Wednesday, May 23, 2012

ஹதீஸ்கலையின் முடிசூடா மன்னர்-1&2

 
  by Dr. Ahmad Baqavi Ph.D.

பார்போற்றும் ஹதீஸ் கலையின் பேரரசர்
அமீருல் முஃமினீன் ஃபில்ஹதீஸ்
இமாம் புகாரி(ரஹ்) ஹி 194-256

அலை அடங்கிய ஆழிய நடுக்கடலை அந்தக் கப்பல் கிழித்துச் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் ஒரு மாணவரும் பயணம் செய்தார். அவரிடம் ஆயிரம் பொற் காசுகள் இருந்தன. கப்பலில் வழிப்போக்கன் ஒருவன் மாணவருக்குப் பயணத் தோழனாகக் கிடைத்தான்.அவனுடைய நடை உடை பாவனைகளைக் கண்டு அவனை நல்லவன் என நம்பிய மாணவர், தம்மிடம் ஆயிரம் பொற்காசுகள் இருப்பதை அவனிடம் வெள்ளை மனத்தோடு கூறினார்.

ஒருநாள், காலை நேரம்…..மாணவரின் சகத் தோழன் விழித்தெழுந்து, கூச்சல் போட்டு அழுது புலம்பினான். அவனைச் சுற்றிப் பிரயாணிகள் கூடிவிட்டனர். கப்பல் பணியாளர்கள் பரிவோடு அவனை விசாரித்த போது அவன் சொன்னான், நான் ஆயிரம் தங்கக்காசுகள் வைத்திருந்தேன்,  அதனைக் காணோம். யாரோ எடுத்துக் கொண்டார்கள்.

அவனது பேச்சினை உண்மை என நம்பி, பணியாட்களும் கப்பலில் ஒருவரையும் விடாது சோதனை போட்டனர். கப்பல் பரபரப்போடு காணப்பட்டது. நமது மாணவரின் நிலையோ தர்ம சங்கடமாகப் போய்விட்டது. தம் பணத்தை அபகரிப்பதற்கே அந்த வழிப்போக்கன் சு10ழ்ச்சி செய்கிறான் என்பதை உணர்ந்த மாணவர் திடுக்கிட்டார். தம் பணம் என்று எவ்வளவுதான் சொன்னாலும், கப்பற் பணியாட்கள் நம்பப் போவதில்லை என உணர்ந்த மாணவர், ஆயிரம் பொற்காசுகளையும் கடலிலே வீசி எறிந்து விட்டார்.

ஒவ்வொருவராகச் சோதனை போட்டும், யாரிடத்திலும் அந்தப் பணம் அகப்படாதததைக் கண்ட பணியாட்கள் மிகவும் கோபமடைந்தனர். வேண்டுமென்றே பொய் சொல்லித் தங்களை அலைக்கழித்து விட்டான் என அந்த வழிப்போக்கனை கண்டபடி திட்டிப் பலர் முன்னிலையில் அவனைக் கேவலப்படுத்திவிட்டார்கள்.

பயணம் முடிந்து பிரயாணிகளனைவரும் சென்றபின் அந்த வழித் தோழன், மாணவரைத் தனிமையில் சந்தித்துக் கேட்டான்,

‘ஆமாம், அந்த ஆயிரம் தங்கக் காசுகளை என்ன செய்தீர்கள்?’

‘அதனைக் கடலில் எறிந்து விட்டேன்!’

‘அவ்வளவு பெருந் தொகையை வீணாக்க உங்கள் மனம் எப்படித் துணிந்தது?’

‘எனது மதிப்பு மிகுந்த வயதினைச் செலவு செய்து நான் சேகரித்துள்ள மாபெரும் புனிதச் செல்வமாம் கல்விக் கருவூலத்தை அந்தச் சில பொற்காசுகளுக்காக அழித்துவிட என்னால் இயலாது’ என்று பதில் அளித்தார் அம் மாணவர்.

யார் அந்த அதிசய மாணவர்?

யார் அந்த அதிசய மாணவர்? திருட்டுப் பட்டத்தைச் சுமக்க விரும்பாமல், தம் சொந்தப் பணம் ஆயிரம் பொற்காசுகளையும் தூக்கியெறிந்த அற்புதமானவர் யார்?

அவர் தாம் பிற்காலத்தில், ‘ஹதீதுக் கலைப் பேரரசர்’ என நபிமொழிக் கலை வல்லார்களால் புகழப்படும் பேறு பெற்ற இமாம் புகாரீ(ரஹ்) ஆவார்.

கி.பி.12-ம் நூற்றாண்டில்.

வானைத் தழுவினாற் போன்ற உயர்ந்த மினாராக்களைக் கொண்ட மஸ்ஜிதுகளும், வேதம் ஓதும் கூடங்களும், நபிமொழி மன்றங்களும் தாம் அன்றைய புகாராவின் புகழுக்கு முழு முதற் காரணமாக விளங்கின.

சோவியத் ரஷ்யாவின் இன்றைய உஸ்பெக்கிஸ்தான் மாகாணத்திலுள்ள புகாரா, அன்று இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால், இஸ்லாமியக் கலைகளும் அங்கே சிறப்புற்று விளங்கின. ‘இஇல்முல் ஹதீஸ்’ என்னும் நபிமொழிக் கலையில் பேரும் புகழும் பெற்ற பல முஹத்திஸ்கள் நிரம்பியிருந்ததால் ஹதீஸ் பயிலும் மாணவர்களுக்கு புகாரா ஒரு மத்தியக் கேந்திரமாகத் திகழ்ந்தது.

பிறப்பு

புகாராவின் பெரும் முஹத்திஸ்களில் ஒருவரும் இமாம் மாலிக்(ரஹ்) ஹம்மாதுப்னு ஜைத், அபூ முஆவியா ஆகியோரின் மாணவரும் அப்துல்லாஹிப்னு முபாரக்(ரலி) அவர்களின் நண்;பருமான இஸ்மாயீல் அவர்களின் அருந்தவச் செல்வராக ஹிஜ்ரீ 194, ஷவ்வால் பிறை 13-ம் நாள் வெள்ளியன்று ஜும்ஆவுக்குப் பின் இமாம் புகாரீ(ரஹ்) பிறந்தனர். இமாமவர்களின் இயற்பெயர் முஹம்மது, அன்புப் பெயர் அபூ- அப்துல்லாஹ்,  ஹதீதுக்கலை உலகில் அவர்கள்’அமீருல்முஹத்திஸீன்’ என்றும் ‘அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படு கிறார்கள். பல பெயர்கள் இருப்பினும் சொந்த ஊரான புகாராவைச் சேர்த்து ‘புகாரீ’ என்ற பெயராலேயே இமாமவர்கள் உலகுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளனர்.

இமாமவர்கள் நடுநிலையான உயரமும், கோதுமை நிறமும், மென்மையான தேகவாக்கும் பெற்றிருந்தனர். இமாமவர்கள் தூய வெண்ணிற ஆடையினை மிகவும் விரும்பி அணிவார்கள்.

இமாமவர்கள் இளவயதிலேயே தந்தையாரை இழந்துவிட்டனர். பின்னர் இறையன்பும், பக்தி நிறைஉளமும் கொண்ட தம் அன்னையாரின் அரவணைப்பில் நாளொரு ஞானமும், பொழுதொரு அறிவும் பெற்று வளர்ந்தனர். அந்தோ! இவ்விளம்பருவத்திலேயே இமாமவர்களின் இரு விழிகளின் பார்வையும் குன்றிவிட்டது. அன்புக் கணவர் மறைந்த துயரத்தின் ஈரம் உலருவதற்கு முன் மகனின் பார்வையும் குன்றி விட்டதால், அன்னையார் ஆறாத் துயரடைந்தனர். தம் மகனுக்குக் கண் பார்வையை மீண்டும் தருமாறு இறைவனை இரவும் பகலும் இறைஞ்சிய வண்ணமிருந்தனர்.

ஒரு நாள் இரவில் பிரார்தனை புரிந்து கொண்டிருந்த ஆன்னையாரை நித்திரை ஆட்கொண்டது. தூக்கத்தில் கனவு ஒன்று காணுகின்றனர். கனவில் நபி இப்ராஹீம் கலீலுல்லாஹ் தோன்றி, ‘உம் புதல்வருக்கு அல்லாஹ் கண்ணொளி தந்துவிட்டான்’ எனக் கூறி மறைந்தனர். காலை புலரும் போது கண் விழித்த அன்னையார் தம் திருமகனின் இருவிழி களும் உண்மையிலேயே ஒளிபெற்றுத் திகழ்ந்ததைக் கண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினர். இறையருளைப் பெற்ற இமாம் அவர்களின் பார்வை அபார சக்தி வாய்ந்ததாய் ஒளிர்ந்தது. பின் நாளில், மங்கிய இரவுகளில் நிலா வெளிச்சத்திலேயே இரண்டு பெரிய நூல் களை எழுதி முடிக்கும் ஆற்றலை அக்கண்கள் பெற்றிருந்தன. இத்தகவலை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) தமதுஃபத்ஹுல் முபீன் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இளமை

இமாமவர்களுக்குப் பத்து வயதாகும் பொழுதே குர்ஆனை மனனம் செய்துஅடிப்படைக் கல்வியையும் முடித்துக் கொண்டனர். அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்தில் புனிதப் போர்களில் (ஜிஹாதில்) கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவே, உடலை வலுப்படுத்த ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்தனர். அம்பினைக் குறிப்பார்த்து, இலக்கு நோக்கி எய்வதில் திறமையும் பெற்றனர். அடிப்படைக் கல்வியை முடித்துக் கொண்ட இமாமவர்களுக்கு அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆழ்ந்த விருப்பம் ஏற்பட்டது. அங்கிருந்த ஹதீஸ் மன்றங்களில் சேர்ந்து ஹதீஸ் கற்றுணர்ந்தனர், புகாராவில் நிரம்பிருந்த ஹதீதுக் கருவூலம் முழுவதையும் மிக விரைவிலேயே கற்றுத் தேர்ந்தனர். அப்துல்லாஹிப்னு முபாரக், இமாம் வகீஃ ஆகியோரின் நூல்களையும் இதே காலத்திலேயே மனனம் செய்து முடித்து விட்டனர்.

அறிவாற்றல்

புகாராவிலிருந்து நபிமொழி மன்றங்களில் மிகப் பெரிதாகத் திகழ்ந்தது இமாம் தாகிலீ(ரஹ்) அவர்களின் மன்றமாகும். இந்த மன்றத்தில் இமாமவர்கள் சேர்ந்து ஒரு சில நாட்களே சென்றிருந்தன. ஒரு நாள்.. ஆசிரியப் பெருந்தகை தாகிலீ(ரஹ்) அவர்கள் ஹதீஸ் சொல்லத் துவங்கி, ஒரு ஹதீதை அறிவித்தவர்களைப் பற்றிக் கூறினார். அப்போது, ‘அபூஜுபைர் என்பவர் இப்ராஹீமிடமிருந்து அறிவிக்கிறார்’ எனக் குறிப்பிட்டார்கள். இதுவரை அமைதியோடு வீற்றிருந்த இமாமவர்கள் குறுக்கிட்டு, ‘ஆசிரியர் அவர்களே! ஸனது (ராவீகளின் பெயர் வரிசை) அவ்வாறன்று, இப்ராஹீமிடமிருந்து அபூஜுபைர் என்பவர் அறிவிக்கவில்லை’ என்றார்கள்.

இடை மறித்துப் பேசியவர் சிறிய வயதுடைய புது மாணவர் என்பதை அறிந்து கொண்டு, ‘பேசாமலிரு’ என்று ஆசிரியர் அதட்ட, இமாமவர்கள் விடாப்பிடியாக, ‘தங்களின் சமூகத்தில் மூல நூல் இருப்பின், அதைத் தாங்கள் சற்றுப் புரட்டிப் பார்க்கலாமே!’ என்று கூறினார். புதிய மாணராக,  சிறியவராக இருந்தாலும், பேச்சு அறிவுத் தெளிவோடு ஒலிப்பதை உணர்ந்த ஆசிரியர், மூல நூலை எடுத்து, அந்த ஹதீதின் ஸனதைப் பார்த்த போது சிறுவர் கூறியது உண்மையாக இருக்கக் கண்டு வியந்தார். ஆசிரியர், ‘சிறுவரே! நான் சொன்ன ஸனது சரியில்லை  என்றால், சரியான ஸனது எப்படி இருக்கும்?’ என வினவினார்கள். இமாமவர்கள், ‘இப்ராஹீமிடமிருந்து அறிவித்தவர் ஜுபைர் இப்னு அதீயாகும். அபூஜுபைர் அல்லர்’ என்று சரியான ஸனதைக் கூறினார்.

இந்தச் சமயத்தில் இமாமவர்களின் வயது என்ன? இச்சம்பவத்தைப் பற்றி வினவியபோது, ‘எனக்கு அப்போது பத்து அல்லது பதினொன்று இருக்கும்’ என இமாமவர்களே விடை பகர்ந்துள்ளனர்.

கல்வி

புகாராவில் அல்லாமா பேகந்தீ(ரஹ்) அவர்களிடமும் இமாமவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர். ஒருமுறை அல்லாமா பேகந்தீ(ரஹ்) அவர்களை, அறிஞர் சலீமுப்னு முஜாஹித் சந்திக்க வந்திருந்தனர். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்த போது அல்லாமா பேகந்தீ(ரஹ்), ‘சற்று நேரத்திற்குமுன் நீங்கள் வந்திருந்தால் எழுபதாயிரம் ஹதீதுகள் மனனம் செய்திருக்கும் ஒரு சிறுவரைப் பார்த்திருக்கலாமே!’ என்றனர்.

இச்சம்பவத் தொடரை அறிஞர் சலீம் அவர்கள் இதோ இவ்வாறு விளக்குகிறார்கள். ‘இவ்வாறு ஒரு சிறுவனைப்பற்றி அல்லாமா அவர்கள் கூறக் கேட்டதும், நான் அசந்து விட்டேன். நான் அங்கிருந்து புறப்பட்டு அச்சிறுவரைச் சந்தித்தபோது, ‘என்னஉங்களுக்கு எழுபதாயிரம் ஹதீதுகள் மனனமிருப்பதாகச் சொல்கிறார்களே!’ என நான் வினவினேன். உடனே சிறுவர், ‘ஆமாம், அத்துடன் ஹதீதுகளை அறிவித்திருக்கும் ஒவ்வொரு ராவீயின் வரலாறும் தெரியும். ஸனதின் தொடரில் எந்த இடத்தில் யாரைப்பற்றி நீங்கள் வினவினாலும், அவரைப் பற்றி அவரது ஊர் பெயரோடு அவரது பிறந்த நாளையும், இறந்த நாளையும் என்னால் சொல்ல முடியும்’ என்று கூறினார்.

இவ்விளம் வயதில் இமாமவர்களிடம் இமாமின் ஆசிரியர் அல்லாமா பேகந்தீ (ரஹ்) அவர்கள் தாங்கள் எழுதிய ஒரு நூலைக் கொடுத்து, ‘இந்த நூலை நீங்கள் ஒரு முறை படித்துப் பார்த்துத் தவறுகளைத் திருத்தித் தர வேண்டும்.’ எனக் கேட்டுக் கொண்டனர். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் மிக வியப்புற்று, ‘யார் இந்தப் பையன்? தாங்கள் இன்றைய சமய அறிஞர்களின் தலைவராக இருந்து கொண்டு, இச்சிறுவனிடம் போய் ‘திருத்திக் கொடு’ என்று கூறுகின்றீர்களே’ என்று கேட்டார். இதற்கு அமைதியாக, ‘இந்தச் சிறுவரைவிட உயர்ந்தவரோ இவருக்கு சமமானவரோ இன்றைக்கு எவருமில்லை’ என அல்லாமா பேகந்தீ(ரஹ்) பதிலளித்தனர்.(நூல்: கஸ்தலானியின் முன்னுரை)

புகாராவில் வாழந்த ஹதீது வல்லுநரிடம் கற்றுத் தேறும் போது இமாம் அவர்களுக்கு வயது 16. அதன் பின்னர் ஹஜ்ஜு செய்வதற்காக அன்னையரோடும், அருமை சகோதரர் அகமதோடும் மக்கா சென்றனர். ஹஜ்ஜு முடிந்து அன்னையும் சகோதரரும் ஊர் திரும்பிட இமாம் புகாரி மட்டும் மாநபி(ஸல்); மணpமொழிகளைக் கற்றுணர மக்காவிலேயே தங்கி விட்டனர். அன்றைய காலத்தில் தாபியீன்களும், தபஉத் தாபீயீன்களும், விரிந்து பரந்திருந்த இஸ்லாமிய ஆட்சி நடத்த பல்வேறு பகுதிகளில் போய் தங்கியிருந்தாலும், வஹீ (வேத வெளிப்பாடு)ம் அருளப்பட்ட புண்ணிய பூமி என்ற முறையில் மக்காவும். மதீனாவும் ஹதீஸைப் பொறுத்தவரை தனிச் சிறப்பை பெற்று இருந்தன. நம் இமாம் அவர்கள் மக்காவிலும். மதீனாவிலும் மிகப் பிரபலமான முகத்திஸ்களிடம் ஆறு ஆண்டுகள் ஹதீஸ் கற்றுக் கொண்டனர். மதீனாவில் மாணவராக இருக்கும்போதுதான் ‘தாரிக்குல் கபீர் - மாபெரும் வரலாறு’ எனும் நூலை வெண்ணிலாவின் குளிர் ஒளியில் எழுதி முடித்தனர். பின்னர் மதீனாவை விட்டு பஸரா சென்று, அங்கே பத்து ஆசிரியர்களிடம் ஹதீஸ் கலை பயின்றார். பின்னர் கூஃபாவிலும் பாடம் கேட்டுக் கொண்டார்.

கல்வித்திருநகர் பக்தாத் மாநகரில்
பஸ்ராவையும் கூஃபாவையும் விட்டு நீங்கிய இமாம் அவர்கள் பல்கலைகளின் உறைவிடமாம், பண்பாளர் இருப்பிடமாம் பாக்தாத் மாநகர் சென்றனர். அங்கே நான்காவது மத்ஹபின் சிறப்பு மிக்க தலைவர் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களிடமும், முஹம்மது இப்னு சாயிக், முஹம்மது இப்னு ஈசா சபாக், சுரைஜ் இப்னு நுஃமான், போன்ற மதிப்பிற்குரிய முஹத்திஸ்களிடமும் பாடம் கற்றுக் கொண்டனர். அதன் பின் சிரியா (ஷாம்), எகிப்து (மிஸ்ர்), ஜஸீரா (பஹ்ரைன்), குராசான், மரு, பல்ஃக், ஹிராத், நைஷாப்பூர், ரிஆ முதலிய இடங்களுக்கும் சென்று கல்வி தேடினார்கள். நைஷாப்பூரில் இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹ்வைஹி (ரஹ்) இடம் சேர்ந்து கல்வி பயின்றார்கள்.

தொடரும்….

Source : http://albaqavi.com/home/?p=255

ஹதீஸ்கலையின் முடிசூடா மன்னர்-2

 by Dr. Ahmad Baqavi Ph.D.

அபார நினைவாற்றல்

இவர்கள் அபார நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் தாம் பயிலும் எந்த ஹதீஸையும் எழுதிக் கொள்வதில்லை. இவர்கள் இவ்வாறு எழுதிக் கொள்ளாதததைப்பார்த்த சகமாணவர்கள் இவர்களை ஏளனமாகப்பார்த்து கேலிசெய்தனர்.ஒருநாள் அவர்கள் எழுதிவைத்திருந்த ஹாதீஸ்கள் அனைத்தையும் கொணருமாறு கூறினர். அவர்கள் கொணர்ந்த பதினையாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை இவர்கள் மளமள வென ஒப்புவித்ததைக்கண்டதும் அவர்களுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை.
அவர்களை ஏளனம் செய்தவர்களெல்லாம் தாம் எழுதி வைத்திருந்த வற்றிலிருந்த தவறுகளைத் திருத்திக் கொண்டார்கள்.நான் என் வாழ்நாளை விணாக்கிக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். அதற்காகத்தான் இவற்றை ஒப்புவித்தேன் என அடக்கத்தோடு கூறினார்கள்.
பக்தாதில் சோதனை
இவர்கள் ஒருமுறை பக்தாது வந்திருந்த வேளை அங்குள்ள அறிஞர்கள் இவர்களின் நினைவாற்றலை சோதிக்க வீரும்பினர். தம் மாணவர்களில் பத்துபேரை தயார் செய்தனர்.அவர்கள் ஒவ்வொருவரும் இமாம் அவர்களிடம் பத்து பத்து ஹதீஸ்களை அவற்றைக் கூறியவர்களின் வரிசையையும் அவர்களின் வரலாற்றையும் மாற்றி மாற்றிக் கூற வேண்டும் என்பது அவர்களின் ஏற்பாடாகும்.இதற்கென்று ஒருநாள் தீர்மானிக்கப்பட்டது. அந்த நாள் அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குழுமலயாயினர். அவர்களில் மார்க்கத்தில் தேர்ந்த உலமாக்களும் ஹதீஸ்கலையில் வல்ல முஹத்திதீன்களும் பலர் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் நடுவில் இமாமவர்கள் அமாந்திருந்தார்கள்.

ஒருவர் எழுந்தார்.ஒரு ஹதீஸைக் கூறினார்.அதனைத் தெரிவித்தவர்களின் வரிவையையும்.வரலாற்றையும் மாற்றிக் குழப்பினார்.இப்படி அவர் பத்து ஹதீஸகளையும் சொன்ன பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்திக் கூறும்படி இமாமவாகளைப் பார்த்துக் கேட்டார்.இமாமவர்கள் ‘நான்அறியேன்’ என்றார்கள்.அடுத்தவர் எழுந்தார். முதலாமவர் கூறியவாறே பத்து ஹதீஸ்களையும் அறிவிப்பாளர் வரிசையையும் வரலாறுகளையும் குழப்பிக்தாற்றுவிட்டார்கள். இவர்களால் பதில் சொல்ல முடியாது என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். நிசப்தம் நிலவிய அந்த வேளையில் இமாமவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு மெதுவாக எழுந்து நின்று தமது அமுத வாயைத் திறந்தார்கள்.

முதலாமவர் கூறிய ஹதீஸைக் கூறினார்கள்.அதனை வெளிப்படுத்தியவர் வரிசையையும் வரலாற்றையும் அவர் குழப்பிக் கூறியவாறே வரிசை மாறாமலே அவர்களும் கூறினார்கள்.பின்னர் அதன் சரியான வரிசையையும் வரலாற்றையும் தெரிவித்தார்கள். அதன்பின் முதலாமவர் கூறிய இரண்டாவது ஹதீஸை எடுத்துக் கொண்டார்கள். அதையும் முன்போலவே அவர் குழப்பிச் சொன்னதையும் அதன் சரியான வரிசையையும் கூறினார்கள்.

இவ்வாறே பத்து ஹதீஸகளையும் கூறிமுடித்தார்கள். இதைப்போலவே ஒவ்வொருவரும் குழப்பிக் கூறிய பத்து ஹதீஸ்களையும் அவற்றின் சரியான வரிசையையும் வரலாறுகளையும் அமைதியாக அதே நேரம் மிகவும் தெளிவாக அழுத்தமாகக் கூறிமுடித்தார்கள்.இப்படி பத்தாமவர் கூறியதுடன் சேர்த்து நூறு ஹதீஸ்களையும் நூல் பிசகாமல் சொல்லி முடித்ததைக் கேட்ட மக்களும் உலமாக்களும் அசந்து போய்விட்டனர். உண்மையிலேயே இமாமவர்கள் அசாதாரணமான அற்புத நினைவாற்றலைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் எது வேண்டும்? அவர்களில் ஒருவர் கூறினார்:- ‘ஒரு ஹதீஸின் வரிசை குழம்பிக் கூறப்பட்டால் அதன் சரியான வரிசையை வேண்டுமானால் சொல்லிவிடலாம்.ஆனால் வேண்டுமென்றே குழப்பிக் கூறப்பட்ட வரிசையை ஒரு முறை கூறக்கேட்டதுமே நினைவு வைத்திருந்து அதனையும் அப்படியே ஒப்புவிப்பதற்கு அசாத்தியத் திறமையும் அபார ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும் என்று.’

சமர்கந்தில் சோதனை
இவ்வாறு சமர்கந்திலும் ஒரு சோதனை நடைபெற்றது. அங்குள்ள நானூறுக்கும் அதிகமான ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஒன்று கூடி ஒரு சோதனையைச் செய்தார்கள்.சிரியாவில் கிடைத்த ஹதீஸ்களை ஈராக்கிலும் ஈராக்கில் கிடைத்த ஆதாரங்களை சிரியாவிலும் கிடைத்ததாக மாற்றி மாற்றிக் கூறினார்கள்.ஆனால் அவர்களால் ஒருமுறைகூட இமாம் அவர்களை ஏமாற்ற இயலவில்லை. இமாமவர்கள் மாற்றிக் கூறப்பட்டவற்றைச் சொல்லி சரியானவற்றைத் தெரிவித்தார்கள்.

ஹதீதைத் திரட்டும் பணி மிகப் புனிதம் வாய்ந்ததாகும். இப்பணியில் ஸஹாபாப் பெருமக்களும் தாபிஈன்களும் ஈடுபட்டிருந்தனர். ஒரே ஒரு ஹதீதைக் கேட்பதற்காக, ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்கள் பயணம் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்புனிதப் பயணத்தைப்பற்றி ஞானக் கருவூலம் இப்ராஹீம் இப்னு அத்ஹம், ‘இவை போன்ற பயணங்களின் பரக்கத்தால் அல்லாஹ்தஆலா, இச்சமுதாயத்திற்கு வரும் கேடுகளை அகற்றிவிடுகிறான்.’ எனப் போற்றியிருக்கிறார்கள்.

 இன்றைக்கிருப்பதைப் போல பயண வசதிகள் அறவே இல்லாத அக்காலத்தில், பயணத் துன்பங்கள் எத்தனை ஏற்படினும், அவற்றைத் துளிக்கூடப் பொருட் படுத்தாமல் இமாமவர்கள் சளைக்காது பயணம் செய்தார்கள். அன்றைய இஸ்லாமிய ஆட்சி பரவியிருந்த பல பகுதி களுக்கும், ஏன , ஏறக்குறைய எல்லா இடங்களுக்குமே இமாமவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் செய்த சுற்றுலா இஸ்லாத்தின் வெற்றி உலாவாகவே அமைந்து விட்டது.

பற்பல இடங்களில் பல ஆசிரியர்களிடம் திரட்டிய ஹதீதுகள் அனைத்தையும் உடனுக்குடன் மனனம் செய்துவிடுவார்கள். ‘நான் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களிடம் பாடம் கேட்டிருக்கிறேன், எந்த அளவு ஹதீதுகள் தெரியுமோ, அந்த அளவு ஸனதும் எனக்கு மனப்பாடமாகவே உள்ளது’ என இமாமவர்களே கூறியுள்ளார்கள்.

விளை நிலத்தில் களை படர்ந்தாற்போன்று, அண்ணலார் கூறாத சில மொழிகளும் ஹதீதுத் தொகுப்பில் வரும் நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, ஹதீதுகளுக்குக் களை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.. உண்மையான ஹதீதுகளைத் திரட்டுவோருக்குத் தனித் திறமைகள் தேவைப்பட்டன. ஹதீதை ரிவாயத்ததுச் செய்யும் ராவீ நல்லவரா? தீயவரா? அவரது பெயர், ஊர் போன்ற சரியான வரலாறுகளையும் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும். இத்தகு ஆற்றல் உள்ளவரால் தான் இந்த ஹதீது (ஸஹீஹ்)சரியானது, (ளயீஃப்) சரியில்லாதது என்று பிரித்து அறிய முடியும். இந்தத் துறையில் தனித் திறமை பெற்றிருந்த முஹத்திதுகள், இமாம்களின் வரிசையில் நம் இமாம் அவர்களே முன்னிலையில் இருந்தார்கள்.

இமாமவர்களுக்கு அபரிமிதமான நினைவாற்றல் இருந்தது. இதனால் இமாமவர்கள் அமர்ந்திருக்கும் மன்றங்களில் பாடம் சொல்லும் ஆசிரியர் சற்று அச்சத்துடனேயே பாடம் சொல்லுவார். கல்வியை முடித்துக் கொண்ட இமாம் அவர்கள் எங்குச் சென்றாலும். அவர்களின் கல்வி தரத்தை அறிவதற்காக அங்கிருந்த அறிஞர்களால் பற்பல முறைகளில் சோதிக்கப்பட்டனர். இந்த அடிப்படையில் பாக்தாதில் இமாமவர்கள் சோதிக்கப்பட்ட அற்புத நிகழ்ச்சி, வரலாற்றுப் புகழ் பெற்ற ஒன்றாகும். இமாமவர்களுக்குத் தெரியாத ஒரு ஹதீதை நாம் சொல்லிவிட வேண்டும் என்று துடித்து, தாம் மேற்கொண்டிருந்த பயணத்தை நிறுத்திவிட்டு, நம் இமாமுடன் சென்ற இமாம் ஃபஜ்லக் ராஜி(ரஹ்) அவர்களால் இமாமவர்களுக்குத் தெரியாத எந்த ஹதீதையும் சொல்ல முடியாமல் போய்த் தமது தோல்வியையும் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

யூசுஃப் இப்னு மூஸா மரூஜி அறிவிக்கிறார்,

பஸ்ரா நகரின் ஜாமிஆ மஸ்ஜிதில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது, ‘இமாம் புகாரீ அவர்கள் பஸ்ராவுக்கு வந்து விட்டார்கள்.’ என்று அறிவிப்புச் செய்யப்பட்டது. இமாமவர்களை வரவேற்பதற்குப் புறப்பட்ட ஜனத்தினரில் நானும் சேர்ந்து கொண்டேன். இச்சமயம் இமாமவர்கள் கருநிறத் தாடியுடைய வாலிபராக இருந்தார். இமாமவர்கள் வந்து மஸ்ஜிதில் தொழுது முடித்ததும், மக்கள் தங்கள் வீட்டிற்கு இமாமவர்களை அழைத்துச் சென்றனர். மறு நாள் முஹத்திதுகள், ஹதீதுகளை மனனம் செய்வேர் முதலியோர் சூழ்ந்திருக்க, இமாமவர்கள் மேடையில் அமர்ந்தார்கள். பின் கூறினார்கள்: ‘பஸ்ராவாசிகளே! நான் பஸ்ராவாசிகள் ரிவாயத் செய்த ஹதீதுகளாகவே இப்போது சொல்லப் போகிறேன். ஆனால் அந்த ஹதீதுகள் (இப்போது) உங்களிடம் இல்லை.’ இதே முறையில் அங்கிருந்த எல்லா மன்றங்களிலும் ஹதீதுகளை எடுத்துச் சொன்னார்கள்.


வரலாறுகள்
இமாமவர்களுக்குப் பல்லாயிரக் கணக்கானோரின் வரலாறுகள் தெரியும். பல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்கள். அவர்களது வரலாற்று நூல் மூலம் முஹத்திதுகள் பலர் பயனடைந்தனர். ஒருமுறை உதுமானிப்னு மர்வானின் ஜனாஸாவில் கலந்து கொள்ள வந்தார்கள். முஹம்மது இப்னு யஹ்யா துஹலீ அவர்கள் இமாமவர் களிடம் ஒரு சில ராவீகளின் பெயரையும் ஒரு சில ஹதீதுகளையும் பற்றிக் கேட்டார்கள். அந்த விபரத்தை ஒரு மனிதன் எளிதில் ஓதும் ‘குல்ஹுவல்லாஹ்’ சூராவைச் சொல்வதுபோல் கடகடவெனக் கூறினார்கள்.

இமாமவர்கள் திரட்டிய ஹதீஸ்கள்

இமாமவர்கள் திரட்டிய  மொத்த ஹதீஸ்கள் ஆறு லட்சம் ஆகும். இவற்றிலிருந்து தமது விதிகளின் படி தரம் திரித்து தேர்ந்தெடுத்தவை 7275 ஹீஸகளாகும்.இருமுறை கூறப்பட்டவற்றை ஒரே ஹதீஸாகக் கொண்டால் அவற்றில் இருப்பவை 4000 ஹதீஸ்கள் என்று இமாம் நவவீ (ரஹ்) கூறுகிறார்கள். இந்த நூலை எழுதி முடிக்க இவர்களுக்கு பதினாறு ஆண்டுகளாயின.இரவில் இருபது தடவைக்கு மேல் விழித்தெழுந்து விளக்கேற்றி இதில் விடப்பட்டுள்ளவற்றை சரிபார்ப்பார்கள்.

கஃபாவில் வைத்து இதனை எழுதத் துவங்கிய இவர்கள் பின்னர் நாடு நகரங்களெல்லாம் சுற்றித்திரிந்து தீஸகளைச் சேகரித்து, பின்னர் கஃபாவில் வைத்தே இதனை முடித்து, மதீனாவில் மஸ்ஜிதுந்நபவீயில் ரவ்ளாவுக்கம் மிம்பருக்கும் நடுவில் வைத்து மூன்று முறைகள் சரிபார்த்தனர்.இதில் வரும் ஒவ்வொரு ஹதீதுக்காக வேண்டியும் ஒளுச் செய்யாமலும் இரு ரகஅத்கள் தொழாமலும் இருக்கவில்ல என இவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருநாள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருமுன் நின்று தாம் விசிறியால் வீசிக்கொண்டிருப்பதாகக் கனவு கண்டதாகவும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் கலந்துவிட்ட பொய்களைத் தாம் பறக்கடிக்கப் போவதை இது உணர்த்துவதாக கனவு விளக்க வல்லுனர்கள் இதற்கு விளக்கம் கூறியதாகவும் அதுவே தாம் இந்நூலைத் தொகுத்தெழுதக் காரணமாக அமைந்ததாக இருந்ததென்றும் இவர்கள் கூறியுள்ளனர்.

உலகிலேயே அதிகமாக மதிக்கப்படும் பெருநூல்

இன்று “ஸஹீஹுல் புகாரி” குர்ஆனுக்கு அடுத்தபடியாக கெளரவிக்கப்படும் பெருநூலாக விளங்ககிறது. இவர்களுக்கு “அமீருல் முஃமினீன் ஃபில்ஹதீஸ்” ” ஹதீஸ் கலையின் முடிசூடா மன்னர்” என்ற சிறப்புப் பெயரையும் இந்நூலே ஈட்டித்தந்தது.

மாணவர்கள்

இவர்களிடம்  “ஸஹீஹுல் புகாரி” யைத் தொண்ணூறாயிரம் பேர் பாடம் கேட்டுள்ளனர்.இவர்களின் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்,  நம்பத் தகுந்த ஆறு ஹதீஸ் நூல்களில் ஸஹீஹ் முஸ்லிமை எழுதிய  இமாம் முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் அவர்களும், திர்மிதியை எழுதிய அபூ ஈஸா முஹம்மது அவர்களும், சுனனு நஸயீயை எழுதிய இமாம் அபூ அப்துருரஹ்மான் நஸயீ அவர்களும் ஆவார்கள்.

புகழ்மிக்க இந்த மாணவர்களின் வரிசையில் இமாம் இப்னு குஸைமா, இமாம் முஹம்மது பின் நஸ்ரு, இமாம் மசூரி ஸாலிஹ் பின் முஹம்மது அகியோரும் உள்ளனர். இவர்களெல்லாம் எளிதில் இணைகாண முடியாத அறிஞர்கள்ஆவர்.இவர்களைத்தவிர்த்து எத்தனையோ மார்க்க மேதைகள் இமாம் அவர்களின் மாணவர் அவதற்காக அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள்.

ஹதீஸில் அதிகக் கவனம்

இமாமவர்கள் தாம் மிகவும் பேணுதலாக இருந்ததோடு, ஹதீதுகளை எழுதுவதிலும் பேணுதலான முறையைக் கடைப்பிடித்தார்கள். சந்தேகமான வழியில் கூறப்பட்ட ஹதீதுகளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு மனிதர் சில ஹதீதுகளைப்பற்றி இமாமவர் களிடம் சந்தேகத்தோடு பேசினார். இமாமவர்கள், ‘நீங்கள் என்னிடம் சந்தேக வழியில் வந்த ஹதீதுகள் இருக்கும் என ஐயப்படுகிறீர்களா? ஒருவரிடம் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் தான் அவரிடமிருந்த பத்தாயிரம் ஹதீதுகளை விட்டுவிட்டு வந்தேன். இதே போன்று இன்னொரு முஹத்திஸிடம் சிறிது சந்தேகம் ஏற்பட்டதால், அவரிட மிருந்த எல்லா ஹதீதுகளையும் ஏற்றுக் கொள்ளாமல் வந்து விட்டேன்.’ என்று பதிலளித்தார்கள்.

துன்பம் எதையும் ஏற்றுக் கொள்ளும் எஃகு இதயம் படைத்தவர்களாகவும், பொறுமையை அணியாய்ப் பூண்டவர்களாகவும் இமாமவர்கள் திகழ்ந்தார்கள். மாணவப் பருவத்தில் துன்பத்தை முறுவலோடு ஏற்றுப் பொறுமை செய்து கொண்டார்கள். ஆதமிப்;னு அயாஸ் அவர்களிடம் ஹதீஸ் கேட்கப் போயிருந்தபோது பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. உணவுக்குப் பணமின்றி மூன்று நாட்கள் குலைகளையும், புல்லையும் உட்கொண்டனர். மூன்று நாட்களுக்குப் பின் ஒருவர் ஒரு பணப்பையை இமாம் அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்.

இதே போல் பஸ்ராவில் மற்ற மாணவர்களோடு சேர்ந்து இமாமவர்கள் ஹதீதுகளை எழுதிக் கொண்டிருந்தனர். இடையில் பல நாட்கள் பாடத்திற்கு வரவில்லை. தேடிப் பார்த்து விசாரித்தபோது, இமாமவர்களின் ஆடை இற்றுக் கிழிந்து விட்டதும், வேறு ஆடை வாங்க வறுமை இடந்தரவில்லை என்றும் தெரியவந்தது. மற்ற மாணவர்கள் தங்களுக்குள் வசு10ல் செய்து துணி வாங்கிக் கொடுத்த பின்னர்தான் பாடத்தில் கலந்து கொள்ள முடிந்தது.

வறுமையிலும் செம்மை

இமாமவர்கள் தன்னலமற்ற சாமானிய வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர். பல நாட்களை உணவும் நீருமின்றியே கழித்துள்ளனர். இன்னும் சில சமயங்களில் இரண்டு மூன்று பாதாம் பருப்புக்களை மட்டும் போதுமாக்கிக் கொள்வார்கள். ஆனால், ஏழை எளிய மாணவர்களுக்கும், முஹத்திதுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ஐநூறு திர்ஹம் செலவு செய்தனர். அண்ணல் நபிகளாரின் சுன்னத்தைப் பின்பற்றி, அந்த அழகிய முன்மாதிரியை ஒட்டியே தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த இமாமவர்கள் கூலிக்காரர்களோடு தாமும் சேர்ந்து உழைத்தும் இருக்கிறார்கள்.

இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் அம்பெய்வதில் திறமை பெற்றிருந்தனர். ஒரு முறை ஊருக்கு வெளியில் ஒரு பாலத்தைக் குறிவைத்து அம்பு விட்டார்கள். அது பாலத்தையே சேதப்படுத்தி விட்டது. அபூஜஃபர் என்பவரிடம் ‘பாலச் சொந்தக்காரரிடம் சென்று, நான் இந்தப் பாலத்தைச் சரி செய்து கொடுத்துவிடுகிறேன். அல்லது, சேதத்திற்குப் பணம் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார். பாலத்திற்கு உரிமையாளரான மாலிக் ஹுமைதீ இமாமின் மீது பற்றும் பாசமும் வைத்திருந்ததால், ‘இமாமுக்கு என் சலாம் சொல்லுங்கள், என் சொத்து முழுதுமே இமாமுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று கூறினார். அன்றிரவு இமாமவர்கள் ஐநூறு ஹதீதுகள் சொல்லி, முந்நூறு திர்ஹம் தர்மம் செய்தார்கள்.

ரமலான் மாதம் வந்துவிட்டால், தொழுகையில் ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள். பின்னர் நடுநிசி (சஹர்);வரை ஓதிக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு ஒரு குர்ஆன் முடிப்பார்கள். இரவும் பகலும் திருமறையை ஓதிக்கொண்டே இருப்பார்கள். ‘குர்ஆனை ஓதி முடிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு துஆ ஒப்புக் கொள்ளப்படுகிறது’ என்றும் கூறுவார்கள்.

இமாமின் புகழ்

மாணவப் பருவத்தில் இமாமவர்களைப் பார்த்த சுலைமான் இப்னு ஹர்ப் அவர்கள், ‘இந்தச் சிறுவன் எல்லையில்லாப் புகழ் பெறுவான்’ என்று சொன்ன வார்த்தைகள் பிற்காலத்தில் எழுத்துக்கு எழுத்து உண்மையாயின. இவர்களின் புகழ் இஸ்லாமிய நாடெங்கும் பரவியது. ஒரு நகருக்கு இமாமவர்கள் வருகிறார்கள் என்றால், அந்த நகரமே திரண்டு சென்று அவர்களை எதிர் கொண்டு வரவேற்கும்.

‘நைஷாப்பூருக்கு இமாமவர்கள் வந்தபோது அந்நகர மக்கள் மூன்று இடங்களில் பிரிந்து நின்று வரவேற்பளித்தார்கள். நான் எனது வாழ்நாளில் எந்த அறிஞருக்கும், அல்லது ஆட்சியாளருக்கும் இதுபோனற வரவேற்பைக் கண்டதில்லை’ என்று மற்றெரு முஹத்திதான இமாம் முஸ்லிம்(ரஹ்) கூறுகிறார்கள்.

சென்ற இடமெல்லாம் சிறப்பினை எய்திய இமாமவர்களைப் பலர் பலவிதமாகப் பாராட்டி இருக்கின்றனர். ஒரு சிலர் இமாமவர்களை ‘சய்யிதுல்ஃபுகஹா’ – ‘மத அறிஞர்களின் தலைவர்’ என்று வாழ்த்தினர். ‘நான் அவர்களுடைய மாணவன்’ எனக் கூறிக் கொள்வதில் வேறு சிலர் பெருமையடைந்தார்கள்.

புகாராவின் ஆட்சியாளர் காலிதுப்னு அஹ்மது இமாமவர்களைத் தம் வீட்டிற்கு வந்து தம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தர அழைத்தார்கள். ‘கல்வியைத் தேடி மனிதன் செல்லவேண்டும். அவனைத் தேடிக் கல்வி செல்லாது’ என்று இமாமவர்கள் மறுத்து விட்டார்கள். ‘மற்ற குழந்தைகளைச் சேர்க்காமல், தம் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாடம் நடத்த வேண்டும் என்று மறுபடியும் கேட்டுக் கொண்டார்கள். அதையும் இமாம் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருவருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. புகாரா நகர் முழுதும், புகாரா மட்டுமென்ன? இஸ்லாமிய உலகு முழுதும் இமாமவர்களின் புகழ் பரவியிருந்ததால், வெறும் அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு இமாமவர்களை அசைக்க முடியாது என்பதை புகாராவின் அதிகாரப்பீடம் உணர்ந்து கொண்டது.

எனவே, குறுக்கு வழியைக் கடைப்படிக்க முடிவு செய்தார் காலித், இமாமவர்களின் ஆசிரியரான இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களுக்கு எந்தக் குற்றம் சாட்டிக் கசையடி கொடுத்தனரோ, அதே குற்றச்சாட்டை, அவர்களின் மாணவர் புகாரீ(ரஹ்) மீதும் சுமத்தப்பட்டது. ‘குர்ஆன் படைக்கப்பட்டது அன்று’ என்பதே இஸ்லாத்தின் உண்மைக் கொள்கையாகும்.

இதற்கு மாற்றுக் கருத்தை அரசாங்கம் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினையைக் கிளப்பிவிடுமாறு ஒருசில கைக்கூலி அறிஞர்களை காலிது தூண்டிவிட்டார். ‘குர்ஆன் படைக்கப்பட்டதன்று’ என்ற நீதிக்குரல் இமாமவர்களிடத்திலிருந்து கிளம்பிய உடனேயே இமாமைக் குற்றவாளியாக்கி, அவர்களை புகாராவைவிட்டே அரசு வெளியேற்றி விட்டது. இமாமவர்களின் மனம் வெதும்பியது. புகாராவை விட்டு வெளியேறும்போது, ‘யாஅல்லாஹ்! இவர்கள் என்னை என்ன செய்வதற்கு நாடினார்களோ அதனை அவர்களுடைய விஷயத்திலும் காட்டிவிடுவாயாக!’ என மனம் நொந்து துஆச் செய்தார்கள்.

‘குணமெனும் குன்றேறி நின்றார் கோபம் கணமேயும் காத்தல் அரிது’ என்றாற்போல அநீதி இழைக்க நினைத்தவர்களுக்கே அந்த அநீதி திரும்பிவிட்டது. ஒருசில நாட்களில் ஆட்சியாளர் காலிதுப்னு அஹ்மத் கழுதையில் ஏற்றபட்டு ஊர்வலமாக கொண்டுவர ஆணையிடப்பட்டுப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

புகாராவை விட்டுப் புறப்பட்ட இமாமவர்கள், பேகந்த் எனும் நகரத்தினை வந்தடைந்தார்கள். எனினும், இமாமவர்களின் மீது சுமத்தப்பட்ட பழி, மிகத் தொலைவான இடங்களுக்கெல்லாம் பரவியிருந்ததால் பேகந்திலும் இமாமவர்களை ஏற்றுக் கொள்வதில் இரு பிரிவுகள் தோன்றிவிட்டன. ஒரு சிலர் அழைத்துக் கொள்ள விரும்பினர். அதனைச் சிலர் எதிர்த்தனர். இந்த துன்பவட்டத்தில் இருக்க இமாமவர்கள் விரும்பவில்லை. இதற்கிடையில் சமர்கந்துவாசிகள் இமாமவர்களைத் தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல முன் வந்தனர். அழைப்பை இமாம் ஏற்றுக் கொண்டனர். ‘காத்தங்’ என்ற ஊர்வரை சென்றுவிட்டாhகள். சமர்கந்திலும் இமாமை ஏற்றுக் கொள்வதில் இரு பிரிவுகள் ஏற்பட்டுவிட்டன. கர்த்தங்கில் வைத்து இமாமவர்களின் உடல் நிலை திடீரென மோசமடைந்தது. சமர்கந்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டதால். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக நோயுற்ற நிலையிலும் அங்கே சென்றுவிட முயன்றார். சமர்கந்தின் மக்கள் இரண்டு விதக் கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்த இமாமவர்கள் தஹஜ்ஜுது தொழுகையில் இவ்வாறு துஆச் செய்தார்கள்: ‘இறைவா! உமது பூமி மிகப் பரந்திருந்தாலும் என்மீது மட்டும் அது சுருங்கிவிட்டது. எனவே என்னை உன்பால் அழைத்துக் கொள்வாயாக!!’
இமாமவர்களின் மறைவு
பின், சமர்கந்துவாசிகள் ஒன்றுபட்டு அழைக்க வந்தபோது சமர்கந்துக்குப் புறப்படுவதற்காகத் தலைப்பாகை அணிந்து, செருப்பை மாட்டிக் கொண்டார்கள். ஒருசில அடிகள் எடுத்துவைத்த இமாமவர்கள், ‘இயலாமை அதிகரிக்கிறது. என்னை விட்டுவிடுங்கள்’ எனக் கூறினார். சிறிது நேரம் துஆச் செய்தார்கள். அறிஞர்க்கறிஞர், சய்யிதுல்ஃபுகஹா, முஹம்மது இப்னு இஸ்மாயீல் புகாரீ(ரஹ்) அவர்கள், ‘ஈதுல் பித்ர்’ இரவில் தங்களது 62வது வயதில் ஹிஜ்ரீ 256-ம் ஆண்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள். (இன்னாலில்லாஹி) மறுநாள் ளுஹர் தொழுகைக்குப் பின் கர்த்தங்கிலேயே அடக்கம் செய்யப்பட்டனர்.

இமாமவர்களின் நூல்கள்:

‘தாரீகுல் கபீர்’ (மாபெரும் வரலாறு): இது தமது 18-வது வயதில் எழுதியதாகும். மஸ்ஜிதுந் நபவியில் உள்ள மிம்பருக்கும், நாயகம்(ஸல்) அவர்களின் மகபராவுக்கும் மத்தியில் இருந்து கொண்டு நிலவொளியில் இதனை எழுதினார்கள். இதைப்பற்றி இமாமவர்களே, ‘புத்தகம் நீண்டு விடும் என்பதால், இந்நூலில் எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் இதில் கூறவில்லை, இருப்பினும், சுருக்கமாக எழுதியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நூலை பார்வையிட்ட இஸ்ஹாக் இப்னு ராஹ்வைஹி(ரஹ்) இதனை ‘ஓர் அதிசயம்’ என்றே வர்ணித்துள்ளார்கள்.

இந்நூலில், சஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉதாபிஈன்கள் ஆகியோரைப் பற்றி அகர வரிசையில் எழுதியுள்ளார்கள். ஒரே பெயரில் பலரிருந்தால், அவர்களின் தந்தையார் பெயரையும் சேர்த்து எழுதி உள்ளனர். இதில் அவரவருடைய நிறைவு குறைவுகளையும் எழுதி உள்ளனர். தந்தையார் பெயரைத் தெரிய முடியாமலிருந்தால் அவர்களை, ‘மறைந்த மனிதர்கள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இந்நூலை முஸ்லிம் கலைக் களஞ்சியம் (ஹைதராபாத்) பல பாகங்களாகப் பிரித்துப் பிரசுரித்து வெளியிட்டுள்ளது.

தாரீகுஸ்ஸகீர் (சிறிய வரலாறு):

இதன் சிறப்பம்சம், இறந்தவர்களைப்பற்றி, வருட அடிப்படையில் எழுதப்பட்டு இருப்பதாகும். இதனால் முதலில் இறந்தது யார்? அதற் கடுத்து இறந்தது யார்? என்றும் தெரிந்து கொள்ள இலகுவாகிறது.

அசத்தியமான கொள்கைகளை மறுத்து, ‘கல்கு அஃப்ஆலுல் இபாத்’  (பக்தர்களின் செயற்படைப்பு) எனும் நூல் எழுதியுள்ளனர். ‘கிதாபு ளுஅஃபாயிஸ் ஸகீர்’ எனும் நூலில் – தரம் குன்றிய ‘ராவீ’களைப்பற்றி அகரவரிசையில் எழுதியுள்ளனர். ‘தனித்து நிற்கும் ஒழுக்கம்’ எனும் பெயரில் நாயகம்(ஸல்) உடைய குணநலன்கள் பற்றிய ஒப்பற்ற ஒரு நூலை யாத்திருக்கிறார்கள். தித்திக்கும் திருமறைக்கு, ‘தஃப்ஸீருல்கபீர்’ என்ற பெயரில் விரிவுரை எழுதியுள்ளனர். ஒரே ஒரு ஹதீதை ரிவாயத் செய்தவர்களைப்பற்றி ‘கிதாபுல் உஹ்தான்’ எனும் நூலை இயற்றியுள்ளனர்.
‘கிதாபுல் இலல்’ (குறைகள்) என்ற நூலையும், ‘கிதாபுல் அஷ்ரபா’, ‘கிதாபுல் ஹிபா’, ‘பிர்ருல் வாலிதைன்’ போன்ற நூல்களையும் இமாமவர்கள் எழுதி உள்ளனர்.

புகாரா கண்ட அறிவொளி உலகனைத்தும் சுடர்வீசி ஒளி பரப்புமாக!
Source : http://albaqavi.com/home/?p=256

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails