Wednesday, March 10, 2010

வெளிநாட்டு மோகம் எதுவரை?


 
[ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப் படைகள், கட்டுரையின் இரண்டாம் பகுதி.]

சில வேளைகளில் பணக்கார நாடுகளின் இரட்டை வேடம் பரிதாபரமாக அம்பலமாகும். துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பிய போது நிராகரிக்கப்பட்டது. அதற்கு காரணமாக துருக்கியில் குர்து மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப் பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இரக்க மனப்பான்மையை மெச்சிய படியே, துருக்கியில் இருந்து குர்து அகதிகள் கப்பல் கப்பலாக இத்தாலி வந்திறங்கினர். இதைப் பார்த்ததுமே ஐரோப்பிய ஒன்றியம் தலையில் அடித்துக் கொண்டு குளற ஆரம்பித்து விட்டது. நேரே துருக்கி சென்று: "நான் சும்மா மனித உரிமை, அது இதென்று சொல்ல, நீ அதை சீரியஸாக எடுத்து விட்டாயே!" என சமாதானப் படுத்திய பின்னர் தான், அகதிகளின் வருகை நின்றது.

பின்னர் ஒரு நேரம், கொசோவோ அல்பேனியர் மீது திடீர் பாசம் பொங்கி வரவே, அவர்களைப் பாதுகாக்க எடுத்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது புதிய அகதிகள் படை தமது நாடுகளை நோக்கி வரலாம் என்ற கவலை வாட்டத் தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தமக்கு தேவையான அளவு அகதிகளை போய் கூட்டி வந்தன. கொண்டு வந்த அகதிகளை சிறப்பு முகாம்களில் சில காலம் (யுத்தம் முடியும் வரை) வைத்திருந்து விட்டு திருப்பியனுப்பினார்கள். ஐரோப்பிய அரசுகள், வருங்காலத்தில் "யுத்த அகதிகள்" விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என தெரிகின்றது. அதாவது ஐரோப்பிய நேரடித் தலையீட்டால், யுத்தம் தீவிரமடைந்தால், அகதிகளை எப்படி சமாளிப்பது என்ற Crisis Management .

ஐரோப்பா முழுவதும் ஒரே அகதிச் சட்டத்தை உருவாக்குவதும், சுமைகளை (அகதிகளை) தமக்குள் பங்கிட்டுக் கொள்வதும் அந்த முகாமைத்துவத்துக்குள் அடங்கும். இதற்கென பின்லாந்தில் கூடிய மகாநாடு எதையும் சாதிக்கவில்லை. பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ் ஆகியன, செல்வந்த வட ஐரோப்பிய நாடுகளுடன் சமமாக பங்கு போடா தயாராக இல்லை. மேலும் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான அகதிகளை ஒடுக்கும் சட்டம் வர நீண்ட காலம் எடுக்காது. ஷெங்கண், டப்ளின் என்று புதிது புதிதாக வரும் சட்டங்கள், ஒரு நாட்டில் நிராகரிக்கப்படும் அகதிகள், மற்ற நாடுகளாலும் நிராகரிக்கப்பட வழி வகுக்கின்றது. இதனால் வாய்ப்பற்ற அகதிகள் தமது நாடுகளுக்கே திரும்ப வேண்டிய நிலை. இதனால் பணக்கார நாடுகளை நோக்கிய வறிய நாட்டு மக்களின் இடப்பெயர்வு கணிசமான அளவு குறைக்கப்படுகின்றது.

இப்படியான மாற்றங்களால், பணக்கார நாடுகளுக்கு பாதகமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. காலனித்துவ காலத்தில் இருந்து, ஐரோப்பாவை மையப்படுத்திய போதனைகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட மூன்றாம் உலக மக்கள், இனி தமது ஐரோப்பிய எஜமானர் மீது வெறுப்படையும் நிலை தோன்றும். ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கிய பயணம் நிச்சயமற்றது, ஆபத்துகள் நிறைந்தது. இதை தெரிந்து கொண்டும், மூன்றாம் உலக மக்கள், தமது நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதேன்? அரசியல், அல்லது யுத்த அகதிகளை தவிர்த்து விட்டு, பொருளாதார நோக்கங்களுக்காக இடம்பெயரும் மக்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

நாடு விட்டு நாடு போய் வேலை தேடும் போக்கு, ஐரோப்பிய காலனித்துவ காலத்திலேயே ஏற்பட்டு விட்டது. 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. இந்திய,சீனக் கூலிகள் காலனிகளை வளம் படுத்த ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டனர். முன்னர் ஆப்பிரிக்க அடிமைகள் செய்த அதே வேலையை, மிகக் குறைந்த ஊதியம் பெறும் கூலிகள் செய்தனர். வேலை நேரத்திற்கு கூலி, ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் நாடு திரும்பும் வசதி, மேலதிக ஊக்குவிப்புத் தொகை, என்பன இவர்களை அடிமைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. இவற்றை தவிர, வேலைப்பளு, வேலை நேரம், தங்குமிடம், கடுமையான சட்டங்கள் என்பன அடிமைகளுக்கு இருந்ததைப் போலவே தொடர்ந்தது. இவ்வாறு தான் நவீன அடிமைகள் உருவானார்கள்.

பின்-காலனித்துவ காலத்தில், காலனிப்படுத்திய ஐரோப்பிய எஜமானர்களின் நாடுகள் செல்வந்த நாடுகளாக மாறியிருந்தன. புதிதாக சுதந்திரமடைந்த அடிமை நாடுகள் வறிய நாடுகளாக காட்சியளித்தன. பழைய நிலவுடமைச் சமுதாயத்துக்குள், சந்தைப் பொருளாதாரம் நுழைந்து இடம்பிடித்தது. புதிய பொருளாதார ஒழுங்கை பராமரிக்கவென வளர்க்கப்பட்ட மத்தியதர வர்க்கம் வசதி படைத்திருந்தது. அவர்களின் கைகளில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட பணம் என்ற மந்திரக்கோல் இருந்தது. அதன் மந்திர சக்தியைக் கண்டு வியந்த மக்கள், தாமும் அதைப் பெற விரும்பினர். பெரும்பாலான மக்கள் ஏழைகள் என்ற போதிலும், அவர்களும் வாதியை தேடித் போயினர். "அவரவர்க்கு விதிப்படி தான் எல்லாம் நடக்கும். இப்பிறவியில் ஏழையாக வாழ்பவன், மறுபிறவியில் செல்வந்தனாவான்." என்று மதங்கள் கூறிய உபதேசங்களை இன்று யாரும் நம்புவதில்லை. வசதியான வாழ்வை உத்தரவாதம் செய்யும் பணம் எனும் புதுக் கடவுளின் உபதேசங்களை பின்பற்றும் பக்தர்கள் பல கோடி. இவர்கள் தமது கடவுளை தரிசிக்க, அருள் வேண்டி அவர் இருக்கும் இடம் தேடித் போவதில் வியப்பில்லை.

பணக்கடவுளும் அவ்வளவு சுலபமாக அருள் வழங்குவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் முன்பு, ஒப்பந்தக் கூலிகள் செய்த அதே "அழுக்கு வேலை" செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் இரண்டு, மூன்று பேர் செய்யும் வேலையை, தனியொருவர் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விசா இன்றி இருப்பவர் ஆயின், அதிக நேர வேலை, மிகக் குறைந்த சம்பளம் என்று பன்னாட்டு அகதிகள் சுரண்டப்படுகின்றனர். ஒரு பக்கம் இவைகளின் இரத்ததி உறிஞ்சும் ஐரோப்பிய முதலாளிகள் மேலும் மேலும் லாபம் சம்பாதிக்கின்றனர். மறு பக்கம் உடல் நலிவடையும் நவீன அடிமைகள் நடைப்பிணமாகி வருகின்றனர். இவ்வாறு சொர்க்கத்தின் இருண்ட மூலைக்குள் தள்ளப்பட்ட இவர்களைப் பற்றி யாரும் அக்கறைப் படுவது கிடையாது. மிகுந்த சிரமத்துடன் ஏழு கடல், ஏழு மலை தாண்டி வரும் அகதிகள் இறுதியில் கண்டடைவது இதைத் தான்.

இந்த இடத்திலாவது வறிய நாட்டு மக்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ஓடிக் கொண்டிருக்கப் போகிறோம்? நவீன நாடோடி வாழ்க்கைக்கு உந்தித் தள்ளிய காரணிகள் எவை என சிந்திக்க வேண்டும். "எமது நாடுகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. படிப்புக்கேற்ற வேலை இல்லை. எவ்வளவு உழைத்தாலும் எமது கஷ்டங்கள் தீருவதில்லை." எனப் பல காரணங்களை முன் வைக்கலாம். ஆனால் அப்படி சொல்பவர்கள், இந்த நிலைக்கு யார், எது காரணம் என சிந்தித்ததுண்டா? உள்நாட்டில் வறுமையை ஒழிக்கப் போராடி இருக்கிறார்களா? மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமையை, அறுபது வருடங்களுக்கு முந்திய ஐரோப்பாவுடன் ஒப்பிடலாம். 12 மணித்தியால வேலை நேரம். கடின உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியம். குழந்தைத் தொழிலாளிகள். அசுத்தமான சேரிகள். வாக்குரிமையற்ற உழைப்பாளர் வர்க்கம். இது தான் அன்றைய ஐரோப்பாவின் அவலநிலை.

அந்த அவலநிலை திடீரென் ஒரே நாளில் மாறி விடவில்லை. ஆளும் வர்க்கம் தானாகவே மனமிரங்கி விட்டுக் கொடுக்கவில்லை. மக்கள் நிறுவனமயப் படுத்தப் பட்டனர். அடித்தட்டு மக்களிடமிருந்து ஒற்றுமையாக கிளர்ந்தெழுந்த போராட்டம், ஜனநாயக மயப்படுத்தலுக்கும், இன்று நாம் காணும் நலன்புரி அரசுக்கும் வழி வகுத்தது. சுருங்கச் சொல்லின், மக்கள் தமது உரிமைகளை போராடித் தான் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் நியாயமான அடிப்படைத் தேவைகள் அனைத்து நாட்டு அரசியல் நிர்ணய சட்டங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் மக்களின் அறியாமை. நிறுவனமயப் படுத்தப் படாமை. அடங்கிப் போகும் குணாம்சம். இவற்றை தமக்கு சாதகமாக எடுத்தக் கொள்ளும் அரசுகள் ஊழலால் உயிர் வாழ்கின்றன. கலாச்சாரப் புரட்சியின் போது சீனா சென்று வந்த, இத்தாலிய எழுத்தாளர் அல்பேர்ட்டோ மொராவியா பின்வருமாறு கூறினார்:
"ஐரோப்பிய மக்கள், போர்க் குணாம்சத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது கலாச்சாரம் பற்றி கற்பிக்கப் படுகின்றது. ஆசிய மக்கள், இதற்கு மாறாக கலாச்சாரத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது போர்க் குணாம்சம் பற்றி கற்பிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது."

(முற்றும்)
["உயிர்நிழல்", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]
நன்றி : http://kalaiy.blogspot.com/2010/02/blog-post_07.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails