Thursday, June 9, 2011

உலகப்புகழ் பெற்ற ஓவியர் ஹுஸைன் காலமானார்

சர்வதேசப் புகழ் பெற்ற இந்திய ஓவியர் ஹுஸைன் இன்று அதிகாலை தன்னுடைய 96 ஆவது வயதில் லண்டனில் உள்ள ரோயல் புரொம்டன் மருத்துவமனையில் காலமானார்.

சர்ச்சைக்குரிய பல ஓவியங்களை வரைந்த இவரது முழுப் பெயர் மக்பூல் ஃபிதா ஹுஸைன். இவர், 1915 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இந்தியாவில் பிறந்தார். 1940 களின் பிற்கூற்றில் ஓர் ஓவியராகப் பிரபலமடைந்த இவரது முதலாவது ஓவியக் கண்காட்சி 1952 ஆம் ஆண்டு சூரிச்சில் இடம்பெற்றது. அதன் பின் இவர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பிரசித்தி பெற்றவரானார்.

ஃபோபஸ் சஞ்சிகையினால் 'இந்தியாவின் பிக்காஸோ' என வர்ணிக்கப்பட்ட இவர், 1955 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயர் விருதான 'பத்மஸ்ரீ' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இவரது முதல் திரைப்படமான 'த்ரூ தி ஐஸ் ஒஃப் பெயிண்டர்' (Through the Eyes of a painter) பேர்ளின் திரைப்பட விழாவில் 'கோல்டன் பெயார்' விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. கஜகமினி (Gaja Gamini), மீனாட்சி: எ ட்டேல் ஒஃப் த்ரீ சிட்டீஸ் (Meenaxi: A Tale of Three Cities) என்பன இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இவர், இந்தியாவின் பத்மபூஷன் (1973), பத்ம விபூஷன் (1991) ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..

1970 களில் இவர் வரைந்த சில ஓவியங்கள் குறித்த சர்ச்சைகள் 1996 ஆம் ஆண்டு சூடுபிடிக்கலாயின. இந்துக் கடவுளரின் நிர்வாண ஓவியங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

1992 ஆம் ஆண்டு ஓவியர் ஹுஸைனின் 92 வயதில் அவருக்கு கேரள அரசின் கௌரவ விருதான ராஜா ரவிவர்மா விருது வழங்கப்படப் போவதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, இந்து அமைப்புக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தின. விருதுக்கான அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வழங்கப்படவிருந்த விருது ஒத்திவைக்கப்பட்டது.
ஹுஸைனின் ஓவியங்கள் இந்து அமைப்புக்களின் கடும் கோபத்துக்குப் பாத்திரமாயின. பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் அவரது வீடு சுற்றிவளைக்கப்பட்டு பலமுறை தாக்குதலுக்குள்ளானது. அதையடுத்து, இடையறாத கொலை மிரட்டல்களும் வரத் தொடங்கவே, 2006 ஆம் ஆண்டு அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். தாய் நாட்டைவிட்டு வெளியேறிய கடந்த சில வருடகாலத்தை துபாய் மற்றும் லண்டனில் கழித்த இவருக்கு, கடந்த வருடம் (2010- ஜனவரியில்) கட்டார் அரசினால் பிரஜா உரிமை வழங்கப்பட்டது.

தான் கைதுசெய்யப்படுவது தொடர்பான அச்சுறுத்தல்களையெல்லாம் மீறி, என்றேனும் ஒருநாள் தன் தாயகம் திரும்ப வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்த சர்வதேசப் புகழ்பெற்ற ஓவியர் ஹுஸைனின் அந்தக் கனவு நனவாகவில்லை. இருதயக் கோளாறினால் தன்னுடைய 96 ஆவது வயதில் லண்டன் மருத்துவமனையில் அவர் இன்று காலமானார்.
Source :http://www.inneram.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails