Tuesday, June 21, 2011

கூட்டுத் துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்


எழுதியவர்-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
ஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும்.
இந்த சுன்னத்தான வழிமுறைக்கு மாற்றமாகவே தொழுகைக்குப்பின் ஒருவர் துஆ கேட்க மற்றவர்கள் ஆமீன் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஐவேளை தொழுகைகளுக்குப் பிறகு ஐந்து மாதிரியான அமைப்பில் துஆக்களை உருவாக்கிக் கொண்டு ஓதிவருகிறார்கள். தொழுகை நடாத்தக் கூடிய இமாம் அந்த துஆக்களை ஓத மற்றவர்கள் கிளிப் பிள்ளைபோல் “ஆமீன்” சொல்லி விட்டு போகிறார்கள். அது மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஐந்து மாதிரி -இந்த பள்ளி இமாம் ஓதுகிறமாதிரி- துஆ ஓத சஹாபாக்கள் ஆமீன் சொன்னாரகளா? ஏன்பதை கூட விளங்குவதில்லை.

இமாம் என்ன துஆ ஓதுகிறார். எதைப் பற்றி அவர் துஆ கேட்கிறார். அதன் பொருள் என்ன? யாருடைய நிலையை அறிந்து யாருக்காக துஆ கேட்கிறார். அவருடைய கஷ்டத்தை மனதில் வைத்து துஆ கேட்கிறாரா? பள்ளிக்கு வருகை தந்த ஒவ்வொருவருடைய மனநிலையை அறிந்து புரிந்து துஆ கேட்கிறாரா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் மக்களும் “ஆமீன்! ஆமீன்!” என்று சொல்லிவிட்டு வருகிறார்கள்.
தொழுகை முடிந்தபின் இமாம், சுப்ஹா னல்லாஹ்(33), அல்ஹம்துலில்லாஹ்(33) அல்லாஹு அக்பர்(34) என்ற எண்ணிக் கையில் திக்ருகளை மாத்திரம் சொல்லுவார். மக்களும் அதனை சொல்லிக் கொண்டிருப்பர். இமாம் திக்ருகள் சொல்லி முடிந்ததும் சப்தமிட்டு துஆ ஓத ஆரம்பித்து விடுவார். உடனே மக்களும் செய்கின்ற திக்ருகளை இடைநடுவில் நிறுத்திவிட்டு இமாமின் துஆவிற்கு ஆமீன் சொல்ல ஆரம்பித்து விடுவர்.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளை பூரணமாக ஓதி அல்லாஹ்வின் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள் அந்த திக்ருகள், அவ்ராதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் யாரோ கண்டுபிடித்து உருவாக்கிய துஆவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுன்னாவை புறக்கணித்து விடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் தங்களது தேவைகளை முறையிட்டு பிரார்த்திக்கக் கூடிய சிறந்த சந்தர்ப்பம் இது.
தனிமையாக இருந்து உள்ளம் உருகி தங்களுடைய கஷ்டங்களை தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்திக்க வேண்டுமே தவிர மற்றவர்களுடைய தேவைகள் என்னவென்று தெரியாத ஒருவர் (இமாம்) தயாரித்து வைத்த துஆவுக்கு ஆமீன் சொல்வது அறிவுள்ள செயலாகுமா?
துஆ ஓதுபவர் தன்னையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றுகிறார். பள்ளிக்கு வரக்கூடிய (தொழக்கூடிய) நூற்றுக் கணக்கான மக்களுக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் தேவைகள் இருக்கும். ஒவ்வொருவருடைய பிரச்சினைகளும் வெவ்வேறானதாக இருக்கும். எனவே அவர்கள் தான் அவர்களுடைய உண்மையான நிலையை அறிந்து உள்ளம் உருகி சொல்லுகின்ற விடயங்களை நன்குபுரிந்து தனக்கு தெரிந்த மொழியில் அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்திக்க வேண்டும். இதுதான் அறிவுபூர்வமான செயலும் கூட.
என்னுடைய கஷ்டங்கள் என்ன? தேவைகள் என்ன என்று எனக்கு மட்டும்தான் தெரியும். மற்றவருடைய கஷ்டங்கள் துன்பங்கள் என்ன என்று எனக்குத் தெரியாது. நான்தான் எனது தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். மற்றவர்கள் அவரவர்களுடைய தேவைகளை முறையிட வேண்டும்.
இமாம் தன்னுடைய தேவையை கருதி துஆவை கூட்டிக் கொள்ளவோ செய்வார். அவசர தேவை இருந்தால் அவசரமாக ஓதிவிட்டார் நகர்ந்து விடுவார். மக்களுக்கு உண்மை தெரியாததால் துஆவின் பரகத் கிடைத்ததாக எண்ணிக் கொண்டு கைகளை முகத்தில் தடாவிவிட்டு போய்விடுவார்கள்.
தொழுகை நடாத்தக் கூடிய இமாமின் பிரச்சினைகள் என்னவென்று தொழ வரக் கூடிய மக்களுக்குத் தெரியாது. தொழுகைக்கு வந்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்று இமாமுக்கும் தெரியாது. இந்நிலையில் இமாம் ஒருசில வசனங்களை அரபியில் எழுதி தயார்படுத்தி பாடமாக்கி கூற, அதற்கு மற்றவர்கள் ஆமீன் சொலலவேண்டும் என்பது அறிவீனமில்லையா?
பணத்தை பறிகொடுத்து..
பிள்ளையை பறிகொடுத்து..
மனைவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து..
தொழிலை இழந்து..
சொத்தையிழந்து..
அனியாயத்திற்கு ஆளாகி..
வறுமையில் தள்ளாடி..
சோற்றுக்கு வழியின்றி..
ஏழ்மையில் உழன்று..
குடும்ப பிரச்சனையில் சிக்குண்டு..
சமூக பிரச்சனையில் அல்லல்பட்டு..
என பலரும் பல பிரச்சனைகளுடன் பள்ளிக்கு வருபவர். இந்நிலையில் இவர்கள் தயாரித்து வைத்திருக்கும் துஆவிற்கு ஆமீன் சொல்வது பொறுத்தமா? அல்லது தானாக தன்னுடைய பிரச்சனைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு தனது மனதில் உள்ள பாரத்தை இறக்கி விடுவது பொறுத்தமா?
“துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
வணக்கமாக புரிகின்ற இந்த துஆவை பணிவுடன் அடக்கத்துடன் அச்சத்துடன் ஆசையுடன் கேட்க வேண்டும். தாழ்ந்த குரலில் கேட்கவேண்டும் மனம் உருகிய நிலையில் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறோம் என்று அறிந்த நிலையில்- அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்த நிலையில் துஆ கேட்க வேண்டும். அப்போது தான் அந்த வணக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
துஆவுக்கான பணிவும் அச்சமும் தனியாக கேட்கும்போது தான் வருமே தவிர கூட்டத்தோடு கூட்டமாக சப்தமிடுவதால் வருவதில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இருந்து சப்தமிடும்போது எதைக் கேட்கிறோம் என்ற சிந்தனையோ விளக்கமோ வராது. எல்லோரும் ஆமீன் சொல்லும் போது நாமும் ஆமீன் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு மட்டும் வரும். கூட்டத்தில் எவராவது அழுவது போல் பாசாங்கு செய்தால் அதைப்பார்த்து பாசாங்கு காட்டி நடிக்கவோ அல்லது சிரிக்கவோ எண்ணம் வரும். ஒவ்வொருவரும் தங்களுடைய நிலையிலிருந்து சிந்தித்தால் உண்மை புரியும். இது எல்லாவற்றையும் நபி(ஸல்) அவர்கள் கூட்டு துஆ ஏற்படுத்தியதில்லை.
எனவே பகுத்தறிவுக்கு பொறுத்தமற்ற இந்த கூட்டு துஆவினால் மக்களை மடையர்கள் என்று கூறுவதை தவிர வேறெதுவுமில்லை. கூட்டு துஆ என்ற அம்சத்தை உருவாக்கி பிறப்பு முதல் இறப்பு வரை கலக்கிக் கொண்டும் பணத்தை பறித்துக் கொண்டுமிருக்கிறார்கள். மக்கள் இதன் விபரீதத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் தொழுகை முடிந்ததும் ஒவ்வொரு வரும் தனித்தனியாக அவ்ராதுகளை ஓதி விட்டு தனித்தனியாக தங்களுடைய தேவைகளை அல்லாஹ்விடம் ஒப்புவித்து பிரார்த்திக்க வேண்டும்.
தொழுகை உட்பட ஏனைய சந்தர்ப்பங்களில் கூட்டாக துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூற ஆதாரமுண்டு என சில செய்திகளை காட்டுகிறார்கள். அதற்கு சஹீஹான ஆதாரங்கள் எதுவுமில்லை.
Source : http://www.islamkalvi.com/portal/?p=5398

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails