Wednesday, November 16, 2011

அல்லாமா இக்பாலின் ஈரடிக் கவிதைகள்


மானுடத்தின் ரகசியம் நீ!
மலர்ந்த படைப்பின் ஆன்மா நீ!
உயிருடன் இருப்பவன் நீயென்றால்-உன்
உலகை நீயே உருவாக்கு

குருட்டுத் தனமாய்ப் பின்பற்றும்
குணம்தற் கொலையினும் இழிந்ததடா;
வழியை நீயே தேடிச்செல்;
வழிகாட்டியை எதிர் பார்க்காதே!

இலட்சி யத்திற் கப்பால்உன்
இலட்சி யங்கள் விரியட்டும்;
வாழ்க்கை என்பது என்றென்றும்
மாறாப் பயண ஆசையாடா!

இந்த இரவு பகல்களிலே
இறங்கிச் சிக்கிக் கிடக்காதே!
உன்றன் உயர்ந்த இலட்சிய
உலகம் இவற்றிற் கப்பாலே!

படைப்பின் அந்த ரங்கம் நீ
பார்வையில் உன்னை வெளிப்படுத்து!
சுயத்தின் ரகசியம் உணர்ந்துகொள்;
இறைவனின் விளக்க உரையாகு!

நபிகள் நாதர் வாழ்வில்நீ
நடந்தால் நாமே உன்கையில்!
இந்த உலகம் என்ன,விதி
எழுதும் கோலே உன் கையில்!

வாலிப இனத்தின் இதயத்திலே
வல்லூற் றுணர்ச்சி கிளர்ந்துவிட்டால்
அவர்கள் இலட்சியம் இங்கல்ல
அங்கே உயரே வானத்தில்!

உயரப் பறக்கும் பறவையே!
உனது சிறகை முடக்கி விடும்
இரையையைத் தின்று வாழ்வதினும்
இறந்து போவது சிறந்ததடா!

உறுதியான நம்பிக்கை
உலையா முயற்சி பேரன்பு
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில்
வாகை சூடும் ஆயுதங்கள்!

சுயரத் தத்தின் நெருப்பினிலே
சூடா வதுதான் இளமையாடா!
கடின உழைப்பால் இவ்வாழ்க்கையைக்
கசப்பைத் தேனாய் மாற்றிடடா!
Source : http://valaiyukam.blogspot.com

1 comment:

Zafar Rahmani said...

அல்லாம இக்பாலின் கவிதைகள் மாபெரும் சமுத்திரம். இதில் மூழ்கி முத்தெடுப்பது சாதாரணமான விஷயமில்லை. 
பதிவேற்றத்திற்க்கு பாராட்டுக்கள். மேலும் முயன்று பல கருத்துக்களை தமிழ்கூறும் நல்லுலகிற்க்கு தருவோம். ஓரிடத்தில் அவர்  கூறுகிறார்; 
" சமுத்திரத்திலிருந்து தாகித்திருப்போனுக்கு ஒரு பனித்துளிதானா? 
இது வ்ள்ளல் தன்மை அல்ல கடைந்தெடுத்த கஞ்சத்தனம்"
( பால் ஏ ஜிப்ரீல்) 

LinkWithin

Related Posts with Thumbnails