Friday, February 19, 2010

புலால்


                                                                    by Abdul Qaiyum                                                                                                                                  
புலால் உணவு என்றாலே ஹோட்டல் பிலால்தான் நினைவுக்கு வருகிறது. “ஹலால்” “ஜலால்” “ஹிலால்” போன்று “புலால்” என்ற வார்த்தையும் தமிழ் மொழி அல்ல என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
“கசாப்” என்ற அரபு வார்த்தை உருமாறி தமிழில் “கசாப்பு” என்று ஆனதுபோல் புலால் என்ற வார்த்தையும் அரபு மொழியிலிருந்து இறக்குமதியானது என்று நினைத்திருந்தேன்.
“புலால்; என்றால் மாமிசம் மட்டும் தான் என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. தாவரங்களில் கூட புலால் உள்ளது. கீரை புலால் வகையை சேர்ந்தது. ஏனெனில் அதை நாம் பறித்த பின்பு அதனால் உயிரணுக்களை உற்பத்தி செய்யமுடிவதில்லை. பறித்த பின் உயிரணுக்களை உற்பத்தி செய்ய முடிந்தால், அது புலால் அல்ல” என்று புலாலுக்கு அருமையான விளக்கம் தருகிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
புலால் என்னும் வார்த்தை தூய தமிழ் வார்த்தை. சங்க கால முதலே இலக்கியத்தில் கையாளப்பட்டு வரும் சொல்.
நாகூர்க் கலாச்சாரத்தில் “புலா விடுவது” என்ற சடங்கினை காலங்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். கல்யாணமான புதுமாப்பிள்ளைக்கு இறைச்சி, கோழி, காடை, கவுதாரி. உல்லான், மடையான், கொக்கு என்று விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்படும். ஆனால் எளிதில் மீன்வகை கவுச்சி சாதனங்கள் பெண்வீட்டார் கொடுத்துவிட மாட்டார்கள். எத்தனை நாட்கள் தாமதிக்கிறார்களோ அந்த அளவுக்கு மாப்பிள்ளை கவனிப்பு அமர்க்களம் என்று பொருள்.
‘புலா’ விடும் சடங்கிற்கு மாப்பிள்ளை வீட்டார் உயர்ந்த ரக மீன்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மாப்பிள்ளைக்கு தொடர்ந்து “Sea Food” சமைத்துக் கொடுப்பதற்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டு விடும். இந்த நடைமுறை தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து மொழியில் “ப்லா” என்றால் மீன் என்று பொருள். தாய்லாந்து மொழியில் நிறைய சமஸ்கிருத மொழிகளின் கலப்பு இருப்பது உண்மை. அதுபோன்று நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்மக்கள் தாய்லாந்திற்கு வியாபார நிமித்தம் சென்று வாழ்ந்ததால் அந்த மொழி, மற்றும் கலாச்சார தாக்கம் இங்கிருந்ததும் உண்மை.
தாய்லாந்து மொழியில் ஒரு சொல்வழக்கு உண்டு.
“நை நாம் மீ ப்லா
நை நாம் மீ காவ்”
“தண்ணிக்குள்ளே மீனுருக்கு
நிலத்துக்குள்ளே நெல்லுருக்கு”
என்பது இதன் அர்த்தம். இயற்கை அளித்த இந்த வரப்பிரசாதத்தை வைத்துக் கொண்டு இந்நாட்டில் நீ பிழைத்துக் கொள் என்பது இதன் உட்கருத்து. இந்த வாக்கியம் தாய்லாந்து தேசிய கீதத்திலும் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு.
எனவே “ப்லா” என்ற வார்த்தை தாய்லாந்து மொழியிலிருந்து வந்திருக்க சாத்தியக்கூறுகள் உண்டென்றாலும் தமிழ் வார்த்தை ‘புலால்’ என்பதன் திரிபு என்பதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது.
“புலால்” எனும் தூய தமிழ் வார்த்தை ‘ஐங்குறு நூறு’ என்னும் நூலில் மருதம் பற்றிய பத்தாவது பாடலில் இடம் பெறுகிறது.
பூத்தமாசுத்துப் புலாலஞ் சிறு மீன்
றண்டுமுறை யூரன் (4-5)
இப்பாடலில் புலால் என்னும் சொல் ஆளப்பட்டுள்ளமை ஈண்டுநோக்கற்பாலது. திருவள்ளுவரும் பல இடங்களில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்”
என்ற குறளின் மூலம் இதை நாம் நன்று அறிய முடிகிறது.

நன்றி : http://nagoori.wordpress.com
புலால்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails