Friday, February 19, 2010

பிரியாணி

“தம்பி ரெண்டு மணிக்கி வரச்சொல்லியிருக்கான். முழிச்சிருவீங்கள்ல”?





ambur biriyani 
“தம்பி ரெண்டு மணிக்கி வரச்சொல்லியிருக்கான். முழிச்சிருவீங்கள்ல”?
“நிச்சயமா அண்ணெ. நா உங்களுக்கு ‘ரிங்’ தர்றேன்”.
ரொம்ப நம்பிக்கையோடு சொன்னார் பாபுஜி. சொன்ன நேரத்துக்கு அல்லது திட்டமிட்ட நேரத்துக்கு விழிப்பது என்ற ‘ரிஸ்க்’கை அவர் அந்த நேரத்தில் எடுக்கவிரும்பவில்லை. அந்த விஷயத்தில் கடந்த காலம் கொடுத்திருந்த பாடங்கள் அவரால் மறக்க முடியாதவை.
எட்டரைமணிக்குப் போகவேண்டிய ஆஃபீஸுக்கு சரியாக ஆறு மணிக்கு அலாரம் வைத்து, அது நேரம் தவறாமல் அலறி, பாபுஜியும் முழித்து, ‘இன்னும் ஒரு ஐந்து நிமிஷம் படுத்திருக்கலாம்’ என்று அலாரத்தின் உச்சந்தலையில் அடித்து அதை அமைதிப்படுத்திய பிறகு படுத்துக்கொண்டார். ஐந்து நிமிஷம் கழித்து விழித்தபோது மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. அரக்கப் பரக்க தயாராகி அலுவலகம் சென்றபோது ‘காசுவல் லீவு’ம் இல்லாததால் ‘மெடிகல் லீவு’ போடும்படி ஆகிவிட்டிருந்தது. டாக்டர் பிரபுராஜிடம்தான் வழக்கம்போல ‘வைரல் ஃபீவ’ரை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கவேண்டியிருந்தது.
இப்படிப்போன பல ஐந்து நிமிஷங்களால் அந்த ஆண்டின் அனைத்து விடுப்புகளுடன் பல ஐம்பது ரூபாய்களை இழக்க நேர்ந்தது மட்டுமில்லாமல், மருத்துவ விடுப்பெல்லாம் தீர்ந்து போனபிறகு கரெக்டாக வைரஸுக்கு யாரோ தகவல் அனுப்ப, அது முகூர்த்த நேரம் பார்த்து பாபுஜியின் உடம்புக்குள் குடிபுகுந்து ஒரு பத்து நாள் படுக்கவைத்து ‘லீவ் ஆன் லாஸ் ஆஃப் பே’ போடவைத்தது.
கடந்த காலத்தை திரும்பிப்பார். கழுதைதான் பின்னால் பார்க்காமல் போய்க்கொண்டே இருக்கும். நீ கடந்த காலத்திலிருந்து நல்லதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குருவும் சொல்லியிருந்ததால் பாபுஜி இந்த விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருந்தார். தூங்கினால்தானே விழிக்கின்ற பிரச்சனை? அந்த நம்பிக்கையில்தான் அவரும் வருகிறேன் என்று சொன்னார். தவிர இரவு இரண்டு மணிக்கு இப்படி ஒரு காரியத்துக்காக வெளியில் செல்வது அவருக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது. அந்த ஆர்வமும் அவரை உள்ளூர தூங்கவிடாடதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதோடு இந்த வேலைகளையெல்லாம் வேறு யார் பார்ப்பார்கள்? பெத்த மகளின் கல்யாணத்துக்கு வேறு யார் செய்வது? எப்போதும்போல இப்போது அவர் இருக்க முடியுமா என்ன? பொறுப்பில்லாத தகப்பன் என்ற பெயரை வேறு எடுக்க வேண்டுமா? சோம்பேறி, விபரமில்லாதவர் என்ற பட்டங்கள் போதாதா?
அவர் நினைத்ததுபோலவே இரவு அல்லது அதிகாலை இரண்டு மணி வரை தூங்குவதற்கு வாய்ப்பே வரவில்லை. சரியாக இரண்டுக்கு வினோத சகோதரனுக்கு தொலைபேசினார். (வினோத சகோதரன் என்பது பாபுஜியோடு வேலை பார்க்கும் பக்கத்து வீட்டுக்காரர். அவருடைய பெயரின் குத்துமதிப்பான அல்லது குத்தாத மதிப்பான தமிழாக்கம்தான் வினோத சகோதரன் என்ற பெயர். மற்றபடி பார்ப்பதற்கு வினோதன் கொஞ்சம் குண்டாக இருப்பார் என்பதைத் தவிர அவருடைய உருவத்திலோ அல்லது செயலிலோ வினோதம் எதுவும் இதுவரை தென்படவில்லை. அவர் பல்கலைக்கழக கணித பாடத்தில் தங்கமெடல் வாங்கியது வேண்டுமானால் பாபுஜியைப்பொறுத்த அளவில் வினோதமாக இருக்கலாம். நிற்க பாபுஜியின் பெயரும் பாபுஜி அல்ல. அதுவும் ஒரு உறவு சார்ந்த குத்துமதிப்பான — அல்லது … சரி வேண்டாம் — மொழிபெயர்ப்புதான்.)
“அண்ணே போலாமா? வூட்டுக்கு வந்துட்டிங்கன்னா நம்ம கார் இருக்கு. அதுலெயே போயிறலாம்”
“சரி தம்பி, வந்துர்றேன்”
“அப்ப, நற்செய்தி அண்ணன்?”
“அவரையும் கூட்டிட்டு வந்துர்றேன்”
“அவரு ஒடம்புக்கு முடியலேன்னாரே?”
“இல்லெ, அவரே வற ஆசெப்படறாரு. அவருக்கு கடாவெல்லாம் நல்ல பழக்கமிருக்கு. அவரும் வந்து சொல்லட்டும்”
“சரிண்ணே”
‘நம்ம கார்’ என்று பாபுஜி சொன்னது பாபுஜியின் காரை அல்ல. அது சும்மா ஒரு இதுக்கு. பாபுஜி அடிக்கடி சொல்வார். “இறைவன் எனக்கு செல்வத்தைக் கொடுக்கவில்லை. கார் பங்களாவைக் கொடுக்கவில்லை. ஆனால் இதெல்லாம் உள்ளவர்களைக் கொடுத்துள்ளான்” என்று. அவர் நகைச்சுவையாகத்தான் அதைச்சொன்னாரா என்பது அவர் மனதுக்கு மட்டும் தெரிந்த ஒரு ரகசியம். இறைவனுக்கும் அவருக்கும் ரொம்பகாலமாக நடந்து கொண்டிருந்த ஒரு வழக்கின் சங்கேதம் அது. இப்ப விஷயம் என்னன்னா, அவர் நம்ம கார் என்று சொன்னது நண்பர் ஒருவரின் காரைத்தான்.
கிளம்பிச் சென்று கோட்டுக்கொல்லையை அடைந்தபோது இன்னும் இருட்டாகத்தான் இருந்தது. ட்ரைவர் பையன் புதுசு. கொஞ்சம் வேகமாக ஓட்டியதாகத் தோன்றியது. அதுவும் அனாவசியமாக. கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
சரியாகத் தெரு மத்தியில் மட்டன்பாய் — அவரை அந்த ஊரில் அப்படித்தான் சொன்னார்கள் — பேண்ட் ஷர்ட் சகிதமாய் நின்று கொண்டிருந்தார். காத்துக்கொண்டு. ‘செல்’லில் சொல்லிவிட்டுத்தான் போனோம். ஆட்டுக்கறி விற்பவரென்றால் ‘செல்’ வைத்துக்கொள்ளக்கூடாதா என்ன? இப்போதெல்லாம் ஆடுகளே ‘செல்’ வைத்துக்கொள்கின்றன. (நேற்று பாபுஜியிடம் ஒரு ஆடு ‘செல்’லில் பேசியபோது தெரிந்து கொண்டது இது).
காரைவிட்டு இறங்கியபோதே ஒரு பத்துப்பதினைந்து கிடாக்கள் தென்பட்டன. இன்னும் சில மணி நேரங்களில் பிரியாணியாகப் போகிறோம் என்று அவை அறியுமா என்ன? பாபுஜிக்கு அவைகளின்மீது ஒரு தத்துவப்பூர்வமான இரக்கம் கொஞ்சம் வந்தது. இவ்வளவுக்கும் அவர் ஒரு மட்டன் காதலர். ஆனால் நின்றுகொண்டிருந்த கிடாக்களில் பெண் எது ஆண் எது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நாக்குக்கு நன்கு தெரிந்த ஒரு உண்மை அவர் கண்களுக்கு புலப்படவில்லை.
“டீ சாப்புட்றிங்களா சார்” என்றார் மட்டன் பாய்.
“இல்லெ வேனா, இப்பதான் வீட்லெ சாப்டு வர்றோம்” என்றார் வினோத சகோதரன். நற்செய்தி அண்ணன் ஒரு கம்பளியால் தன் உடம்பு முழுவதையும் போர்த்திக்கொண்டிருந்தார். அதற்கு அதிகாலைக் குளிர் மட்டும் காரணமல்ல. அவருக்கு உண்மையிலேயே உடம்புக்கு முடியாமல்தான் இருந்தது. அதோடு கொசுக்கள் வேறு நிறைய இருந்தன.
மூடியிருந்த ஒரு கடை வாசலில் சின்ன திண்ணை மாதிரி இருந்த ஒரு உயரத்தில் உட்கார்ந்து கொண்டோம். பேண்ட் போட்டிருந்ததால் கொசுத்தொல்லை அதிகமில்லை. ஆனால் கைலி உடுத்திவந்த நற்செய்தி அண்ணனைத்தான் கொசுக்கள் எளிதாக சென்றடைந்து முக்கிய இடங்களில் தாக்குதல் நிகழ்த்த ஏதுவாக இருந்தது.
எதிரில் ஒரு சின்ன கடை இருந்தது. அதை கடை என்று சொல்ல முடியாது. கசாப்பு செய்யும் இடம். ஒரு பத்தடி தள்ளி மேய்ந்துகொண்டும் துரத்திக்கொண்டும் இருந்த கிடாக்கள் அதன் உள்ளே போனதும் அசைவற்றுப் போகப்போகின்றன. அதில் கறியை வெட்டிப்போடுவதற்கு சில மர மேடைகள் இருந்தன. ஒரு சாராக்குழி ஒன்று இருந்தது. எடைபோட ஒரு தராசு இருந்தது. சில உயரமான பக்கெட்டுகள் இருந்தன ஒரு மூலையில். அந்த கடைக்குள் ஒரு சின்ன இருட்டான அறைமாதிரி ஒரு இடம் இருந்தது. அது எதற்கு என்று தெரியவில்லை. முண்டா பனியனும் குதி காலுக்கு மேலே தூக்கிய பேண்டுமாக இரண்டு பையன்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
goats3“தம்பி, நல்ல கெடா தம்பி, எல்லாம் கரெக்ட் ரேஞ்ச். ஒரு பத்துப் பதினோறு கிலோவுக்கு மேலெ இருக்காது ஒவ்வொன்னும்” என்றார் வினோத சகோதரன்.
அனுபவப்பட்டவர். கணக்குப்போடுவதில் புலி. தங்கமெடல் வேறு. அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு ஆட்டின் மீது இன்னொன்று ஏற முயற்சித்தது. முன்னது பிடிகொடாமல் நழுவியது. நிச்சயம் அது நாணத்தினால் இருக்க முடியாது. அல்லது ‘பப்லிக்’காக இப்படி விவஸ்தையில்லாமல் நடந்து கொள்கிறதே என்ற கோபத்திலும் இருக்கலாம். அவைகளுக்கு நாணமில்லை என்று எப்படி கறாராகச் சொல்லமுடியும்? பாபுஜியின் மூளை துரிதமாக வேலை செய்ய ஆரம்பித்தது.
ஆஹா, பொண்ணாடு போலெருக்கே. வேகாது. எல்லாங் கெட்டுப்போயிடும். ஒரு பொண்ணாடுகூட கறியில் சேரக்கூடாது.
“அண்ணெ, அந்த ஆடு பொண்ணாடுன்னு நெனக்கிறேன். கொஞ்சம் பாத்துக்குங்க”
“அந்த ஆடுமட்டுமல்ல தம்பி, மொத்தம் மூனு பொண்ணாடு இருக்கு. அதெ வச்சுத்தான் மத்த ஆடெல்லாம் ஒரு எடத்துலேயே நிக்கிது. இது ஒரு ‘டெக்னிக்’ தம்பி. அப்பதான் கெடாவெல்லாம் வேறெங்கெயும் போகாம அதைச்சுத்தியே நிக்கும்” என்று சொல்லிச் சிரித்தார்.
கிடா உளவியல். ஹும்…படா உளவியலாக இருக்கிறதே என்று வியந்தார் பாபுஜி.
“ஒன்னும் கவலெப்படாதிங்க தம்பி, அதுல எதுவும் கலக்காம எல்லாம் கடாவா வெட்டும்படி நா பாத்துக்கறேன்” என்றார் மனித உளவியலும் அறிந்த வினோத சகோதரன். பாபுஜிக்கு அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. கறி சரியில்லையெனில் கல்யாணமே வீணான மாதிரிதான். சோழ நாடு சோறுடைத்து. கல்யாண வீடு கறியுடைத்து என்று சும்மாவா சொன்னார்கள் ?
II
நினைத்தபடியே பிரியாணி ரொம்ப நல்லவிதமாக வந்திருந்தது. சோற்றின் வண்ணமே ஆயிரம் கதை சொல்லிவிடும். பட்ட கஷ்டம் — ஆடுகள் பட்ட கஷ்டம்தான் — எதுவும் வீணாகவில்லை. எல்லாம் சூப்பர் கறியாக இருந்தது. கொழ கொழ. லட்டு லட்டு. எல்லார் வாயிலும் கறியும் முள்ளுமாக. பார்ப்பதற்கே ரொம்ப அற்புதமாக இருந்தது.
எல்லாருமே சொல்லிவைத்த மாதிரி மறு சோறு கேட்டு வாங்கிக்கொண்டார்கள். கறியும் மறக்காமல் விழத்தான் செய்தது. தாலிச்சா(1), தைர் பச்சடி, ஃபிர்னி(2), சிக்கன் பொரியல் எல்லாவற்றுக்கும் மேலாக கறியின் சுவை ஜாதி வித்தியாசமில்லாமல் வந்திருந்த எல்லா நாக்குகளையும் அசத்தியிருந்தது. பீடாபோட்டுக்கொண்ட வாய்களில் கறியையும் பிரியாணியையும் புகழாத வாயே இல்லை.
பாபுஜிக்கு பெருமை தாங்க முடியவில்லை. எல்லாரையும் சாப்டிங்களா? சாப்டிங்களா? என்று மறுபடி மறுபடி பல ரவுண்டுகள் வந்து தனது கோணல் வாயால் கேட்டுக்கேட்டு உபசரித்தபடி இருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நாக்குகளையெல்லாம் பார்த்தபோது அவருக்கும் ஆசை வரத்தான் செய்தது. ம்ஹும். கூடாது. நப்ஸை(3) அடக்கவேண்டும். கடைசியில்தான். ஆமாம். அதுதான் மரியாதை. தெரியும். ஆனால் என்ன செய்வது? இந்த நாக்கு இருக்கிறதே, அதைக்கொடுத்த இறைவனுக்கே எல்லாப் புகழும். பசிக்கு உணவிடாத மரியாதை என்ன எழவு மரியாதையோ. பீடா மென்றுகொண்டிருந்த வாய்களைப் பார்த்தபோதும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த பிரியாணி தட்டுகளைப் பார்த்தபோதும் பாபுஜிக்கு கொஞ்சம் பொறாமையாகக்கூட இருந்தது. அடிக்கடி சுரந்து வந்த உமிழ் நீரை விழுங்கிக்கொண்டார்.
சர்க்கரை வியாதியால் கை கால்கள் வீங்கி, நடக்கவே அவதிப்பட்டுக்கொண்டிருந்த உண்மையாளர் ஒருவர் கட்டுப்பாடின்றி கறிகளை உள்ளுக்குத் தள்ளிக்கொண்டிருந்தார்.
“அண்ணெ, நல்லா சாப்டுங்கண்ணே. ஒரு  நாளெக்கித்தானே… சாப்டுங்கண்ணே..எதாச்சும் வேணுமா?” என்று பாபுஜி உபசரித்தார்.
ஒன்னும் வேண்டாம் என்று சைகையிலேயே சொன்னார் உண்மையாளர். வாய் பேசமுடியாத அளவுக்கு ‘ஹவுஸ்ஃபுல்’லாக இருந்தது. ஃபிர்னியையும் இரண்டு மூன்று முறை வாங்கி வாங்கி குடித்துவிட்டு சுரண்டி சுரண்டி நக்கிக்கொண்டிருந்தார் உண்மையாளர். உணவுக்கு உண்மையாளர்தான். சந்தேகமில்லை. “சுகருக்கு மட்டன் ஒன்னும் செய்யாது” என்று விளக்கம் வேறு சொன்னார். யாரும் கேட்காமலே. அதைக்கேட்டு பாபுஜி சிரித்துக்கொண்டார். அவருக்குத் தெரியும். அது அவருக்கு அவரே சொல்லிக்கொண்ட நொண்டிச் சமாதானம். இருட்டைப் பார்த்து பயமாக இருக்கும்போது பாட்டுப்பாடிக்கொண்டு போவதுபோல.
ஆனால் அவரை அப்படி உபசரித்தது உண்மையில் கரிசனமா அல்லது பழிவாங்கலா என்று பாபுஜிக்கே புரியவில்லை. எது எப்படி இருப்பினும் கல்யாண பந்தியில் அமர்ந்தவர்களிடம் ஒரு டாக்டர்கூட டாக்டர் மாதிரி பேசமுடியாது. தனது உபசரிப்பில் ஒரு தார்மீக அல்லது தாலிச்சாமீக அல்லது மட்டன்மீக நியாயமிருந்ததை பாபுஜி உணர்ந்தார்.
எல்லாரும் சாப்பிட்டு முடித்தபோது மணி மூன்றை நெருங்கிவிட்டிருந்தது. பாபுஜிக்கு அகோரப்பசியாக இருந்தது. மூன்று தேக்சா(4) சாப்பாடு மிஞ்சிவிட்டதாக அஷ்ரஃப் சொன்னார். ஆனால் பாபுஜிக்கு வருத்தம் எதுவுமில்லை. மாறாக சந்தோஷமாக இருந்தது. யாருக்கும் எதுவும் இல்லை என்று ஆகவில்லை. எல்லாரும் ரொம்ப திருப்தியாக சாப்பிட்டார்கள். பிரியாணியும் அசத்தலாக இருந்தது. சோறாக்கிய பகாத்தி(5)க்கும் உயிரைக்கொடுத்து நாக்குகளை சந்தோஷப்படுத்திய அந்த ஆடுகளுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும்.
“வாங்க சம்மந்தி சாப்டலாம்” என்று அழைத்தார் மாப்பிள்ளையின் வாப்பா.
உயிரே வந்த மாதிரி இருந்தது. அதுதான் சரியான சமயம் என்று உட்கார்ந்துவிட்டார் பாபுஜி.
சம்மந்திகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு. பாபுஜிக்கு மட்டன் ரொம்பப் பிடிக்கும் என்பது ஒரு திறந்த ரகசியமாக இருந்ததால் அவருக்கு வைத்த தட்டில் பிரியாணி கொஞ்சமாகவும் மட்டன் அதிகமாகவும் வைத்தார்கள். அவருக்கு மிகவும் பிடித்த மூளைமுள் கறியே அவருக்கு வந்திருந்தது.
“என்ன தம்பி, போட்லாவா(6) போட்டு தூள் கெளப்புங்க” என்றார் சாப்பிட்டு முடித்த வினோத சகோதரன்.
“பிஸ்மில்லாஹ் ஆரம்பிங்க” என்றார் சம்மந்தி. இஸ்லாத்தைப் பற்றி அவ்வளவாக அவருக்குத் தெரியாதென்றாலும் ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொன்னவுடன் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் என்று சரியாகத் தெரிந்துவைத்திருந்தார்.
III
goats2ஒரு ஆட்டைப் பிடித்தான் அந்த இரண்டு பையன்களில் ஒருவன். என்ன செய்யப்போகிறான் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டே இருந்தார் பாபுஜி. அவர் சின்னவயதில் இருந்தபோது ஏதோ ஒரு கல்யாணத்தில் பக்கத்து வீட்டுக் கொல்லையில் வைத்து ஆடறுத்தபோது சுவற்றில் ஏறி எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போது ஆட்டைப் பிடித்து மல்லாக்கப் படுக்க வைத்து ஒரு வாளியில் அதன் கழுத்தை வைத்து கத்தியால் ஒரு கீறு. கணத்தில் உயிர் பிரிந்துவிடும்போலிருந்தது. துப்பாக்கியால் பொட்டில் சுடுவது மாதிரி. வெகு விரைவான மரணம். வலி என்றால் என்ன என்று மூளைக்குள் செய்தி பாயுமுன்னரே உயிர் பிரிந்துவிட்டிருக்கும். பீறிவரும் ரத்தமெல்லாம் அந்த வாளிக்குள் வடிந்து ரொம்ப சீக்கிரம் உலர்ந்து கட்டியாகிவிடும். ஆடுகள் எதுவும் கத்தவோ கதறவோ இல்லை. அதற்கெல்லாம் நேரமே அவற்றுக்கு தரப்படவில்லை. ஒரு கணம்தான். ஆடு அடங்கும் வாழ்க்கையடா என்று அறுபட்ட கழுத்துடன் ஒருவித கையாலாகாத விரைப்புடன் கிடந்தன ஆடுகள்.
இங்கே எப்படி என்று கவனிக்க ஆரம்பித்தார் பாபுஜி. பையன்கள் ரொம்ப சிறுவயதுக் காரர்களாக வேறு இருக்கிறார்களே என்று அவருக்கு அவர்கள் திறமையின்மீது ஒருவித சந்தேகம் தோன்றியது.
ஆனால் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என்று சொல்லும்விதமாக அவர்கள் நடந்துகொண்டனர். ஆட்டைப் படுக்க வைத்து கத்தியால் கழுத்தில் ஒரே கீறுதான். உடனே ரத்தம் பீறிட்டு வர ஆடு கொஞ்சம் அதிர்ந்தது. பின்பு அடங்கியது. கத்தி மிகவும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும். அதை வைத்து ஒரு மனிதனின் கழுத்தில் இழுத்தால் என்னாகும் என்று கற்பனை செய்தார் பாபுஜி. கற்பனை செய்யவே முடியவில்லை.
கழுத்தறுபட்ட ஆடுகளை அப்படியே அலாக்காக ஒரு மரியாதையற்ற முறையில் தூக்கி அந்த இருட்டு அறைக்குள் எரிந்தார்கள். அந்த அறை எதற்கு என்று இப்போது விளங்கிவிட்டது. வாளிக்கு பதிலாக சாராக்குழியில் அதன் தலையை அல்லது கழுத்தை வைத்திருந்தார்கள். அதன் வழியாக ரத்தம் ஓடி தெருவுக்கு வருமா என்ற கேள்வி வந்தது பாபுஜிக்கு.
அடுத்து ஒரு ஆட்டைப் பிடிக்க ஓடினான் பையன். அவன் பிடித்ததும்தான் தாமதம். “அரேயரே, ஓ நகோ, ஓ மர்கெரே. மர்கே கிர்கே காட் நகோ” என்று கத்தியபடி வினோத சகோதரன் ஓடினார். அவர் ஓடிய வேகத்தில் இருந்த பொறுப்பு பாபுஜிக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது. ஆனால் அவர் ‘மர்கெ’ என்று சொன்னதுதான் என்ன என்று சரியாக விளங்கவில்லை. அந்த ஊருக்கு வந்ததிலிருந்து கொஞ்சம் உர்து சொற்கள் பழகிப்போயிருந்தாலும் பேச்சுவழக்கு அழுக்கு உர்துவுக்கு பாபுஜி பழகிக்கொள்ளவில்லை. அந்த ஆட்டை அறுக்கவேண்டாம் என்று வினோத சகோதரன் சொன்னார் என்பதுவரை புரிந்தது.
“‘மர்கே’ன்னா என்ன அண்ணே?”
“‘மர்கே’ன்னா பொண்ணாட்டுலெயே மலடிம்பாங்கள்ள, அதுதான்”
ஓஹோ பொண்ணாட்டிலேயே இது ‘டெக்னிகல்’ விஷயமா என்று வியந்தார் பாபுஜி.
வினோத சகோதரன் ரொம்ப உஷாராக இருப்பதைப் பார்த்தவுடன் மட்டன் பாயும் உஷாரானார். அப்படிப்பட்ட ஆடுகளை விட்டுவிடச்சொல்லி பையன்களுக்கு உத்தரவிட்டார். அதன்பிறகு பிடித்த ஆடுகளெல்லாம் ஆணாடுகள்தான் என்பதற்கு ‘ஆதாரம்’ காட்டிக்காட்டி அறுத்தார்கள் பையன்கள். கால்களின் முனைகளையும் தலைகளையும் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். முண்டமாக ஆயின ஆடுகள்.
சில ஆடுகள் ரொம்பத் துள்ளின. துடித்தன. அவைகளை ஒன்றன்மீது ஒன்றாக தூக்கித் தூக்கி அந்த இருட்டு அறைக்குள் வீசினார்கள். சில ஆடுகளுக்கு உயிர் அடங்கிய பிறகும் கால்களில் அசைவிருந்தது. கால்களை லேசாக உதைத்துக்கொண்டது. வன்முறையாளர்களை நோக்கிய அவைகளின் இறுதி எதிர்ப்பைப்போல. ஒருசில ஆடுகள் தலை பிரித்தெடுக்கப்படுவதற்குமுன் கழுத்தை நீட்டி வளைத்து கண்ணால் எங்கோ வெறித்தன. யாரையோ குற்றம் சொல்வதுபோல. அல்லது யாரிடமோ முறையிடுவதுபோல. அது பாபுஜிக்கு என்னவோபோல் இருந்தது.
ஆடுகளையெல்லாம் அறுத்து முடித்தபிறகு அவைகள் ஆண்கள்தான் என்பதற்கான ஆதாரங்களில் ஒரு இரண்டு கிலோவையும் கிட்னியோடு சேர்த்து அறுத்து வாங்கிக்கொண்டார் பாபுஜி. சாப்பாட்டு நெய்யில் வறுத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி.
“தம்பி, நீங்க ‘கொட்ஸ்’ சாப்டுவிங்களா?” என்று சிரித்துகொண்டே கேட்டார் வினோத சகோதரன்.
“ம்…ரொம்பப் பிடிக்கும் அண்ணெ. ரொம்ப நல்லாரிக்கும்”
‘உவ்வே’ என்று வினோத சகோதரன் சொன்னதைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார் நற்செய்தி அண்ணன்.
ஆட்டை இரும்புக் கொக்கிகளில் மாட்டி உரிக்க ஆரம்பித்தார்கள். நிர்வாணமாக தோலுரிக்கப்பட்டு தொங்கிய அவைகளின் வயிற்றில் கத்தி போட்டு குடலை வெளியில் எடுத்தார்கள். அதனுள்ளிருந்த மலத்தை பிதுக்கிப் பிதுக்கி பிழிந்து வெளியேற்றினார்கள். குடலை அவர்கள் உருவுவதே ரொம்ப அற்புதமாக இருந்தது. மனிதனுக்கும் இப்படித்தானே இருக்குமாம் என்று நினைத்துக் கொண்டார் பாபுஜி. கழுவிக் கழுவி குடலை சுத்தப்படுத்தினார்கள். அதற்குத்தான் நேரம் அதிகம் பிடித்தது.
கடைசியில் எடைபோட்டார்கள். வினோத சகோதரன் தீர்க்கதரிசித்தபடி ஒவ்வொரு ஆடும் பத்து கிலோவுக்கு மேல் போகவில்லை. பொண்ணாடு ஒன்று கூட இல்லை. அது பாபுஜிக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. 175 கிலோவையும் ஷாதிமஹாலுக்கு(7) வண்டியில் ஏற்றி விடும்போது காலை ஏழுமணியாகிவிட்டிருந்தது.
IV
“என்ன சம்மந்தி சாப்டாம என்ன யோசனை?” கேட்டது பாபுஜியின் சம்மந்தி.
பாபுஜியின் கண்களில் திடீரென அந்த ஆடு எங்கோ வெறித்தது. கால்களை உதைத்துக்கொண்டது. இறுதி எதிர்ப்பு. இறுதி முறையீடு.
“இல்லெ, வயிறு என்னமோ போல இருக்கிது. நா வெஜிடேரியன் சாப்டுக்குறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.
“என்ன திடீர்னு என்று சம்மந்தி?” ஆச்சரியத்துடன் கேட்டார்.
“இல்லெ, வயிறு சரியில்லெ” என்று சமாளித்தார் பாபுஜி.
அவர் வயிறு என்று சொன்னது வயிறல்ல என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.
======== * =========
1.தாலிச்சா — பிரியாணிக்கான சிறப்புக் குழம்பு
2.ஃபிர்னி – பிரியாணியோடு வைக்கப்படும் ஸ்வீட்
3.நப்ஸ் — ஆசை
4.தேக்சா — சோறு வைக்கும் அண்டா
5.பகாதி  — சமையல் செய்பவர்
6.போட்லா — முள்ளுடன் கூடிய கறி (சுவை அதிகம்)
7.ஷாதிமஹல் — திருமண மண்டபம்
நன்றி அம்ருதா, செப்டம்பர் 2009


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails