Friday, October 19, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-7)

 படித்தேன் பிடித்தேன் 019
என் பார்வையில் பெண்கள் மட்டுமே செய்யத்தக்க சில வேலைகள் உண்டு என்று குழந்தைகள் பராமரிப்பு போன்ற வேலைகளை மட்டும் பட்டியல் இட்டிருந்தார் ஒரு நண்பர். மற்ற வேலைகளைப் பெண்கள் செய்யக்கூடாது என்றார். சில பிரத்யேக குணங்கள், பொறுமை, தாய்மை பண்பு, போன்றவைகள் அவர்களே பெற்றிருக்கின்றனர் அதனால் அவர்கள் அப்படியான பணிகளைத்தான் செய்யவேண்டும் என்றார்.

உங்கள் பார்வை உங்களுக்கு. அதில் நான் தலையிடமாட்டேன்.

ஆனால் ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் பெண்களும் செய்வதை இஸ்லாம் மறுக்கவில்லை
 
பொறுமை, தாய்மை போன்றவை கூடுதல் தகுதிகள்தானே? குறைவில்லயே?

ஆகவே சில காரியங்களை ஆண்களைவிடச் சிறப்பாகப் பெண்களால் செய்யமுடியும் என்றாகிறது - சில காரியங்களை பெண்களைவிட ஆண்களால் சிறப்பாகச் செய்யமுடியும் என்பதைப்போல.

பலர் பெண்களின் படிப்பையும் வேலையையும் தடுப்பது அவர்களை நம்பாததால்தான்.

பெண்களை நம்புவோம்!
நம் தாயை நம்புவோம்
நம் மனைவியை நம்புவோம்
நம் சகோதரியை நம்புவோம்
நம் மகளை நம்புவோம்

நம்பிக்கைதான் இஸ்லாத்தின் அடிப்படை.

ஒரு பெண்
தன் தந்தையை நம்புகிறாள்
தன் கணவனை நம்புகின்றாள்
தன் தமயனை நம்புகின்றாள்
தன் மகனை நம்புகின்றாள்

நம்புகின்ற பெண் உயர்வாக இருக்கிறாள்
நம்பாத ஆண் தாழ்வானவனாகிவிடுகிறான்.




 படித்தேன் பிடித்தேன் 020
பலகீனமான ஹதீதுகள் நிறைய உள்ளன.

பலகீனமான குர்-ஆன் வசனம் என்று ஏதும் இல்லை
.

குர்-ஆன் முகம்மது நபி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு உடனுக்குடன் அப்போதே பதிவு செய்யப்பட்டு ஏராளமான மனனப் பிரதிகளும் எழுத்துப் பிரதிகளுமாய் இருந்து நபியின் காலத்திலேயே வசன வரிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டது.

கலப்படங்களைத் தவிர்ப்பதற்காக முதல் கலிபாவால் தொகுக்கப்பட்டு, மூன்றாம் கலிபாபாவல் நபி மறைந்த 16 வருடங்களுக்குள் முழுமை பெற்றுவிட்ட ஒன்று.

ஹதீதுகளின் கதை அப்படியல்ல. நபி மறைந்த 200 வருடங்கள் கழிந்து, சகாபாக்கள் மறைந்து நூற்றாண்டுகள் கழிந்து வேற்று மொழி மற்றும் வேற்று நாட்டவரால் தொகுக்கப்பட்டவை.

தொகுக்கப்பட்டவற்றுள் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளைவிட கழிக்கப் பட்டவைகளே ஏராளம் ஏராளம் ஏராளம்

அந்த சரித்திரத்தைக் கொஞ்சம் கற்று உணர்ந்தபின் கருத்தாடல்களுக்குச் சான்றுகளாகவும் ஆதாரங்களாகவும் தேவையானவற்றைப் பயன்படுத்தினால் ஓர் நல்ல திசையும் தெளிவும் கிடைக்கும்.

இறைவன் ஒருவனே பேரறிவாளன்!
ஏனையோர் யாவரும் குறையறிவாளர்களே!


 படித்தேன் பிடித்தேன் 021
பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்றால் ஒரே ஒரு பெண் நபியின் பெயரை கூறுங்கள் பார்க்கலாம் என்றார் ஒரு சகோதரர்.

இதுபோன்ற கேள்விகளுக்கு என்னால் ஏதேனும் பதில் தர முடியுமா என்று முயன்றதில் வந்த பதில்கள் இதோ:

பதில் ஒன்று:

அத்தனை நபிமார்களையும் பெற்றெடுத்தது பெண்தான். அவர்கள் பெற்றெடுக்காமல் நபிகள் பிறக்க வேறு வழியில்லை. இதில் தொப்புள் என்ற ஒன்றே இல்லாத ஆதாம் நபியைமட்டும் விலக்கிவிடுவோம்.


பதில் இரண்டு:

இறைவன் சாத்தான்களால் தீண்டமுடியாத ஓர் அற்புதப் பிறவியை நபியாய்ப் பெற்றெடுக்க தேர்வு செய்ததும் மர்யம் என்ற பெண்ணைத்தான்.


பதில் மூன்று:

ஏன் எந்த ஓர் ஆணுக்கும் உயிரைச் சுமக்கும் உன்னத உயிர் என்ற உயர்ந்த அந்தஸ்தை இறைவன் கொடுக்கவே இல்லை என்று இதற்குத் திருப்பிக் கேட்டால் எப்படி இருக்கும்?


பதில் நான்கு:

தாயின் காலடி சொர்க்கம் என்று கூறப்பட்டபோது தந்தையின் காலடி சொர்க்கம் என்று கூறப்படவில்லையே? ஆண் தாழ்ந்தவன் என்பதாலா?


பதில் ஐந்து:

தாயின் மார்பு பால் சுரந்து பச்சிளம் குழந்தையின் உயிர் வளரும்போது தந்தையின் மார்பு பால் சுரக்கவில்லையே ஏன்? ஆண்கள் பெண்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதாலா?


பதில் ஆறு:

ஹவ்வா இல்லாமல் ஆதாம் மட்டும் படைக்கப்பட்டிருந்தால், நாம் இப்படி உரையாடிக் கொண்டிருக்க முடியுமா? 

ஆணாதிக்க உணர்விலிருந்து மீண்டு வாருங்கள் நண்பரே.  அதுதான் இஸ்லாத்தின் வழி.

Source : http://anbudanislam2012.blogspot.in/2012/10/21.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails