Friday, August 24, 2012

யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா !?

யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா !?:
யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா?
நானும்  எனது மனைவியும் படித்தவர்கள். எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்தது . சில காலம் இருவரும் வேலைக்கு சென்றோம் . அரசாங்க வேலை அதனால் சம்பளத்திற்கு குறைவில்லை அதனால் 'கிம்பளம்' வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எனக்கு   கீழ வேலை பார்பவர்களும் மேல் வேலை பார்க்கும் எனது அதிகாரிகளும் எங்களை பல வகையில் 'கிம்பளம்' வாங்கும் நிலைக்கு தள்ளப் பார்கின்றனர் .அவர்களுக்கு உடன்படவில்லையென்றால் நமக்கு ஏதாவது தொல்லை  வரும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நாங்கள் ஒரளவுக்கு வசதி படைத்தவர்கள் அதனால் வேலைக்குப் போய்தான் பொருள் ஈட்டவேண்டும் என்ற அவசியமில்லை. படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற  நோக்கில்தான் வேலைக்குப் போனோம். இந்த தொந்தரவுக்கு ஒரு முடிவு கட்டியாக  வேண்டுமென்று இருவரும் யோசனையில்  ஈடுபட்டோம். அதன் முடிவின்படி நான் மட்டும் வேலைக்குப் போனேன். ஒரு வருடம் கழித்து வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்தேன். வேலைப் பளுவின் காரணமாக உடல்நிலை சிறிது பாதிக்கப்பட்டது. அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க  வேண்டிய அவசியமானது.  அதனால் நான்  வீட்டில் இருந்துக் கொண்டு குழந்தைகளைக் கவணிப்பது மனைவி வேலைக்கு போவது என்ற முடிவுக்கு வந்தோம். அது வேடிக்கையாக இருக்கலாம். எங்கள் நிலையில் அதுதான் சரியாகப்பட்டது.


 நான் வேலைக்குப் போனால் அதிக வேலை கொடுப்பதும் அர்த்தமில்லாத அவதியும் வரும் . பெண்கள் வேலைக்குப் போவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அதிகம் அத்துடன் அவர்கள் அதிக நேரம் வேலைப் பார்க்க அலுவலகத்தில்  கட்டாயம் செய்ய மாட்டார்கள். அவ்விதம் செய்தால் மேல் முறையீடு செய்தால் அவர்களுக்கு சாதகமாக பதில் வரும். உலக அறிவும் மன தைரியமும் வந்து தன்னம்பிக்கை ஏற்பட்டுவிடும். நான் இல்லையென்றாலும் என் மனைவி  யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.
 வீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததால் அவர்களிடத்து பாசம் அதிகமானது அவர்களுக்கும் என் மீது நேசம் மிகுந்தது.  சமைக்கவும் தெரிந்துக்கொண்டேன் அதனால் எனது மனைவிக்கு வீட்டு வேலை குறைந்தது. சமைப்பதில் பொதுவாக  தன் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் அதிகமான பெண்களுக்குத்  தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் நான் பலவகையில் சமைத்துக் கொடுத்ததில் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிட்டனர். 'இன்று ஆட்டுக்கறி ஆனத்தில் (குழம்பு)முருங்கைக்காய் போட்டு சமைக்கப் போகின்றேன்' என்று சொன்னபோது அப்படிச் செய்தால் ஆனம் நன்றாக இருக்காது என்று மனைவி சொன்னாள்  . அவ்விதமே நான் சமைத்துக் கொடுத்தபின்பு 'இதுவும் மிகவும் சுவையாகத்தான் இருக்கின்றது' என்று சொல்லிவிட்டு நானும் அப்படி சமைத்துப் பார்க்கிறேன்' என அவளது  ஆர்வத்தை வெளிப்படுத்தினாள்

 நான்கு ஆண்டுகள் கழிந்தன எனக்கும் எனது மனைவிக்கும் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். தங்க வீடும் கொடுத்தார்கள். மனைவிக்கு மற்றொரு குழந்தை அங்கு பிறந்தது. ஆனால் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. பணத்தைவிட நம் குழந்தைகள் வாழ்வுதான் முக்கியம் என்பதால் வேலையை உதறி  விட்டு இந்தியாவுக்கே திரும்பினோம். இங்கு அவள் வீட்டில் நான் அலுவலகத்தில். அவள் வீட்டு வேலையில் நானும் பகிர்ந்துக் கொள்கின்றேன். அவளுக்கு கிடைத்த அலுவலக வேலை அனுபவத்தால் எனது அலுவலக வேலையில் வீட்டில் இருக்கும் பொது உதவி செய்கின்றாள். இருவரும் கணினி பொறியாளர் படிப்பு படித்தவர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் இறைவன் அருளால் அனைத்திலும் ஒத்துப்போதலும் மகிழ்வும்  நிறைவாக  இருக்கின்றது. நாங்கள் இயந்திர வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மனித நேயத்தோடு, அன்போடு , ஒருவருக்கு ஒருவர் அனுசரணையோடு,இறைபக்தியோடு மகிழ்வாக வாழ விரும்புகின்றோம். சிரமங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் அருளால் நாங்கள் பெற்ற அனுபவமே எங்களுக்கு உதவுகின்றது.
குர்ஆனில்  சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில்  அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!” என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!
ஓர் ஆடை பல நூல் இழைகளால் நெய்யப்பட்டது . ஒற்றுமை, அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல்,அனுசரித்துப்போதல்    என்ற பிணைப்பால் பிணைக்கப்பட்டதுதான் கணவன் மனைவி உறவு வாழ்க்கை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails