Tuesday, October 2, 2012

"அல்லாஹ்வின் தூதரே!" உங்களை நாங்கள் நேசிக்கின்றோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹு)உங்கள் அனைவரும் மீது அல்லாஹுவுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !

நிச்சயமாக எவர்கள் (ஓரிறை )நம்பிக்கை கொண்டு ,நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து ,ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய( நற் ) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது -இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும்மாட்டார்கள் .அல்பகரா :277

 "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புகாரி.



‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்? என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புகாரி.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
ஆதாரம்: புகாரி.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).
ஆதாரம்: புகாரி.

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி

.''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails