Saturday, December 15, 2012

‘இலட்சியப் பெண்’

 அன்புகெழுமிய தோழி தில்ஷாத்திற்கு ரமீஜா வரைவது.  ஆண்டவன் உனக்கு சாந்தியும், சமாதானமும் தந்தருள்வானாக!
 திருமணத்திற்கு முன் நாம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது, நாம் இருவரும் திருமணமாகி கணவர் இல்லம் சென்று விட்டோம்.  பல மைல்களுக்கப்பால் பிரிந்து வாழும் நாம் பல வருஷங்களாக சந்திக்க முடியாமல் போயிற்று.  நாம் நேரில் தான் சந்தித்து அளவளா இயலாவிட்டாலும் கடிதத்தொடர்பு மூலமாவது நம் நட்பை வளர்த்துக் கொண்டிருக்கலாமல்லவா! தன் மனத்தின் மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ உற்ற தோழியிடம் சொன்னால் தான் மனம் அமைதியடையும்.  நான் உன் முகவரியை அடையமுடியவில்லை.  அடிக்கடி அலுவலக மாற்றலின் காரணமாக நம்மைப் போன்ற குடும்பத்தினர் வாழ்வு, புகைவண்டி பிரயாணம் போல் இருக்கிறது.  இருவருக்கும் கடிதத் தொடர்பு தொடர்ந்து நடக்கத்தான் நான் இதை எழுதுகிறேன்.
 உன்னுடைய உணர்ச்சிகளை எழுத்துக்கோர்வையில் வடிக்கும் அளவுக்கு நீ கல்வியறிவு பெறவில்லை என்பதை நானறிவேன் என்றாலும் உன்னுடைய வாழ்வு, வளமுடையதாக இருக்கிறதா என்றறிய நம்முடைய சொந்த ஊரிலிருந்து வரும் பெண்களிடமெல்லாம் விசாரித்தேன் பலருக்கு உன் இருப்பிடமே தெரியவில்லை.  கடைசியாக உன்னிடம் சில காலம் பணியாற்றும் பேறு பெற்ற ஒரு பெண்மணி மூலம் நீ இன்பத்துடன் இல்லறத்தை நடத்தவில்லை யென அறிந்து மிகவும் வருந்தினேன்.  நான் திருமணமான முதல் வருடம், நீ இப்போது ஐந்து வருடங்களுக்கு பிறகும் அனுபவிக்கும் அல்லல்களை அடைந்தேன்.  நம்மிருவர் நிலையும் ஒன்றே.  நாம் படிக்காவிட்டாலும் நாம் இருவரும் பட்டதாரிகளை மணந்தோம்.  என் திறமையின்மையினால் நான் மாற்றம் காணமுடியாவிட்டாலும் என் கணவரின் முயற்சியால் வெகு சீக்கிரம் அவர் நிலையறிந்து கற்றறிந்தகளாக புதுமைப் பெண்ணாக மாறி விட்டேன்.  உன்னிடம் திறமை ஒளிந்து கொண்டிருப்பதை உன் கணவர் அறிந்தாரில்லைபோலும்; அவர் முயன்றால் உன்னை திருத்திக் குடும்ப விளக்கை ஒளிபெற செய்யமுடியும்.

 நம்முடைய இளமைப் பருவத்தை நினைத்தால் உள்ளம் வேதனையடைகிறது.  நம் பெற்றோர்களின் கவனக் குறைவால் நாம் கல்வியின் பெருமையை உணர முடியவில்லை.
 நம் சமூகப் பெண்களின் நிலை “இரண்டுங் கெட்டான்” நிலை தரமான முறையில் மத இலக்கியங்களை கற்றுத் தர பெண்களில் ஆசிரியைகள் போதிய அளவில், நம்மிடையே இல்லாததால் மார்க்கக் கல்வி பெறமுடியாவண்ணம் ஏமாற்றப்படுகிறோம்.  சூழ்நிலையின் சந்தர்ப்பத்தின் காரணமாக நவீனக் கல்வியும் பயில முடியாது பாதிக்கப்படுகிறோம்.  நம் தமிழகத்தில் மட்டும் தானா முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள்?  உலகமெங்கும் உள்ள மற்ற முஸ்லிம் பெண்கள் மின்விசை வேகத்தில் முன்னேற்றம் கண்டு வரும்போது நாம் மட்டும் “கிணற்றுத் தவளைகளாக” அப்பாவிகளாக திறமையிருந்தும் பயன்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றோம்.  இந்நிலை போக்க நம் சகோதரர்களோ, தலைவர்களோ முன்வருவதில்லை.  காலம் செல்லச் செல்ல தவறான கணக்கு போடுகிறார்கள்.  கலீபாக்கள் வாழ்ந்த காலத்தில் பெண்களின் பொன்னான நிலையை நினைத்தால் நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
 உணர்ச்சி வேகத்தில் விஷயத்திற்கு வராது, எங்கேயோ சென்றுவிட்டேன்.  மேலே படி! நாமிருவரும் பள்ளியிலே ஓரளவுதான் படித்தோம்: நம் சமூகப் பெண்கள் முக்கியமாக கிராமங்களில் ஐந்தாவது வகுப்ப வரைப் படிப்பதே அபூர்வமாக இருக்கிறது.  அக்காலத்திய அரிச்சுவடிப் படிப்பும் இக்காலத்திய ஐந்தாம் வகுப்பு படிப்பும் ஒன்றென்பதை நீ அறிவாயல்லவா?
 காலத்துக்கொப்ப கண்ணியமுடனும் சிறப்புடனும் தம் மக்கள் வாழ்க்கை நடத்த வேண்டுமெனக் கருதி சில பெற்றோர் இஸ்லாமிய முறைப்படியே தங்கள் பெண்களைப் பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சமயத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்கள் புழுங்குகிறார்கள்.  பருவத்தை அடைந்தோம்: திருமணப் பேச்சு அடிப ஆரம்பித்து விட்டது.  நம்மிருவருடைய பெற்றோர்களும் ஒரே கருத்துடையவர் போலும்.  நூம் படிக்காவிட்டாலும் நம்மை மணப்பவர்கள் பட்டதாரிகளாக உத்தியோகத்தில் உள்ளவர்களாக இருக்கவேண்டுமென விரும்புகிறார்கள்.  நான் ஒரு பட்டதாரியைத்தான் மணந்தேன்; ஆனால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இல்லாமல் ஒரு பெரிய வணிகராக இருந்தார்கள்.  நீ பட்டதாரியும் உத்தியோகத்திலும் இருந்து ஒருவருக்கு இல்லத் துணைவியானாய்.
 உன்னுடைய துணைவர் ஒரு முற்போக்குவாதி; அதே நேரத்தில் முன்கோபமும் உடையவர்.  தன் நிலையில் உன்னையும் ஒப்பிட்டு பார்க்கிறார் ; ஆனால் உன்னை அந்நிலைக்கு மாற்ற அவர் முயன்றாரில்லை.  ‘என் கணவர் என்னை கவனிப்பதில்லை.  எப்போதும்-மன அமைதியில்லாமல் திரிகிறார்.  வாழ்க்கைச் சோலையிலே புயற்காற்று வீசுகிறதே அன்றி, தென்றலில்லை’ என்றெல்லாம் நீ குறை கூறி பயனில்லை.  ஒரு கணவனுக்கு தன் இல்லக்கிழத்தி இன்பமுடன் இல்லையென்றால் அவர் வாழ்வே சூன்யமாகிவிடும்.  குடும்ப விளக்கு ஓங்கி எரிவதும், மங்கி மறைவதும் அக்குடும்பத் தலைவியின் பொறுப்பு.  உன்னைப் போன்ற படிப்பு மட்டுமே அக்குடும்பத் தலைவியின் பொறுப்பு.  உன்னைப் போன்ற படிப்பு மட்டுமே பெற்ற நான் இவற்றையெல்லாம் எழுதும்போதும் நீ ஆச்சரியப்படுவாய்.  நீ இதைப்போன்று எழுத இயலாவிட்டாலும் ஓரளவு என் கருத்துக்களை புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில் தான் இதை வரைகிறேன்.  என்னுடைய அனுபவத்தை கூறினால் உன்னுடைய சிக்கலுக்கு வழி காண முடியும் என்று நம்புகிறேன்.  மீண்டும் எழுதுகிறேன்.



 -நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். ஸயீத் பி.ஏ., பி.எல்.,

புழம்பெரும் எழுத்தாளரும், நாடறிந்து நாவலரும், வழக்கறிஞருமான அல்ஹாஜ் ஏ.எம். ஸயீத் அவர்கள் (20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘முஸ்லிம் முரசு’ 12-ம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலரில் ‘இலட்சியப் பெண்’ என்ற தலைப்பில்) எழுதிய எழுத்தோவியம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails