Monday, April 15, 2013

கண்ணுக்கு தெரியாத நரபலிகள்

சமீபத்தில் சென்னையில் மூன்று வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தித்தாளில் வாசித்தோம். ஒரு குடுகுடுப்பைக்காரனின் பேச்சை கேட்டு ஓர் அப்பாவிப்பெண் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதாக தகவல். மத அடிப்படைவாதம் பெற்ற பிள்ளை மூடநம்பிக்கை. எனவே இச்செயலில் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை.

தினமலரில் வாசித்த இன்னொரு செய்தி.

புதுக்கோட்டையில் வசிப்பவர் ஜாஹீர் உசேன். இவரது ஒரே மகள் நிலோபர்பானு, பதினெட்டு வயது (திமுக பொதுக்குழு உறுப்பினரான அப்துல்லாவின் உறவினர்கள் இவர்கள்). நிலோபர்பானு +2வில் 1100 மதிப்பெண் எடுத்து என்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் செலவு செய்ய ஜாஹீரிடம் பணமில்லை. உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ பணம் கேட்க ஜாஹீருக்கு தயக்கம். எனவே மகளை கலைக்கல்லூரி ஒன்றில் சேர்த்திருக்கிறார். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து வந்தார் பானு.

குடும்பச் செலவுக்காக அருகிலிருந்த ஜெராக்ஸ் கடை ஒன்றில் பகுதிநேரமாக பணியும் செய்து வந்திருக்கிறார் பானு. இதில் கிடைக்கும் சொற்ப வருமானம் மூலமாக தந்தையுடைய நிதிச்சுமையை குறைத்திருக்கிறார். கடையில் பணிபுரியும்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டிருக்கிறது. மின்தடை ஏற்படும் போதெல்லாம் ஜெனரேட்டரை இக்கடையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். போனவாரத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின் தடையின் போது ஜெனரேட்டரை ‘ஆன்’ செய்திருக்கிறார் பானு. இருட்டில் கொஞ்சம் தடுமாறிய அவரது தாவணி ஜெனரேட்டர் மோட்டாரில் சிக்கிக் கொண்டது. இதை எடுக்க முயற்சிக்கும்போது அவரது தலைமுடியும் மோட்டாரில் சிக்கி, ஏடாகூடமாக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். தலையில் பலத்த காயமடைந்த பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.


பானுவின் மரணத்துக்கு நேரடித்தொடர்பு அரசுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் காரணம் அரசுதான் என்பதை மறுக்க முடியுமா? வியாசர்பாடி பெண் அறியாமையால் பக்கத்து வீட்டு குழந்தையை பலி கொடுத்ததற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதா என்ன? தமிழக அரசின் வரலாறு காணாத சாதனையான மின்வெட்டுக்கு நம் கண் முன்னே பலி கொடுக்கப்பட்டிருக்கிறார் படிப்பில் படுசுட்டியான பானு. கண்ணுக்கு தெரியாத நரபலிகள் இன்னும் எத்தனை எத்தனையோ?

எழுதியவர் யுவகிருஷ்ணா

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails