Saturday, April 23, 2011

நீரின்றி அமையாது உலகு ...

மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400 ஆண்டுகளுக்குமுன் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகையில்:
அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான் ...” (24:45) என்றும்
... நாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் நீரை வாழ்வின் மூலாதாரமாக்கினோம் ...” (21:30) என்றும் கூறுகிறான்.
அல்லாஹ் இவ்வசனங்களின் மூலம் ஒவ்வொரு உயிரினத்தினதும் மூலக்கூறு நீர் என்பதனை விளக்குகிறான். மேலும் அல்லாஹ் நீரைப் பற்றி எவ்வாறு கூறுகின்றான் என்று பார்ப்போமானால் அவன்தான் வானத்திலிருந்து திட்டமிட்ட அளவில் நீரை இறக்குகின்றான்.
அவ்வாறு இறக்கப்பட்ட நீரை அவனே பூமியில் தேக்கி வைக்கின்றான். அதேபோன்று அவன் நாடினால் அதனை பூமியில் தேக்கிவைக்காமல் போக்கிவிடவும் முடியும். நீரை மையமாகக் கொண்டு வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் பலவகைக் காய்-கனிவகைகளையும் அதிலிருந்து வெளிப்படுத்துகின்றான்.
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை (மழையை) நாம் இறக்கிவைக்கிறோம்; அதன் பின்னர் அதனைப் பூமியில் தங்குமாறு செய்கின்றோம். நிச்சயமாக அதனைப் பூமிக்குள் இழுக்கப்பட்டுப் போக்கிவிடவும் நாம் ஆற்றலுடையோர் ஆவோம்
பின்னர் அதனைக்கொண்டு பேரீச்சை, திராட்சைகள் போன்ற தோட்டங்களை உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கின்றோம். அவற்றில் உங்களுக்கு அநேகக் கனி வகைகள் இருக்கின்றன. இன்னும் அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுகின்றீர்கள்” (23:18.19)
நாமன்றோ (வானிலிருந்து மழை) நீரை நிறைவாகப் பொழிய வைக்கிறோம்?” (80:25)
நிச்சயமாக அல்லாஹ்தான் பல பாகங்களிலிருந்து மேகங்களை (ஓரிடத்துக்கு) ஓட்டி, ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இணைக்கிறான் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவேண்டாமா? பின்னர் அம்மேகங்களின் இடையிலிருந்து மழையைப் பொழியச் செய்வதை நீங்கள் காண்கின்றீர்கள். அவனே வானத்திலுள்ள மலை(யொத்த முகில்)களிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதனைக் கொண்டு அவன் நாடியவர்கள் (இடத்தின்) மீது விழச் செய்கிறான். இன்னும் அவன் நாடியவர்களை விட்டும் அதனைத் திருப்பி விடுகிறான் ...” (24:43).
இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ்தான் நீரை இறக்குகின்றான் மேலும் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான் எனக் கூறுகின்றான். அல்லாஹ் நீரைப் பற்றி இன்னொரு வசனத்தில் “மனிதன் அருந்தும் வகையில் சுவையாக நீரை இறக்குகின்றான் இவ்வாறு அருந்துவதற்கு உகந்த சுவையான நீரை அவன் நாடினால் அருந்த முடியாத வகையில் அதனை உவப்பு தன்மை கொண்டதாக இறக்கவும் முடியும்” எனக் கூறுகின்றான்.
நீங்கள் குடிக்கின்றீர்களே, அந்த நீரைப் (பற்றி யோசித்துப்) பார்த்தீர்களா? அதை மேகத்திலிருந்து இறக்கிவைப்பவர் நீங்களா? நாமா? நாம் நாடினால் அதனை நீங்கள் குடிக்க முடியாத உப்பு நீராக்கி இருப்போம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?” (56:68-70).
இவ்வாறு அல்லாஹ் கூறியபின் நீங்கள் ஏன் எனக்கு நன்றி செலுத்தத் தயங்குகின்றீர்கள்? எனக்கு நன்றி செலுத்துங்கள் எனக் கூறுகின்றான்.
ஏனெனில் மனிதர்கள்தாம் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு உரியவாறு நன்றி செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் இப்பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றன.
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு வானங்களிலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரங்களும் பூமியின்மீது ஊர்ந்துதிரியும் பிராணிகளும் மனிதர்களில் அதிகமானோரும் சிரம்பணிந்து வணங்குகின்றனர் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?...” (22:18).
எனவே, அல்லாஹ் அருளிய அருட்கொடைக்கு மனிதர்களாகிய நாம் அனைவரும் அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

- ஏ. எம். அஸ்லம் - (இஸ்லாஹிய்யா வளாகம்)
Source : http://www.satyamargam.com/1693?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Satyamargam+%28SatyaMargam.com%29

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails