Thursday, June 28, 2012

வீண் விரயம் வேண்டாம்!

வீண் விரயம் வேண்டாம்!:


  

நம்மிடத்தில், நமக்குள், நம்மைச் சுற்றி உள்ள வளங்கள் யாவும் வல்ல ரஹ்மான் நமக்களித்துள்ள மகத்தான, நிகரற்ற, விலைமதிக்க முடியாத அருட்கொடைகள். அவை எமக்குச் சொந்தமானவை அல்லது பொதுவாக எல்லோரினதும் பாவனைக்குரியவை அல்லது இலவசமாக கிடைப்பவை என்ற ஏதோ ஓர் அடிப்படையில் அவற்றை நாம் நினைத்தவாறு பயன்படுத்துகிறோம்.

அனுபவிக்கிறோம். அளவாக தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டுமென்ற உணர்வு, சிந்தனை பொதுவாக நம் மத்தியில் இல்லாமல் போய்க்கொண்டேயிருக்கிறது. இது ஒரு புறமிருக்க நாமென்ன நல்ல காரியத்துக்குத்தானே பயன்படுத்துகின்றோம். இதற்கும் அளவு வரம்பு பார்க்க வேண்டுமா எனக் கேட்போரும் இல்லாமலில்லை.

வளங்களைப் பயன்படுத்துவது தேவைகளைப் பொறுத்து அமைய வேண்டும். மனிதத் தேவைகளை அத்தியாவசியமானவை, ஆடம்பரமானவை என இரண்டாகக் கூறுபடுத்தலாம். அத்தியாவசியமும் ஆடம்பரமும் ஆள், இடம், சந்தர்ப்பம் ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படுபவை. ஒருவருக்கு ஆடம்பரமான ஒன்று இன்னுமொருவருக்கு அத்தியாவசியமானதாக இருக்கலாம்.

அதுபோல ஒருவருக்கு ஒரு கட்டத்தில் அத்தியவாசியமானதாக இருந்த ஒன்று வேறொரு கட்டத்தில் அவருக்கு ஆடம்பரமானதாக இருக்கலாம். தனது தேவை அத்தியாவசியமானதா அல்லது ஆடம்பரமானதா என்பதற்கு அவரவர் அவரவரின் உள்ளத்தில் தீர்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுவாகச் சொல்வதாயின் ஓர் அருட்கொடையை தேவையில்லாத ஒன்றுக்கு பயன்படுத்துவது, தேவையான ஒன்றுக்கு தேவைக்கதிகமாக பயன்படுத்துவது இரண்டுமே கூடாது. இஸ்லாம் இதனைக் கண்டிப்பாக தடைசெய்துள்ளது.



அவசியமற்ற ஒன்றில் செலவழித்தல் ‘தப்தீர்’ எனவும் அவசியமான ஒன்றில் அவசியத்துக்கு அதிகமாக செலவழித்தல் ‘இஸ்ராஃப்’ எனவும் விளக்கமளிக்கப்படுகிறது. தப்தீர், இஸ்ராஃப் இரண்டையும் கீழ்வரும் குர்ஆனிய வசனங்கள் தடைசெய்வதைக் காணலாம்.

“மேலும் நீர் வீணாக்க வேண்டாம்! வீணாக்குபவர்கள் திண்ணமாக ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கின்றனர்.” (17:26,27) 




“மேலும் நீங்கள் விரயம் செய்யாதீர்கள்! நிச்சயமாக அவன் (அல்லாஹ்) விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.” (06:141)

“மேலும் நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள், விரயம் செய்யாதீர்கள்! நிச்சயமாக அவன் (அல்லாஹ்) விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.” (07:31)

வீண், விரயம் எதிலும் கூடாது, பணம், பொருள், நீர், பலம், நேரம், பேச்சு, உணவு, பானம், உடை, உறையுள், கட்டடம், சதக்கா என அனைத்திலும் வெகு அவதானம் தேவை. நல்லதுக்குக்கூட வரம்பு மீறி, தேவையின்றி செலவழிக்க முடியாது. பின்வரும் ஹதீஸ்கள் கவனிக்கற்பாலவை.

“விரயம் மேலும் பெருமையின்றி நீங்கள் உண்ணுங்கள், அருந்துங்கள், தர்மம் செய்யுங்கள், அணியுங்கள்!” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல்: முஸ்னத் அஹ்மத்)

“மேலும் தேவையற்ற பேச்சுக்கள், அதிகக் கேள்வி, செல்வத்தை வீணாக்குதலை அவன் (அல்லாஹ்) உங்களுக்கு வெறுத்தான்.” (அறிவிப்பவர் முகீரா இப்னு ஷ¤ஃபா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்: சஹீஹ் அல்-புகாரி)

வளங்கள் யாவும் விலைமதிப்பற்றவை அவற்றின் பயன்பாடறிந்து தேவைக்கேற்ப அவற்றைக் கொண்டு பயன்பெற வேண்டும். வளங்களைக் கொண்டு உச்ச பயன்பெறும் நோக்கில் அவற்றை வீணாக்க, விரயமாக்க இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அப்படிச் செய்வது அவற்றைத் துஷ்பிரயோகம் செய்வதாகும்.

வுழுஃ செய்யும் போது வுழுஃவின் ஒவ்வோர் உறுப்பையும் மும்மூன்று தடவைகள் கழுவிக்கொள்ள வேண்டும். வுழுஃ நல்ல காரியம்தானே என்பதற்காக மூன்று தடவைகளுக்கு மேல் ஓர் உறுப்பைக் கழுவுதல் கூடாது. அது இஸ்ராஃப்.

“வுழுஃ செய்துகொண்டிருந்த ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘இது என்ன விரயம்’ எனக் கேட்டார்கள். ‘வுழுஃவில் விரயமுள்ளதா’ என ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹ்) வினவ ‘ஆம் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆற்றில் நீர் இருந்த போதிலும் சரியே’ என்றார்கள்.”

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் ஸ¤னன் இப்னி மாஜஹ்)

கல்வி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், சமய நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புக்கள், தன்னார்வ இயக்கங்கள், ஏன் மஸ்ஜித்களில்கூட வீண், விரயம் சர்வ சாதாரணமாகி விட்டது. ஒழுங்காகத் திட்டமிடப்படாத நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள், கண்மண் தெரியாத செலவினங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்தும், அறியாமலும், உணர்ந்தும், உணராமலும் நடைபெற்று வருகின்றன. வகைதொகையற்ற செலவுகளில் ஈடுபட்டுவிட்டு ஈற்றில் குறை நிரப்ப தவியாய்த் தவிக்கின்றனர். துடியாய்த் துடிக்கின்றனர்.

கல்யாணங்கள், காட்சிகள், வைபவங்கள், விழாக்கள், ஒன்றுகூடல்கள், சுற்றுலாக்கள் என எத்தனை எத்தனை? வறியோர் முதல் தனவந்தர் வரை பொதுவாக எல்லோரும் இவற்றின் போது அளவு கடந்து அள்ளி வீசுகின்றனர். தப்தீர், இஸ்ராஃப் இன்றி தேவைக்கேற்ப இவற்றைச் செய்து முடிக்க தாராளமாக முடியுமாயிருந்தும் வீண், விரயத்துடன் இவற்றைச் செய்து முடிக்கின்றனர். இதனால் இந்நிகழ்வுகள், ஏற்பாடுகளில் அல்லாஹ்வின் ரஹ்மத், பரக்கத் இருப்பதில்லை.

வீண், விரயம் நம் அன்றாட வாழ்வின் சகலதிலும் ஒட்டி, ஒன்றாகிப் போய்விட்டன. ஊதாரிகளாக வாழ்க்கைப் படகோட்டுகிறோம். நாம் அறியாமலேயே, உணராமலேயே வீணடிக்கின்றோம். விரயமாக்கின்றோம். அது எமக்கு ஒரு பொருட்டுமல்ல. ஆனால் வீணாக்கிய, விரயமாக்கிய ஒவ்வொன்றுக்கும் மறுமையில் கணக்குக் கொடுத்தாக வேண்டும்.

ஆகவே வீண், விரயம் தவிர்த்து இறை அன்பை, அருளை, பரக்கத்தைப் பெற்றிட எத்தனிப்போம்!
 http://www.nidurneivasal.org/2012/06/blog-post_28.html


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails