Wednesday, October 12, 2011

உலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்


கேள்வி : குறிப்பிட்ட ஒரு மஸ்அலாவில் உலமாக்கள் வேறுபட்ட பல கருத்துக்களை முன் வைக்கும் போது பொதுமக்களாகிய நாங்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகிறோம். இது பற்றி என்ன கூறுகிறீர்கள்? (கேள்வியின் சுருக்கம்)
ஃபத்வா: ஒரு விஷயத்தில் உலமாக்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கும் போது அவற்றில் எதைப் பின்பற்றுவது என்பதில் மக்கள் மத்தியில் தடுமாற்றம் ஏற்படுவதைக் காண முடிகிறது. ஆனால் இது தடுமாற்றத்திற்கும் தயக்கத்திற்கும் உரிய ஒரு பிரச்சினையே இல்லை. அதாவது ஒரு மஸ்அலாவில் உலமாக்கள் கருத்து வேறுபட்டால் அதில் யாருடைய கருத்து சத்தியத்திற்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருடைய கருத்தையே எடுக்க வேண்டும். அதனைத் தீர்மானிக்க அவரது அறிவாற்றல் உறுதியான ஈமான் என்பவற்றைத் துணையாகக் கொள்ளலாம்.
ஒரு நோயாளி விஷயத்தில் இரண்டு மருத்துவர்கள் வேறுபட்ட கருத்துக்களைச் சொல்லும் போது அந்த நோயாளி நம்பகமான ஒருவரின் கருத்தை எடுத்துக் கொள்வார். அவ்வாறுதான் மார்க்க விஷயத்தில் (பொது மக்கள்) செய்ய வேண்டும்.
சில வேளைகளில் இரண்டு அறிஞர்கள் ஒரே பிரச்சினையில் இருவிதமான கருத்துக்களைக் கூறுவர். அவ்விருவருமே மக்களிடத்தில் நம்பகமானவராகவும் இருப்பர். இப்படியான சந்தர்ப்பத்தில் யாருடைய கருத்தை எடுத்துக் கொள்வது என்பதில் அறிஞர்கள் மத்தியில் பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன:
அ) அக்கருத்துக்களில் மிகக் கடுமையானதை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதுவே பேணுதலாகும்.
ஆ) அவற்றில் மிக இலகுவானதை எடுக்க வேண்டும். அதுவே ஷரீஅத்தின் அடிப்படையாக உள்ளது.
இ) அவற்றில் விரும்பிய ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.
இம்மூன்று கருத்துக்களில் இரண்டாவதே மிகச் சரியானதாகும். அதாவது ஒரு விஷயத்தில் நம்பிக்கைக்குரிய அறிஞர்கள் பல கருத்துக்களைக் கூறினால், அவற்றில் மிக இலகுவானதையே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதுவே இஸ்லாமிய மார்க்கத்தின் இலகுத் தன்மையோடு ஒத்துச் செல்லக் கூடியதாகும்.
‘அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகிறான். அவன் உங்களுக்குக் கடிடத்தை விரும்புவதில்லை’ (அல்குர்ஆன் அல்பகரா 2:185)
‘இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை’ (அல்குர்ஆன் அல்ஹஜ் :78) என்று குர்ஆன் கூறுகிறது.
மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘இலகு படுத்துங்கள். கஷ்டப்படுத்தாதீர்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி)
உள்ள கருத்துக்களில் இலகுவானதை எடுத்துக் கொள்ளாமல் நம்பகமான அறிஞர்களின் முடிவை ஏற்றுக் கொள்ளல் என்று நாம் கூறுவதையே ஒரு பொது விதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக, இவ்விதி யாருக்கெல்லாம் ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு முடிவை எடுக்கும் ஆற்றல் இல்லையோ அவர்களுக்கு மட்டும் உரிய ஒன்றாகும். மாணவர்கள் போன்ற ஆய்வு செய்யும் ஆற்றலுள்ளவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கூறப்பட்ட கருத்துக்களை அல்குர்ஆன் சுன்னா ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவற்றில் அல்குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் ஒத்துவரக் கூடியதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Source : http://islamthalam.wordpress.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails