Saturday, July 3, 2010

கண்ணாடியின் வரலாறு

கண்ணாடியின் வரலாறு:


பாரிஸில் உள்ள, கண்ணாடியால் கட்டப்பட்ட பிரமிட். இதனை திறந்து வைத்தவர் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆவார்.
கண்ணாடியில் முகம் பார்க்காதவர்கள் எவருமே இல்லையென்று சொல்லலாம். ஏனெனில் அதில்தானே எவரும் தனது முகத்தைப்பார்த்து ரசிக்க முடியும். கண்ணாடிகளில் பல வகைகள் உண்டு.
பண்டைக்கால எகிப்தின் அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் செய்ய பயன்பட்ட கண்ணாடி மணிகள் கி.மு 2500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகின்றது.
சிலிக்காக் கலவையினால் செய்யப்பட்ட சிறு அச்சுகளை உருகிய கண்ணாடிக்குள் தோய்த்து சிறு கண்ணாடிக் குவளைகள் செய்யும் முறை கி.மு 1500 ஆண்டுகளில் உபயோகத்திலிருந்ததும் அறியப்பட்டுள்ளது.
நீண்ட குழாய்களை உருகிய கண்ணாடிக் குழம்பினுள் தோய்த்து ஊதுவதன் மூலம் பல்வேறு பொருட்களைச் செய்யும் முறை கி.மு மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பபிலோனியாவில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின் கண்ணாடியில் பாத்திரங்கள் செய்வது இலகுவானது. ரோமன் காலத்தைச் சேர்ந்த அரை அங்குலம் தடிப்புள்ள பெரிய கண்ணாடிப் பலகையொன்று அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனினும் மேற்பரப்பைத் தேய்த்து அவற்றை ஒளிபுகவிடும் கண்ணாடியாக மாற்றும் முறையை அவர்கள் அறிந்திராததால் இவ்வாறான கண்ணாடித் தகடுகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. கி.பி 1700கள் வரை கண்ணாடித் தகடுகளைச் செய்யும் முறை வளர்ச்சிபெறவில்லை. 17 ஆம் நூற்றாண்டில், கண்ணாடிக் குழம்பை ஊதும் முறையைப் பயன்படுத்திச் சிறிய தகடுகளைச் செய்யும் முறையொன்றைப் பிரான்ஸ் நாட்டில் உருவாக்கினார்கள். இதன்படி ஓரளவு பெரிதாக ஊதிய குமிழ்களை மீள இளகவைத்துச் சுழற்றுவதன் மூலம் வட்டமான கண்ணாடித் தகடுகள் உருவாகின.
இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடித் தகடுகளே ஆரம்பகாலக் கண்ணாடி யன்னல்களில் பயன்படுத்தப்பட்டன. வட்டக் கண்ணாடிகளிலிருந்து சதுரமான அல்லது நீள்சதுரமான சிறிய தகடுகள் வெட்டப்பட்டன. கிடைக்கக் கூடிய கண்ணாடிகளின் அளவு சிறிதாக இருந்ததால் ஒரு யன்னலில் அல்லது கதவில் பல கண்ணாடித் தகடுகளைப் பொருத்தவேண்டியிருந்தது. இத்தகைய யன்னல்கள் இன்றும் "பிரெஞ்ச் யன்னல்"கள் என்றே அறியப்படுகின்றன.
மேற்படி முறையில் செய்யப்பட்ட கண்ணாடிகள் அளவிற் சிறியனவாக இருந்தது மட்டுமன்றி, பல குறைபாடுகளையும் கொண்டிருந்தன. குமிழை ஊதும்போது குழாய் பிணைக்கப்பட்டிருந்த இடமும், சுழற்றியபோது ஏற்பட்ட மையப்பகுதியைச் சுற்றி உருவாகிய வளையம் வளையமான அடையாளங்களும் கண்ணாடித் தகடுகளில் காணப்பட்டன. இத்தகைய கண்ணாடிகளைத் தேய்த்து மட்டமாக்கும் முறை பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மட்டமான ஓரளவு தெளிவான கண்ணாடிகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது. ஆனாலும் இவற்றின் விலை சாதாரண மனிதருக்கு எட்டாத உயரத்திலேயே இருந்தது
.
19 ஆம் நூற்றாண்டின் முதற் காலாண்டில் முன்னரிலும் பெரிய கண்ணாடித் தகடுகளை உருவாக்கும், "உருளை முறை" என அறியப்பட்ட முறையொன்று பயன்பாட்டுக்கு வந்தது. இதிலும் ஊதலே அடிப்படையாக இருந்தாலும், குமிழை உதியபின் ஊசல் ஆடுவதுபோல் ஆட்டி நீளமான உருளைவடிவமாக ஆக்கப்பட்டது.

இதனை இளக்கி இரண்டு அந்தங்களையும் வெட்டி நீக்கியபின்னர், நீளவாக்கில் வெட்டி விரிப்பதன் மூலம் தகடுகள் ஆக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடித் தகடுகள் "உருளைக் கண்ணாடி"கள் எனப்பட்டன.

பிரான்சில் முதலில் புழக்கத்துக்கு வந்த இம்முறை பிரித்தானியாவில் மேலும் விருத்தி செய்யப்பட்டது. இந்த முறையில் பிரித்தானியாவில் உற்பத்திசெய்யப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தியே புகழ்பெற்ற கிறிஸ்டல் பலஸ் எனப்படும் கண்காட்சிகளுக்கான கட்டிடம் 1851 கட்டப்பட்டது.
பின்னர் கண்ணாடி உற்பத்தி விரைவாக வளர்ச்சியடைந்தது. கண்ணாடியைச் சட்டகங்களில் உருக்கி வார்த்து உருளைகளால் உருட்டி மட்டமாக்கப்பட்டது. பின்னர் இரண்டு பக்கங்களையும் இயந்திரங்களிலிட்டுத் தேய்த்து மட்டமாக்கி, மினுக்கம் செய்யப்பட்டது. இது "பிளேட்" கண்ணாடி என வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓரளவு பெரிய கண்ணாடித் தகடுகளைச் செய்யக்கூடியதாக இருந்ததுடன், தெளிவான, நல்ல ஒளியியற் தன்மைகளுடன்கூடிய கண்ணாடிகளையும் பெறக்கூடியதாக இருந்தது
.
உருக்கப்பட்ட கண்ணாடியைக் கொண்ட தொட்டியிலிருந்து, பல்வேறு மட்டங்களில் அமைக்கப்பட்ட உருளைகளினூடு இழுப்பதன் மூலம் தொடர்ச்சியாகக் கண்ணாடியை உருவாக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடி "இழுக்கப்பட்ட" கண்ணாடி எனப்பட்டது. இதன் மூலம் மிகவும் பெரிய கண்ணாடித் தகடுகளைச் செய்வது சாத்தியமானதெனினும், இதையும் தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவை இருந்தது
.
1960களின் ஆரம்பத்தில் இவ்வாறு தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவையில்லாத கண்ணாடி உற்பத்திமுறையொன்று அறிமுகமானது. இது "மிதப்புக்" கண்ணாடி எனப்பட்டது. இதில் உருகிய கண்ணாடியை, உருகிய தகரத்தின் மீது மிதக்கவிடுவதன் மூலம் தொடர்ச்சியான மிகவும் நீளமான கண்ணாடித் தகடுகள் செய்யப்பட்டன. இந்த முறையில் கண்ணாடிகளின் இரண்டு பக்கங்களும் முதலிலேயே மட்டமாக இருப்பதனால் தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவை கிடையாது. இது அறிமுகமானதிலிருந்து இன்றுவரை இதுவே கண்ணாடி உற்பத்தியின் நியமமாக இருந்துவருகின்றது
.
மூலம்: ta.wikipedia.org/wiki/கண்ணாடி_ (கட்டிடப்_பொருள்)


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails