Wednesday, October 6, 2010

நவீன நிர்வாகக் கொள்கைகள் இஸ்லாம் வழங்கியதே : நிபுணர் பேச்சு!

குர்ஆனிலிருந்தும் நபிமொழிகள் எனப்படும் ஹதீஸ்களிலிருந்தும்தான்
நவீன உலகம் தனக்கான நிர்வாக மேலாண்மைக் கொள்கைகளைப் பெற்றுக்கொண்டுள்ளது என்கிறார் அய்குட் கிர்பாஸ். துருக்கியிலுள்ள தரச்சான்றிதழ் மையத்தின் தலைவரான இவர் அண்மையில் ஜெத்தா வந்திருந்தார். மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் நிகழ்வுற்ற மூன்றாவது தேசிய தகுதிசார் செவ்வியல் மேலாண்மை மாநாட்டில் இக்கருத்தை அவர் வெளியிட்டார்.
நிருபர்களிடம் பேசுகையில், "இன்றைக்கு உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களில் பின்பற்றப்படும் நிர்வாக முறைமைகள், கடந்த 1400 ஆண்டுகளாக முஸ்லிம்களிடம் உள்ளவையே. குறிப்பாக, நபிகளார் காலத்திய, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளே அவை" என்று அவர் குறிப்பிட்டார்.

"செவ்விய மேலாண்மையின் முக்கியக்கூறாக தலைமைத்துவம் விளங்குகிறது. 'உங்களில் மூவர் பயணம் செய்தாலும் அதில் ஒருவரைத் தலைவராக ஆக்கிக்கொள்ளுங்கள் (அபூதாவுது-2608)' என்கிற நபிமொழி தலைமைத்துவத்தின் இன்றியமையாமையைத் தெளிவாக உணர்த்துகிறது" என்று கூறிய அய்குட்,

"தலைமையற்றுப் போனால், அது உறுப்பினர்களின் தான்தோன்றித்தனத்திற்கே வழிவகுக்கும்" என்றும் குறிப்பிட்டார். மேலும், "அது ஒட்டுமொத்த அணித்திறனையும் கடுமையாகப் பாதிக்கும்". என்றார்.

"செவ்வியல் மேலாண்மையின் மற்றொரு பிரதான கூறு, உயர் நிர்வாகிகள் மாதாந்திரமாகவோ, குறிப்பிட்ட கால அளவிலோ சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதாகும். இது முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையேயன்றி வேறில்லை" என்றார் அய்குட். "ஒவ்வொரு சமூகப் பிரச்னைகளின் போதும் முஸ்லிம்கள் கலந்தாலோசித்து தீர்வு காண்பது நபிகளார் காலத்திலிருந்தே உள்ள நடைமுறை என்பதை வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது" என்ற அய்குட் கிர்பாஸ், "ஆயினும் இந்த, நிர்வாகரீதி சந்திப்பு முறைமைகளை புதிய கண்டுபிடிப்புகளாக மேற்குலகம் சொல்லிக்கொண்டிருப்பது தான் விந்தை" என்றார்.

- நமது சவூதி நிருபர் பாபுஜி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails