Saturday, January 19, 2013

வெளிநாட்டு உத்தியோகம்

உள்ளக்குமுறலை வார்த்தையால்
வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல்
வருத்தப்பட்ட சமயத்தில்…

எதிர்பாராமல் கண்ணில் பட்ட ஒரு கவிதையின்
உந்துதலில் வந்து கொட்டிய
என் கவிதை இது…!

“வெளிநாட்டு உத்தியோகம்”
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை
இன்று அதையும் பிரியப்பட கற்றுகொண்டேன்.

“வெளிநாட்டு பயணம் ”
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைபடனுமா ?
என்று தத்துவம் பேசிய வசனம் இன்று திரும்பி என்னை நோக்கி…

“விமான நிலையம்”
பலருக்கு பிடிக்காத இடம் அது தான் – வழியனுப்பும்போது
பிடித்த இடமும் அதுதான் – வரவேற்கும்போது.

“இப்ப நீங்க எங்க இருக்கீங்க”
என்று நான் அருகில் இருக்கும்போதே
பலர் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்தது இன்று…

“ஊர் செய்தி என்ன” என்று கேட்கும் வெளிநாட்டு
சொந்தங்களுக்கு பதில் சொன்ன காலம் போய்..
அதே கேள்வியோடு இன்று நான் !

திருமணத்திற்கு முன்பு தாயகம்
திருமணத்திற்கு பின்பு வெளிநாட்டு பயணம்
இது தான் இப்போ LATEST TREND..!

பிடிக்காத ஒன்றை பிடித்தவர்களின்
பிரியமான வார்த்தைக்கு கட்டுப்பட்டு
பிடிக்காமல் ஒத்துக்கொண்டு ஏறிய முதல் விமான பயணம் – ரணம்.

வெளிநாட்டு வேலையா ?
அதெல்லாம் நமக்கு சரிபட்டுவராது என்று அன்று
பேசிய வார்த்தைகள் இன்று சற்று சலிப்போடு சிரிப்பையும் தருகிறது.

எல்லாம் இப்டி தான் சொல்லுவீங்க
நீங்க தான் முதல்ல “வெளிநாடு போவிங்க” என்ற
குத்தல் வார்த்தைகள் இன்று உண்மை ஆன பரிதாபம்.

மனதில் கனத்தோடு முகத்தில் சிரிப்போடு
வாழ்வது எப்படி..! என்ற வித்தையை
கற்றுகொடுத்த வெளிநாட்டு பயணம்..

நம்பிக்கை மேல் இழுக்க
கவலைகள் கீழ் இழுக்க
பள்ளத்தின் அந்தரத்தில் வாழ்க்கை…

வாழ்க்கையின் அர்த்தம் தேடி
புரியாத புதிர்தான் வாழ்க்கை
என்று புரிந்து கொண்ட ஞானம் ..

ஒட்டுமொத்த உறவுகளையும் நினைவுகளாக
இதயத்தில் சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன்
சிறைவாசியாக..!

பொருளீட்டும் கட்டாயத்தில்
தன்மானத்தோடு சேர்த்தே
இழந்துவிட்ட நிம்மதி…!

சலிக்காத நிம்மதியான அந்த
“விடியாத இரவொன்று”.
வேண்டும் எனக்கு மீண்டும்.

நான் மட்டும் தானா இப்படி என்று
வலியோடு திரும்பி பார்க்க…
பெரும்கூட்டம் மனதில் ரணத்தோடு,

முகத்தில் சிரிப்போடு என்னை வரவேற்க..
ஓஹோ companyக்கு இவ்ளோ பேரு இருக்காங்களா !
என்று வேறுவழி இல்லாமல் அமைதியானது மனம்….

செல்போனில் குடும்பம் நடத்தும் திறமை
நம்மவர்களுக்கு கை வந்த கலை..
நம்மவர்களின் வெளிநாட்டு பயணத்தை தியாகம் என்பதா ?

அவர்களின் நிலையை எண்ணி பரிதாபப்படுவதா…?
என்று நான் யோசிக்கும்போது தான்
“அட நாமளும் இந்த வகை தானே ” என்பது நினைவிற்கு வந்தது.

வாழ்வதற்கு பணம் முக்கியமாக இருக்கலாம் ஆனால்
சந்தோசமாக வாழ்வதற்கு பணம் முக்கியமல்ல.
இன்று பலர் வாழ்கிறோம் ஆனால் சந்தோசமாக அல்ல.

சொல்ல நினைத்தது பல ..
சொல்லி முடித்தது சில..

“இப்படிக்கு நான்” என்று என் பெயரை
இறுதியாக போட்டுக்கொள்ள
இது ஒன்றும் தனி மனித குரல் அல்ல..

வெளிநாட்டில் ஆயிரக்கணக்கான என் சகோதரன்
தினந்தோறும் தன் நிலையை எண்ணி
தனிமையில் உருகும் மனக்குரல்..

இன்ஷாஅல்லாஹ் வளரும் தலைமுறையாவது
மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற “துஆ” வோடு.

Thank you My dear Friend.
Source : http://shakir2sha.wordpress.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails