Thursday, June 23, 2011

ஜும்ஆ மட்டும் கூடுமா?

ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் ஊரில் ஐந்து பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடைபெறுகிறது. அவை போக, ஒரு பள்ளிக்கூடத்தில் வெள்ளிக்கிழமை, குத்பா+ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துகின்றனர்.

ஐவேளைத் தொழுகை நடத்தப்படாத இடத்தில் இவ்வாறு வெள்ளிக்கிழமை மட்டும் ஜும்ஆத் தொழுவதற்கு இஸ்லாமிய முன்னுதாரணம் உண்டா? ஐவேளை தொழுகை நடத்தப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்துவது கூடுமா?

- நிஜாமுத்தீன், அதிராம்பட்டினம்.


தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
ஜும்ஆத் தொழுகை மட்டும் தொழுவதற்கென ஜமாஅத்தினர் ஓரிடத்தைத் தேர்வுசெய்து, அந்த இடத்தைக் குறிப்பிட்டு இன்ன இடத்தில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்படும் என்று மக்களுக்கு அறிவித்து, அங்குத் தொடர்ந்து ஜும்ஆத் தொழுகையை மட்டும் நடத்திக்கொள்ளலாம். இதற்கு மார்க்க ரீதியாகத் தடையேதும் இல்லை.
ஈமான் கொண்டோரே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் நல்லறிவுடையோராக இருப்பின் இதுவே உங்களுக்கு நன்மை பயப்பதாகும் (அல்குர்ஆன் 62:9).
"வெள்ளிக்கிழமை நாளில் ஜும்ஆத் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவுகூர தொழுமிடத்துக்குச் செல்லுங்கள்!" என இறைவசனம் உத்தரவிடுகின்றது.
ஜும்ஆத் தொழுகை நடத்தப்படும் இடம் பள்ளிவாசல் அல்லது கல்விக்கூடம், மண்டபம், திடல் போன்ற இடமாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட இடத்தில் ஜும்ஆத் தொழுகைக்கான அழைப்பை அறிவித்து, தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தி, உரைக்குப்பின் இமாமைப் பின்பற்றிக் கூட்டாக இரண்டு ரக்அத்கள் தொழுதிட வேண்டும். இதுவே ஜும்ஆத் தொழுகைக்கான நிபந்தனையாகும்.
"எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (தாம் இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) பரிந்துரை செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார் (நூல்கள்:புகாரி 335, 438 முஸ்லிம் 810, நஸயீ, அஹ்மத், தாரிமீ).
''எனக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதில் இஸ்லாம் தடைசெய்துள்ள பிற மதத்தினர் வழிபடும் தெய்வங்களின் நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லாதிருப்பின் பள்ளிக்கூடத்தில் வாரத்துக்கு ஒருமுறை ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துவதைத் தவறென்று கூறமுடியாது!
(இறைவன் மிக்க அறிந்தவன்)
Source : http://www.satyamargam.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails