Friday, December 14, 2012

இறைவா! என்னை மன்னிப்பாய்!

ஆளோ அவளோ ஒருசிறுமி
அன்று பார்த்தேன் பயணத்தில்
நீளும் விழிகள் சிரித்திருக்கும்
நீண்ட கூந்தல் தங்கநிறம்
மாலைப் பரிதி போன்றிருக்கும்
மனதைத் தீண்டும் வண்ணமவள்
கோல மயில்போல் மகளெனக்கு
கொடுப்பாய் இறைவா என்றிறைஞ்ச
-
இறங்கிச் செல்ல எழுந்தவளும்
எடுத்தாள் செயற்கைக் கால்களையே
பறங்கிப் பூவைப் போன்றமகள்
பாவம் கால்கள் இல்லாமல்!
கிறங்கிப் போனேன் புலம்பிவிட்டேன்
கால்கள் உண்டே நான்செல்ல!
இரக்கப் பார்வை எனக்குள்ளே
இறைவா! என்னை மன்னிப்பாய்!
-
கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?
-

இனிப்பை விற்றார் ஒருமனிதர்
எழுந்து போனேன் வாங்கிடவே
இனிமை சொல்லால் வென்றவர்க்கு
இதய வாழ்த்தை சொல்லிவிட்டேன்
பணிந்து நன்றி தெரிவித்து
பார்வை தனக்கு இல்லையென்றார்
நினைத்தேன் இறைவா என்னிலையை!
நல்ல பாடம் படித்துவிட்டேன்
-
கருணை செய்தாய் காருண்யா!
கண்கள் பனித்தே கலங்குகிறேன்
இரவைப் பகலை இவ்வுலகை
இனிதாய் நானும் பார்க்கின்றேன்
இரவும் பகலும் தொழுதாலும்
இருகண் அருளுக்(கு) இணையிலையே!
அருளைப் பொழியும் என்னிறையே
அடியேன் என்னை மன்னிப்பாய்!
-
(கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?)
-

அழகுச் சிறுவன் ஒருவனையே
அன்று பார்த்தேன் வீதியிலே
பழகும் தோழர் விளையாட்டில்
பாவம் இவனோ தனிமையிலே!
சுழலும் பார்வை பார்த்தவனை
சேர்த்தே அணைத்து கேட்டுவிட்டேன்
அழகாய் நீயும் விளையாடேன்
ஆனால் அவனோ கேட்கவில்லை
-
நகர்ந்து சென்ற சிறுவனுக்கு
நிலையாய் செவியின் திறனில்லை
பகர்ந்தார் பிறரும் என்னிடத்தில்
பாவப் பார்வைப் பார்த்துவிட்டார்
தகர்ந்தேன் நானும் என்னிறைவா!
தந்தாய் எனக்குச் செவிப்புலனை
நுகர்ந்தேன் புலன்கள் நல்லின்பம்
நன்றி உரைக்க மறந்துவிட்டேன்
-
காதால் கேட்க முடிவதிலே
கருணை பெரிதும் உணர்கின்றேன்
நீதம் செய்தாய் என்னிறைவா
நினைத்து நினைத்து புகழ்கின்றேன்
போதம் தந்தாய் இன்றெனக்கு
பார்த்தேன்; கேட்டேன் படிப்பினைகள்
ஆத ரிப்பாய் என்றைக்கும்
அடியேன் என்னை மன்னிப்பாய்
-
(கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?)

- இப்னு ஹம்துன்
Source : http://www.islamkalvi.com/portal/?p=7673

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails