Sunday, November 13, 2011

நடுநிலை தவறிவிட்டால்...!

ஆரம்பிக்கப் பட்ட மூன்று மாதங்களில் முதலிடத்துக்கு முன்னேறித் தமிழகத்தில் சாதனை புரிந்துள்ளது புதிய தலைமுறை தொலைக் காட்சி. மூன்றே மாதங்களில் அனுபவம் வாய்ந்த பல முன்னணிச் செய்திச் சேனல்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது நிச்சயமாக பெரிய விஷயம் தான்!  அதேசமயம் மக்களின் மனநிலை என்ன என்பது இதன்மூலம் வெளியாகியிருப்பதையும் கவனிக்க வேண்டும்!

"உண்மையை உண்மையாக உரைக்கும் சானல்கள் தற்போது தமிழகத்தில் இல்லை" என்பதுதான் புதிய உதயமான "புதிய தலைமுறை"க்குக் கிடைத்த வெற்றியின் அடிப்படை!

தமிழ்நாட்டில் சேனல்கள் நடத்தும் யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் பின்புலம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து இருப்பதும் அந்தந்த அரசியல் கட்சி சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம், பிற எதிரிகட்சிகளின் சிறு சலனங்களும் பூதாகாரமாக்கப்படல், தமக்கு எதிரான விஷயங்கள் இருட்டடிப்பு போன்றவை சர்வசாதாரணம்!

சன் நியூஸ், கலைஞர் நியூஸ்,ஜெயா நியூஸ், மெகா டிவி, கேப்டன் டிவி, தமிழன் டிவி எனத்தமிழகத்தில் வலம் வரும் பல்வேறு நியூஸ் சேனல்களும் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களால் நடத்தப் படுகின்றன.

2G விவகாரம் குறித்து ஆரம்பக் கட்டத்தில் விலாவாரியாகப் பேசிய சன் நியூஸ் சேனல், "கண்கள் பனித்து இதயம் இனித்த" பின்னர் அது குறித்து வாயே திறப்பதில்லை. குறிப்பாக தயாநிதி மாறனுக்கு எதிரான செய்திகளை அதில் பூதக்கண்ணாடி கொண்டுதான் தேடவேண்டும்!

கலைஞர் நியூஸ் சேனலும் 2G ஊழல் விவகாரம் குறித்த உண்மை நிலையை மக்களுக்குச் சொல்வதில்லை. எதிர்க் கட்சியின் பெயர் நாறும் செய்தியாயிற்றே விடுமா ஜெயா நியூஸ் சேனல், 2G விவகாரம் குறித்து ஒரு குண்டூசி தரையில் விழுந்தால் கூட உடனே அது தலைப்புச் செய்தியாகி விடுகிறது.

அது போன்றே அரசின் சில கொள்கை முடிவுகள் நீதிமன்றத்தால் தடை செய்யப் படல், பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு என ஜெயலலிதா சம்பந்தப் பட்ட செய்திகள் ஜெயா நியூஸ் சேனலில் வெளிவரா. இவைபோன்ற செய்திகளைத் தம்முடைய மற்ற நிகழ்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு முதலில் வெளியிடும் சன் மற்றும் கலைஞர் செய்தி சேனல்கள்.

ஜெயலலிதாவின் அறிக்கைகள் வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து என நிறுத்தி நிதானமாக வாசித்து மக்களின் பொறுமையைச் சோதிக்கும் ஜெயா நியூஸ், அதேசமயம் பிறரின் அறிக்கைகளைக் குப்பைக்கு அனுப்பிவிடும்!

தமிழன், மெகா, கேப்டன் என எந்த ஒரு தொலைக்காட்சியும் மேற்கண்ட அவரவர் சார்ந்த விஷயங்களில் ஒன்றுக்கொன்று சளைத்தவைகளல்ல!

இதே சேனல்களை மாறி மாறிப்  பார்த்துப் பழகிப் போன தமிழக மக்களுக்கு "உண்மை உடனுக்குடன்" என்ற கோஷத்துடன் வந்த புதிய தலைமுறை தொலைக் காட்சி பிடித்துப் போனதில் பெரிய வியப்பேதுமில்லை. புதிய தலைமுறை தொலைக் காட்சியும் உண்மையை உணர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

"நடுநிலை தவறும் ஊடகங்களை மக்கள் விரும்புவதில்லை" என்ற உண்மையைச் செய்தி காணொளி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் உணர்ந்து உண்மையுடன் பொய்யைக் கலக்காமல் செய்தியைச் செய்தியாகத் தர முன் வர வேண்டும். இல்லையேல் தாங்கள் தான் நம்பர் 1 என மார்தட்டிக் கொள்ளும் எவரும் நம்பர் 1 நிலையில்  நீடிக்க முடியாது என்பதை மக்கள் வெகுவிரைவிலேயே உணர்த்தி விடுவார்கள்.

Source : http://www.inneram.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails