Friday, September 20, 2013

" வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி "



வெள்ளியை
பெயரிலே வைத்திருந்தாலும்
தங்கமான நாள்
வெள்ளிக் கிழமை !

முந்தைய இரவிலேயே
ஆரம்பமாகி விடுகிறது
ஜும்மா நாளின்
கொண்டாட்டம் !

வழக்கம் போல்
சூரியன்
விழிப்பதற்கு முன்னாலேயே
விழிக்க வைக்கும்
பிலாலின் அழைப்பு
ஒரு பெருநாளின்
தக்பீர் முழக்கம் போல்
மிதந்து வருகிறது !

சுபுஹு தொழுதால்
அன்றைய தினத்தில்
வருவது எல்லாம்
ஆனந்தமே !

பார்க்க முடியாத
முகங்களெல்லாம்
ஜும்மாவில் பிரசன்னம் !

அரேபிய நாட்டு
அத்தர் வாசனையோடு வரும்
வேக்கேசன் சபுராளிகள் !
வயசுப் பிள்ளைகளின்
தோளில் படர்ந்து
தவழ்ந்து வரும்
வயசாளிகள் !
வாப்பாமார் கைபிடித்து
வண்ணத் தொப்பியோடு
முல்லைகளாய் மணம் வீசி வரும்
சின்ன பிள்ளைகள் !

ஆலிம்சாவின் பயானும்
நிசப்தத்தைக் கிழித்து
கணீரென்று
"அல்ஹம்துலில்லாஹ்"
என ஆரம்பமாகும்
குத்பாவும்
பள்ளி நிறைந்து
மக்கள் தொழும்
கண்கொள்ளாக் காட்சியும்
சொல்லும்
" இது வெள்ளிக் கிழமையின்
மாட்சி மாட்சி "என்று !

அத்துடன்
முடிந்து விடாது
இந்த
ஏழைகளின் பெருநாள்...

தொழுது முடிந்து வந்தால்
இல்லத்தரசியின்
கைப்பக்குவத்தில்
நெய் சோறும் கறியும் !
இல்லையென்றால்
பிரியாணி ....

ஆஹா ....
எத்தனை பரக்கத்தை
இந்த நாளுக்குள் வைத்திருக்கிறான்
ஏக இறைவன் !

அத்தனை நாளும்
ஜும்மா நாளாக இருந்தால்
எத்தனை இன்பம் என்று
மனம் எண்ணும் !

நித்தமும் ஐவேளை
தொழுது வந்தால்
அந்த எண்ணமும்
உண்மை ஆகும் !
 அபூஹாஷிமா வாவர்
Abu Haashima Vaver


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails