Tuesday, May 4, 2010

சீக்கிய வேத நூலில் இஸ்லாமியத் தத்துவங்கள்

குரு நானக்
குரு நானக்
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கை இஸ்லாமியக் கொள்கைகள் பெரிதும் ஈர்த்தன. அதன் காரணமாக அவர் இருதடவை கால்நடையாக நடந்து பாக்தாது வழியாகச் சென்று மக்கா, மதினா ஆகிய புண்ணியப் பதிகளையெல்லாம் தரிசித்தார்.
திருக்குர்ஆனின் புனிதத்துவத்தை அவர் பெரிதும் மதித்தார். “வேதங்களுடையவும், புராணங்களுடையவும் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்பொழுது திருக்குர்ஆன்தான் உலகத்துக்கு வழிகாட்டக்கூடிய ஒரே நூலாகும் என்று அவர் எழுதினார்.
அவர் ஓதிவந்த திருக்குர்ஆன் பிரதி இன்றும் பிரோஸப்பூர் மாவட்டதிலுள்ள குரு ஹரா ஸஹாயில் உள்ளது. அவர் அணிந்திருந்த மேலங்கி டேரா பாபா நானக்கில் இன்றும் புனிதமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் திருக்குர்ஆனின் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அவருக்கும் அக்காலத்தில் பாக் பட்டனில் வாழ்ந்து வந்த இறைநேசச் செல்வர் பாபா பரிதுத்தீன் கஞ்சே ஷகருக்கும் இடையே நெருக்கமான நட்பு நிலவி வந்தது. சீக்கியர்களின் வேத நூலான கிரந்த் சாஹிபில் பாபா பரீதுத்தீன் கஞ்சே ஷகர் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில வருமாறு :
“ஒரு மனிதன் பிறந்த அன்றே அவனுடைய இறப்பின் தேதியும் அவன் நெற்றியில் எழுதப்பட்டு விட்டது. அதனை அழிக்க இயலாது. இறப்புத் தேவதையுடன் நமக்கு ஏற்படும் திருமணம் குறித்த தேதியில் வந்தே தீரும். எவருடைய பரிவுரையும் பலனளிக்காது. ஆன்மா செல்லக்கூடிய பாதை உரோமத்தைவிட மெல்லியதாக உள்ளது” – பரீத் (10:5)
“இந்த மண்ணை இழிவாகக் கருதாதே, ஏனெனில் எவரும் அதைவிடப் பெரிதாக இல்லை. நீ உயிரோடிருக்கும் வரையில் நீ அதனை உன் காலடியில் வைத்து மிதிக்கிறாய். ஆனால் நீ இறப்பெய்தி விட்டாலோ அது உன்தலை மீது ஆகி விடுகிறது” – பரீத் (10:5)
“உடலோ சுருங்கி விட்டது. முள் கூடு போன்று ஆகிவிட்டது. காகங்கள் உடலைக் கொத்தி பாதத்திலுள்ள தோலையும் கையிலுள்ள தோலையும் தின்னுகின்றன. ஐயோ! மிகவும் துரதிர்ஷ்டசாலியாக நான் இருக்கின்றேனே. நான் இன்னும் என் இறைவனைச் சந்திக்கவில்லையே”  – பரீத். (10:29)
காகங்களே! என்னுடைய உடலைக் கொத்தாதீர்கள். பறந்து சென்று விடுங்கள். ஏனெனில் என் உடலின் உள்ளே அன்பிற்கினியவன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்” – பரீத் (10:29)
“காகங்களே ! நீங்கள் என்னுடைய உடலின் ஒவ்வோர் அணுவையும் உண்ணுங்கள் – அது எங்கு காணப்பட்ட போதிலும் சரிதான். ஆனால் என்னுடைய கண்களை மட்டும் தொட்டு விடாதீர்கள். ஏனெனில் இன்னும் என்னுடைய அன்பிற்குரிய நாயனின் ஒளிமுகத்தைக் காணும் நம்பிக்கையுடையவனாக உள்ளேன்” – பரீத் (10:31)
“பேசாதிருக்கும் வதனங்கள் பேசத் துவங்கி விட்டன. புதைக்குழிகள் கூறுகின்றன : நிலையற்ற உலக இல்லங்களில் வாழ்பவர்களே ! வீடற்றவர்களே ! உங்களின் நிலையான இல்லமாகிய என்னிடம் வந்து விடுங்கள். இறப்பிற்கு அஞ்சாதீர்கள் நடந்துக் கொண்டே இருங்கள். நீங்கள் விரும்பாத போதினும் ஒருநாள் அதனை நீங்கள் தழுவிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று பரீத் கூறுகிறார். (10:32)
“தொழுமிடங்களில் ‘நகரா’ அடிக்கப்படும் சப்தத்தைக் கேட்டதும் எனக்கு பெருங்கவலை ஏற்பட்டது. அந்த ‘நகரா’ எவ்விதக் குற்றமும் செய்யாதிருக்கும் பொழுது அதனை இரக்கமற்ற முறையில் இவ்வாறு அடிக்கிறார்களே ! நான் எவ்வளவோ குற்றங்கள் செய்துள்ளேனே ! முடிவில் எனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ” – பரீத். (10:14)
சர்க்கரை, தேன், கற்கண்டு ஷர்பத், பால் ஆகியவையெல்லாம் இனிமையானவைதாம். ஆனால் இறைவனின் திருப்பெயரொடு ஒப்புநோக்கும் பொழுது ஒன்றுமே இல்லை. அதுவோ அவை எல்லாவற்றையும் விட இனிமையானதாகும்” – பரீத் (10:9)
“எழு, இறைவனைத் தொழு, உன் தலை இறைவனின் முன் தாழ்ந்து பணியாவிடின் அதனை வெட்டித்தள்ளு” – பரீத் (10:21)
“இரவின் முதற்பகுதியில் இறைவனைத் தியானிப்பது பூக்களைச் சேகரிப்பது போலாகும். இரவின் முடிவில் (அதாவது வைகறையில்) இறை வணக்கத்தில் ஈடுபட்டிருப்பது அப்பூக்கள் முற்றிக் காயாகிப் பழுப்பது போலாகும். இரவு முழுதும் விழித்து வணக்கத்தில் ஈடுபட்டிருப்பவன் நிச்சயமாக இறையருளைப் பெறுவான்” – பரீத்.
“இறைவனின் பேரருள் நம்மீது எச்சமயமும் இறங்கலாம். அதைப்பற்றி திட்டமான சட்டங்கள் இல்லை. சிலர் பெரும் தவம் செய்த போதிலும் இரவு முழுதும் பெறுகிறார்களில்லை. ஆனால் சிலர் படுத்துறங்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் மீது அது சுமத்தப்படுகிறது” இவ்வாறு கூறுகிறார் பரீத். (10:39)
இவ்வாறு இஸ்லாத்துக்கும் சீக்கிய மதத்திற்கும் எவ்வளவோ ஒற்றுமைகள் உள்ளன.
தொகுப்பு : நாகூர் J.M. தாஹிரா பானு
Source : http://wbx.me/l/?u=http%3A%2F%2Fnagoori.wordpress.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails