Wednesday, October 17, 2012

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.
பகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள். இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது.

பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி  பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)

மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக  ஆக்கிக் கொள்கிறார்கள்.

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர் ஆன் 41: 34-35 )

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.

அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.

அவமானங்களைப் பொறுத்தவரையில் பல கற்பனையானவை; சில நாமாகவே தேடிக் கொண்டவை. இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்கப்பட்டவை இத்தகைய ‘அவமானங்களை’ பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை வேண்டுமென்றே நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் அதனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43)

“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். ”(திருக்குர்ஆன் 24:22)


பழிவாங்கும் உணர்வு படைத்தோர் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளுக்கும் உங்களால் பழிவாங்க முடியாது. முழுமையான நீதி வழங்கும் அதிகாரமும் வல்லமையும் உங்கள் கையில் இல்லை. எனவே அநீதி இழைத்தவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

இறைவாக்கையே தமது வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் மன்னித்தார்கள்.

* வசைமாரிப் பொழிந்தவர்களை

* அவதூறுகள் கிளப்பியவர்களை

* கொலை செய்ய முயன்றவர்களை

* நாடு துறக்க காரணமாக இருந்தவர்களை

* சமூக பொருளாதாரத் தடைகளை விதித்தவர்களை

ஆக அத்தனை பேரையும் மன்னித்தார்கள். “ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. இறைவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்” என்று கூறினார்கள், மேலும் தம் இறுதி உரையில் “ இன்றோடு பழிக்குபழி வாங்குவது நிறுத்தப் படுகிறது. என் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னித்து விடுகிறேன்” என்று முழங்கினார்கள்.

ஆயிரம் கொடுமைகள் இழைக்கப்பட்ட நிலையிலும் அண்ணல் நபியால் அமைதியாகத் தமது பணிகளைச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவர்களின் மன்னிக்கும் மாண்பும் ஒரு காரணமாகும். அவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களும் அவர்களது நண்பர்களாக மாறியதன் ரகசியமும் அண்ணலாரின் மன்னிக்கும் மாண்பே ஆகும்.

(நன்றி :எங்கே  அமைதி..! எனும் நூலிருந்து ஒரு பகுதி)
Source : http://www.valaiyugam.com/2012/09/blog-post_25.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails