Wednesday, November 3, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 6

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

இஸ்லாம் உலகிற்கு வழங்கிய நன்மைகள் ஏராளம். மனிதகுலம் அடைந்த பயன்களும் ஏராளம். எந்தவொரு நெறிமுறைகளும் இல்லாமல் வாழ்ந்த மனிதர்களுக்கு மத்தியில், மனிதன் எழுந்தது முதல் தூங்கும் வரை அவனுடைய ஒவ்வொரு காரியத்திலும் வந்து அவனை பண்புள்ள மனிதனாக வாழ வழி காட்டியது இஸ்லாம். உலகில் உள்ள மனிதன் யாராக இருந்தாலும் அவனிடம் இஸ்லாத்தின் தாக்கம் ஏதாவது ஒரு வகையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் நாகரீகம், மனித நேயம், நீதி இவைகள் அனைத்தும் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நேரத்தில் இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கமாய் அடிமையாய் கிடந்த மக்களை தட்டி எழுப்பி அவனின் வாழ்வியல் நெறியாக மனதார ஏற்று நடக்க வைத்து சுயமரியாதை உள்ள மனிதனாக  மாறச்செய்தது.

படிப்பறிவு இல்லாதவர்களையும், வறுமையுடன் வாழ்ந்தவர்களையும் பண்புடன் வாழச்செய்தது. இஸ்லாம் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் தற்பொழுது நடந்து வரும் சீரான நிர்வாக அமைப்பு முறை (பஞ்சாயத்து முதல் செங்கோட்டை வரை) இருந்திருக்காது. நிர்வாகத்தை, பண்பை, மனிதநேயத்தை கற்று கொடுத்த இஸ்லாம் அப்படியே இன்றும் வைரமாக மின்னிக்கொண்டு இருக்கிறது வற்றாத நதியாய். இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் செயல்பாட்டால் இஸ்லாத்திற்கு களங்கம் என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன் இஸ்லாத்திற்கு எந்த களங்கமுமில்லை, பின்பற்றுபவர்களின் பண்பற்ற செயலால் அவர்களுக்குத்தான் களங்கம். கோழிக்கு குப்பையில் வைரம் கிடைத்தால் என்ன செய்யும். கோழி  அறியுமா? வைரத்தின் மதிப்பை.

உலக மக்களை நெறிப்படுத்திய இஸ்லாத்தைப் பின்பற்றுகிறவர்களின் நிலை எப்படி உள்ளது. இஸ்லாத்தின்படி வாழ விரும்புகிறார்களா? முயற்சி எடுக்கிறார்களா? வல்ல அல்லாஹ் கொடுத்த பொருளாதாரத்தை வீண் விரயம் செய்பவர்களின் வீடுகளில் குர்ஆனின் தமிழாக்கம் இருக்கிறதா? தமிழாக்கம் வாங்கியவர்கள் முழுவதுமாக படித்திருக்கிறார்களா? மார்க்கத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கான  புத்தகங்கள் இருக்கிறதா?  கண்மனி நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, நபிமொழி புத்தகங்கள் இருக்கிறதா? தினமும் குர்ஆன் ஓதப்படுகிறதா? பெண்கள், பிள்ளைகள் தொழுகிறார்களா? எந்தவொரு செயல் செய்யப்படுவதற்கும் முன்னால் மார்க்கம் இந்த காரியத்தைப்பற்றி என்ன சொல்கிறது, காரியம் கூடுமா? கூடாதா? என்ற கேள்விகள் கேட்கப்படுகிறதா? அதிகமான பதில் இல்லையே என்றுதான் நம்மிடம் வரும். இஸ்லாத்தை பின்பற்றும் நாம் என்ன செய்யப்போகிறோம்.

இன்று முஸ்லிம்களில் படித்தவர்கள் ஏராளம், செல்வந்தவர்களும் ஏராளம் ஆனால் இஸ்லாம் கடைபிடிக்கப்படுகிறதா? கேள்விக்குறியே? இஸ்லாத்தை பின்னுக்குத் தள்ளி நமது உலக வாழ்க்கையை முன்னால் கொண்டு வந்து விட்டோம். இஸ்லாம் வேறு உலகம் வேறு என்றாகிவிட்டது. இஸ்லாத்தைப் பற்றி நாங்கள் அறியாமலா இருக்கிறோம் ஏன் இவ்வளவு விளக்கம் என்று யாருக்காவது மனதில் தோன்றலாம். தொடர்ந்து வரும் நிகழ்வுகளுக்கு இஸ்லாத்தை பற்றிய அறிமுகம் தேவையாய் இருக்கிறது. நாம் செய்யும் காரியம் வல்ல அல்லாஹ்வும்  நபி(ஸல்) அவர்களும் காட்டி தந்த வழியா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

தற்பொழுது தமிழக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வட்டி கடைகள் படையெடுத்து வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் ஊர்களில்தான் அதிகமான வட்டி கடைகள் பெருகிக்கொண்டே போகிறது. எதற்கு ஆதரவு அதிகமாக இருக்கிறதோ அது வளர்ந்து கொண்டேதான் போகும். முஸ்லிம் சமுதாயம் அதிகம் வாழும் ஊர்களாக பார்த்து வட்டிக்கடைகள் வளர்ந்து வருவதை பார்க்கும்பொழுது கவலை அளிக்கிறது.

வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் வந்து கடை திறக்க இடம் கொடுப்பது முஸ்லிம் பெயர் தாங்கிகளாக இருப்பவர்களே. வட்டி கடை வைப்பதற்கு நம் இடத்தை கொடுக்கிறோமே என்ற சிந்தனை இல்லை. அல்லாஹ்வின் அச்சமும், மறுமை பயமும் இருந்தால் தங்களின் இடத்தை வட்டி கடை வைப்பதற்கு வாடகைக்கு விடுவார்களா?

சில இடங்களில் கேள்விப்படும் செய்திகள், வட்டி கடை வைப்பவர்கள் சிறிது காலம் கழித்து அந்த இடத்தையே விலைக்கு வாங்கி விடுகிறார்கள். இடத்தின் உரிமையாளர்கள் வட்டிக்கு வாங்கியிருப்பார்கள், இந்த தொகை வட்டி, குட்டி என்று திருப்பி செலுத்த முடியாமல் போனபிறகு இடத்தையே இழந்து பரிதவிக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கி மனிதர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா? அல்லது கோபப்படுவதா?

இப்படித்தான் வாழ வேண்டும் என்று மார்க்கம் வரையறுத்து கூறியிருக்க, எப்படியும் வாழலாம் என்று பெயர்தாங்கி முஸ்லிம்கள் வாழ ஆரம்பித்து விட்டார்கள். வட்டியினால் ஏற்பட்ட பல கொடுமையான நிகழ்வுகளை செய்தி தாள்களின் மூலம் படித்திருப்பீர்கள். கடை கட்டி வாடகைக்கு விடுபவர்கள் வட்டிகடைகளுக்கு வாடகைக்கு விடுவதில்லை என்ற உறுதியான முடிவு எடுத்தால் நலமாக இருக்கும். செய்வார்களா???

சென்ற தொடரில் சகோதரிகளின் கடனைப்பற்றி சொல்லியிருந்தேன். இதில் பாக்கியுள்ள கடன்களை   தொடர்ந்து பார்க்கலாம்:

ஏலச் சீட்டு (வட்டி)கடன்:
இந்த ஏலச் சீட்டு கடன் ஆண்கள், பெண்கள், நிறுவனங்கள் என்று அனைவரும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்ப்போம். குறைந்தது 10பேர் சேர்ப்பார்கள். தலைக்கு 1000ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்.(அதிகமாகவும் இருக்கும், நிறுவனங்கள் நடத்தும் சீட்டு லட்சக்கணக்கிலும் இருக்கும்).

இந்த சீட்டில் ஏலம் கேட்கப்படும். மொத்தம் 10ஆயிரத்தில் உறுப்பினர்கள் எல்லோரும் ஏலம் கேட்டு யார் அதிகமாக கேட்கிறார்களோ உதாரணத்திற்கு 5ஆயிரத்திற்கு கேட்டால் இதற்கு மேல் யாரும் கேட்கவில்லை என்றால் கேட்டவருக்கு 5ஆயிரம் மட்டும் கிடைக்கும். கேட்டவரும் மற்றவர்களும் தலைக்கு 500ரூபாய் கட்டினால் போதும். முதல் சீட்டுக்கு மட்டும் நடத்துபவர், உறுப்பினர்கள் பணம் மொத்தம் 10ஆயிரம் வரும். இந்த முதல் சீட்டு பணத்தை முழுவதுமாக நடத்துபவர் எடுத்துக்கொள்வார்.

சீட்டை நடத்துபவருக்கும், கடைசி சீட்டை அடைபவருக்கும்தான் இதில் லாபம். இடைபட்டவர்களுக்கு நஷ்டம்தான். 5ஆயிரம் எடுத்தவர் 10ஆயிரம் வரை கட்டினால் இது வட்டி இல்லையா? நடத்துபவர்களை கேட்டால் வட்டி இல்லை என்பார்கள். இது தெளிவான வட்டி.

பலவருடங்களுக்கு முன் இந்த சீட்டு பிரச்சனையால் இரண்டு சகோதரிகளுக்கு இடையே வாய் பேச்சு கைகலப்பாகி கட்டிப்புரண்டு தெருவில் ஓடும் கழிவு நீரிலும் புரண்டு சண்டை. தெருவில் உள்ள பெண்கள் யாருக்கு சாதகமாக நடந்து கொள்வது என்று குழப்பத்தில் வேடிக்கை பார்க்க, நான் இருவரையும் சத்தம் போட்டு (இருவரும் எனக்கு தெரிந்தவர்கள் என்பதால்) மிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை விலக்கினேன். (குடிக்கு அடிமையான ஆண்கள் இதுபோல் சண்டை போடுவதை பார்த்திருந்த எனக்கு பெண்கள் சண்டை போடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்). ஷைத்தானிடம் உள்ள சூழ்ச்சியில் இந்த ஏலச்சீட்டும் ஒன்று என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.


ஏல சீட்டு நடத்திய நிறுவனங்களும், தனிநபர்களும் அடிக்கடி தலைமறைவான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும். புதுப்புது பெயர்களில் மீண்டும் நிறுவனங்களும், தனி நபர்களும் இந்த ஏமாற்று வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் நடத்துபவர்களும் ஏமாற்றுவார்கள். உறுப்பினராக உள்ளவர்களும் பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விடுவார்கள். நியாயமாக சில பேர் நடத்தினாலும் இந்த சீட்டு முழுக்க முழுக்க வட்டியின் அடிப்படையில்தான் நடந்து கொண்டு இருக்கிறது. சகோதர, சகோதரிகள் யாராவது தற்பொழுது இந்த சீட்டில் (அறியாமல்) சேர்ந்திருந்தால் இதிலிருந்து விடுதலை அடைய முயற்சி செய்தால் வட்டி என்ற பாவத்திலிருந்த விலகிய நன்மையும், நிம்மதியும் கிடைக்கும்.

சகோதரிகளுக்கு லட்சக்கணக்கில் கடன் ஏன் ஏற்படுகிறது (சகோதரர் சாகுல் ஹமீது இது பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்) என்பது பற்றி அறிந்து கொள்வதற்கு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டாம். சகோதரிகளின் வீண் ஆடம்பர செலவுகள், உணவுக்காக திட்டமிடாத அதிகமான செலவு செய்வது, சீட்டு நடத்துவது அல்லது உறுப்பினராக இருப்பது. ஒரு சீட்டில் மட்டும் சேருவது கிடையாது. நான்கு அல்லது ஐந்து இடத்தில் சீட்டுகளில் சேர்ந்து கொள்வது. (பல பேங்கில் கடன் அட்டை வாங்கி வைத்திருப்பது போல்) இது போன்ற காரணங்களால்தான் இறையச்சம் இல்லாத சகோதரிகள் இன்று பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஒரு சகோதரிக்கு இரண்டு வீடுகள் இருந்தது. வீண் ஆடம்பரத்தால் (சீட்டுகளிலும் சேர்ந்திருக்கிறார்) பல லட்சங்கள் கடனாகி இரண்டு வீட்டையும் விற்று கடனை அடைத்து விட்டு தற்பொழுது வாடகை வீட்டில் இருந்து வருகிறார். இவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? இவருடைய ஆடம்பரமும், வட்டியும்தான். (சொந்த வீட்டில் ராணிபோல் வாழ்ந்தவர் வாடகை வீட்டில் இருக்கும்பொழுது இவருடைய மனநிலை எப்படி இருக்கும்).

தினச் சீட்டு (வட்டி)கடன்:

தினச் சீட்டு என்பது பெரும்பாலும்  கடை வைத்திருப்பவர்கள் வாங்குவது.வட்டிக்கடைக்காரனிடம் 1000ரூபாய் கடன் கேட்டால் 100 அல்லது 200 எடுத்துக்கொண்டு பாக்கி பணத்தை கொடுப்பான். இதை இத்தனை நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்ற கணக்கு இருக்கும். தினமும் 50 அல்லது 100 திருப்பி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் பாக்கி உள்ள பணத்திற்கு மீண்டும் வட்டி போட்டு தொடர்ந்து கட்டி வரவேண்டும். (இதில் மீட்டர் வட்டி என்ற பெயரில் 1 மணிநேரம், அரைநாள், ஒருநாள் வட்டியெல்லாம் பெரிய நகரங்களில் நடந்து கொண்டு இருக்கிறது).


வாரச் சீட்டு (வட்டி)கடன்:
இந்த சீட்டு எப்படி கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 100ரூபாய் கடன் கேட்டால் 25 ரூபாய் வட்டி எடுத்துக்கொண்டு 75ரூபாய் தருவார்கள். திருப்பி 4 வாரத்திற்குள் வட்டி சேர்த்து வாரம் 25ரூ வீதம் 100ரூபாய் கட்டி விட வேண்டும். தவறினால் மீண்டும் வட்டி கூடும். தினச்சீட்டு, வாரச்சீட்டு, மாதச்சீட்டு போன்ற வட்டி கடன்களை எந்தவித உறுத்தலும் இல்லாமல் நம் சமுதாய மக்கள் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வாரச்சீட்டு, மாதச்சீட்டு கடன் பெண்களுக்கு வீடு தேடி வந்து கொடுக்கப்படுகிறது.

இந்த கடனை மாடி வீட்டு பெண்களும் வாங்குகிறார்கள். இவர்கள் வீட்டு ஆண்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள. வசதி இல்லாதவர்கள் கடன் வாங்குகிறார்கள் என்றால், இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள் என்று என் மனதுக்குள் கேட்டுக்கொள்வேன் (அவர்களிடம் சென்று கேட்கமுடியாது). வெளிநாட்டில் வீட்டு ஆண்கள் இருந்தும், தங்க நகைகள் வைத்திருந்தும் சீட்டு கடன் வாங்க வேண்டிய காரணம் என்ன என்பதை ஆய்வு செய்தால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரிடம் வந்து எதுவும் கடன் வாங்கி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த சகோதரி வாரச்சீட்டு வட்டி கடனை வாங்குகிறார். (தெருவில் உள்ளவர்கள் இந்த பணக்கார பெண்மனியே வட்டிக்கு வாங்குகிறார். நாம் எப்படி இவரிடம் கடன் வாங்குவது என்று கேட்காமல் இருந்து விடுவார்கள்).

பிறமத ஆண்கள்தான் இந்த வசூலுக்கு சைக்கிளிலும், பைக்கிலும் வருகிறார்கள். முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர்களில் அதிக ஆண்கள் வெளிநாடுகளில். இப்படிப்பட்ட நேரத்தில் அந்நிய ஆணிடம் பழக்கம் ஏற்பட ஷைத்தானின் சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது. தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் தவறுகள் நடைபெறுவதை கேள்விப்படுகிறோம். தாயகத்தில் உள்ள நமது இளைஞர்கள், பெரியவர்கள் ஷைத்தானின் வட்டிகள் தெருவில் நடமாடுவதை கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். பிரச்சனை ஆகிவிட்டால் நடவடிக்கை என்று ஏதாவது செய்வார்கள். பின் மறந்து விடுவார்கள். முற்றாக ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்ற செயல் திட்டம் யாரிடமும் இல்லை.

இந்தியாவிலும், உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும். இஸ்லாமிய மக்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும் எதிராக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மீடியாக்கள், கல்விக்கூடங்கள், மற்றும் பல வழிகளின் மூலமாகவும் இறை நிராகரிப்பாளர்கள் ஒன்றினைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதில் வட்டியின் அடிப்படையில் செயல்படும் காரியங்களும் முன்னிலையில் இருந்து வருகிறது. (பசி வந்தால் பத்தும் பரந்து போகும் என்பது பழமொழி. இதில் வறுமையும், வீண் ஆடம்பரமும் கண்களை மறைக்கும் காரணிகளாக உள்ளது).

காரணம் இதில் அந்நிய ஆண்களிடம் பழகும் வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. எல்லா இடங்களிலும் தவறுகள் இருந்தாலும். இதில் வட்டிக்கு பணம் வாங்க செல்லும் இடங்களிலும், வீடு தேடி வட்டியை வசூலிக்கும் ஆண்கள் மூலமும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எல்லோரையும்  குறை சொல்ல முடியாது.

தற்பொழுது நடந்த செய்தியை  கேள்விப்பட்டு இருப்பீர்கள். முஸ்லிம் பெயர்தாங்கி (3கயவர்கள் இதில் ஒருவன் பிற மதத்தைச்சேர்ந்தவன் என்று நினைக்கிறேன்) இன்னொரு முஸ்லிம் குடும்பத்திற்கு வட்டிக்கு கொடுத்திருக்கிறான். வட்டியை வாங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார்களாம். கணவர் இல்லாத நேரத்தில் அந்தப்பெண்ணை சீரழித்ததோடு அல்லாமல் செல்போன் கேமராவில் படம் எடுத்து (அந்தப்பெண் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு) அதை காட்டியே மிரட்டி தொடர்ந்து கொடுமை படுத்தி தற்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வட்டியினால் கிடைத்த துன்பத்தை நினைத்து அந்த குடும்பம் வேதனை அடைந்து கொண்டு இருக்கிறது. (நான் சொல்லியது சிறிதளவுதான், நிறைய இருக்கு பெண்களைப் பற்றிய செய்திகளாக அதிகம் உள்ளதால் தவிர்த்துக்கொண்டேன்).

ஷைத்தானின் வலையால் பின்னபட்டுள்ள தினச்சீட்டு, வாரச்சீட்டு, மாதச்சீட்டு, ஏலச்சீட்டு  என்று எத்தனை வகையான சீட்டுக்கள் இருக்கிறதோ இதிலிருந்தும் மேலும் வங்கிகள், அடகு(வட்டி) கடைகள், கூட்டுறவு வங்கிகள் இது போன்ற இடங்களில் நம் சமுதாயப் பெண்கள், சென்று நகை கடன், சீட்டு கடன் வாங்குவதை தடுப்பதற்கு நாமும், சமூக அக்கரை கொண்டவர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.

அருமை சகோதரர்களே!

என்னருமை சகோதரர்களே! இஸ்லாத்தையும், இஸ்லாத்தை பின்பற்றுபவர்களையும அழிக்க சில கூட்டங்கள் திட்டமிட்டு முழு நேர வேலையாக (உலகளவில்) பெரிய வலைப்பின்னலில் தங்களின் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து கொண்டு இருக்கிறார்கள்.


அதனால் தூய்மையான இஸ்லாத்தை நாமும், நம் குடும்பத்தாரும், நம்மை சுற்றியுள்ளவர்களும் கடைபிடித்து வாழ்வதற்காக நமது நேரங்களை அதிகம் செலவிட வேண்டும். (வாழ்நாளை எவ்விதம் செலவழித்தாய் என்ற வல்ல அல்லாஹ்வின் கேள்விக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். அதனால் தங்களின் பொன்னான நேரத்தை நல்வழியில் நமக்கும் நம் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் செலவிடுங்கள். பணம் போனால் திரும்ப வந்து விடும். நேரம் போனால்... போனதுதான்... திரும்பி வராது...). 

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3)

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான கடனில் இருந்தும், வட்டியிலிருந்தும் நாமும் நமது உறவினர்களும், நமது குடும்பத்து பெண்களும் விலகி இருக்க நம்மால் ஆன முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் வீட்டு செலவுகளுக்கு மாதா மாதம் பணத்தை சரியாக அனுப்பி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் கடன்களிலிருந்தும், கடன் என்ற பெயரில் வட்டி என்ற பாவத்தில் மாட்டிக்கொள்வதிலிருந்தும் அவர்களையும், தங்களையும் காத்துக்கொள்ளுங்கள். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் சத்தியபாதையில் செலுத்தி, ஈருலகிலும் நாம் வெற்றியடைய தொடர்ந்து துஆச் செய்து கொண்டே இருப்போம்.

இன்ஷாஅல்லாஹ் கடன் - வட்டி இந்த இரண்டிலிருந்தும் நாம் விடுபட தீர்வுகளை வரும் தொடர்களில் பார்ப்போம்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்..

-- அலாவுதீன். S.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails