாகவே இருந்தாலும்.

இப்போது இசை மேதை இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா
இஸ்லாத்தை தனது மார்க்கமாக தேர்ந்தெடுத்து அதில் தன்னை
இணைத்துள்ளார். அதற்கான " ஹிதாயத்தை " அல்லாஹ் அவருக்கு வழங்கி இருக்கிறான். யுவன் ஒரு இசை பிரபலம். ஒரு பிரபலமான மனிதர், அதுவும் " காவி அலை வீசுகிறது... மோடி மழை பொழிகிறது ..." என்று ஊடகங்கள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் பச்சை பொன்னாடையைப் போர்த்திக் கொண்டிருக்கிறார் என்றால் அது
சாதாரணச் செய்தியல்ல.

அதைக்கூட மகிழ்ச்சியான செய்தியாக ஏற்றுக் கொள்ள நம்மில் சிலருக்கு மனம் வரவில்லை. அவர் இஸ்லாத்தில் சேர்ந்தததால்
இஸ்லாத்திற்கு ஆதாயம் ஒன்றுமில்லை. அவருக்குத்தான் ஆதாயம் என்று அவரைக் கொச்சைப் படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இதைப்போன்றுதான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டபோதும் , அவர் ஏற்றுக் கொண்ட வழியை குற்றம் சொல்லி
இன்றுவரை அவரை தர்கா முஸ்லிம் என்று சொல்லி இகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வருவது எல்லாம் தங்கள் வழி வரவேண்டும் என்பதே அவர்களின்
எதிர்பார்ப்பு. அப்படி வந்தால் ஜே போடுவார்கள். தானாக வந்தால்
அவனுக்குத் துதி பாடாதே என்று கோசம் போடுவார்கள்.

யார் யார் இதை எப்படி எடுத்துக் கொண்டாலும் ....
யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தில் இணைந்ததை நான் உவகையோடு
வரவேற்கிறேன். உங்களால் இந்தத் தமிழ் மண்ணில் இஸ்லாத்திற்கும்
இஸ்லாத்தால் உங்களுக்கும் சிறப்புகள் கிடைக்க எல்லாம் வல்ல
அல்லாஹ் அருள் புரியட்டும் என்று வாழ்த்தி வரவேற்கிறேன் .

Idrees Yacoob பாபர் மஸ்ஜிதை இடிக்க முற்பட்டவர்களில் இருவர்கள் இப்போது நம்மோடுதானே இருக்கிறார்கள். அதனால் யாருக்கு எப்போது எதை நாடுவான் என்பது இறைவனின் இரகசியம், இறையருள். அவ்வாறு மோடிக்கும் நாடட்டுமே!

Abu Haashima Vaver


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails