Saturday, August 11, 2012

கண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு!


                                                                بسم الله الرحمن الرحيم                       

 நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (குர்'ஆன் - 97:1)

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (குர்'ஆன் - 97:2)

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
(குர்'ஆன் - 97:3)

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
குர்'ஆன் - 97:4)
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்
(குர்'ஆன் - 97:5)

Source ;  http://quran.com/97  Copyright © Quran.com. All rights reserved.



 கண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு!

சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்
லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிகுந்த இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

1.ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்:

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

2. முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

3.லைலத்துல் கத்ர் இரவு எப்பொழுது?

லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49)

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997


நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது.

எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமதானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

4. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

“யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)

5. லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன்.
அதற்கு,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي


'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி'

என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'

6.பிறை 27 தான் லைலத்துல் கத்ரா??

ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.

காரணம் அன்று தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் உடைய இரவு என்று பரவலாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. பல ஹஜ்ரத் மார்களும் பிறை 27 தான் லைலத்துல் கத்ர் என்று சொல்லி வருகின்றனர். சில அறிஞர்கள் பிறை 27 ல் இல்லை என்று மறுத்தாலும்,'பெரும்பாலான சான்றோர்களின் கருத்து' என்று சொல்லி மழுப்பி வருவதை பார்க்கின்றோம்.

லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்த கண்ணியமும்,மகத்துவமும் மிக்க இரவு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால் பிறை 27ல் தான் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஆதாரப்பூர்வமாக காட்ட முடியாது. மாறாக ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் (பிறை 21, 23, 25, 27, 29) ஆகிய இந்த ஐந்து இரவுகளில் அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதிஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)

அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.
 Source  

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails