Monday, February 1, 2010

மௌலானா ஷம்சுத்தீன் காஸிமீ

ஏப்ரல், 12, 1969இல் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடியில் ஜனாப், முஹம்மத் ஸாலிஹ், ஜமீலா பீவி தம்பதியரின் பத்தாவது புதல்வராகப் பிறந்தார் மௌலானா, ஷம்சுத்தீன் காஸிமீ.
இவரது குடும்பம், 1973ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னை நோக்கி இடம்பெயர்ந்தனர். சென்னை பட்டிணம்பாக்கம் சீனிவாசபுரத்தில் தனது குர்ஆன் மக்தப் கல்வியை அஷ்ஷெய்க் முஹம்மத் சயீத் அவர்களிடம் பயின்றார்.
அதன் பிறகு பத்தாம் வகுப்புவரை சாந்தோம் மேநிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் 1982-1990 வரை மௌலவி பட்டப் படிப்பை சென்னை பூந்தமல்லியில் உள்ள மதரஸா காஷிஃபுல் ஹுதாவில் மேற்கொண்டார்.
அதன் பிறகு ஷரீஆ உயர்கல்வியை உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் கலாசாலையில் 3 ஆண்டுகள் பயின்றார்.. அதன் பிறகுதான் இவரது பெயருடன் காஸிமீஎன்ற பட்டப்பெயரும் சேர்த்து அழைக்கப்படலாயிற்று.
காஸிமீஎன்பது தாருல் உலூம் கலாசாலையின் நிறுவனர் மௌலானா, காசீம் நானூத்தவீ அவர்களின் நினைவாக அழைக்கப்படுவதாகும்.
1993ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் வரலாற்றில் (எம்.ஏ.) முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு மயிலை மாங்கொல்லை மஸ்ஜிதுல் ஹுதாவில் ஒன்றரை ஆண்டுகள் இமாமாகவும், ராயப்பேட்டை ஜாம் பஜார் காட்பாவா பள்ளிவாசலில் ஐந்தாண்டுகள் ஜுமுஆ சொற்பொழிவாளராகவும் (கத்தீபாக) பணியாற்றினார்.
அத்துடன் மயிலை அருண்டேல் மஸ்ஜித், புரசைவாக்கம் தானா தெரு மஸ்ஜித், எழும்பூர் மலபார் முஸ்லிம் அசோஷியேஷன் மஸ்ஜித் ஆகியவற்றில் வாராந்திர குர்ஆன் விரிவுரை வகுப்புகள் நடத்திவந்தார்.
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தலைமை இமாமாகப் பணியாற்றி வருகிறார்.
''மக்கா ஹஜ் சர்வீஸ்'' என்ற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் ஆண்டுதோறும் ஹஜ், உம்ராவிற்காக அழைத்துச் செல்கிறார்.
மஸ்ஜித்களில் பணியாற்றிக்கொண்டிருக்கவே, தப்லீஃக் ஜமாஅத், மனித நீதிப் பாசறை போன்ற முஸ்லிம் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி பணியாற்றியுள்ளார்.
மக்கா மஸ்ஜிதில் மக்களுக்கு தொழுவிப்பது என்ற இமாமத் பணியோடு நின்றுவிடாது, ''அழகிய கடன் அறக்கட்டளை'', ''ஷரீஅத் கவுன்சில்'' ஆகிய தொண்டு நிறுவனங்களை நிறுவி, அதன் மூலம் ஏராளமான சமூகப் பணிகளில் ஊக்கமிக்க குழுவினருடன் இணைந்து சேவைகள் பல ஆற்றி வருகிறார். (அல்ஹம்து லில்லாஹ்!)
ரமளான் காலங்களில் தினமும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுவதுடன், தமிழன் தொலைக்காட்சியில் தினசரி அரைமணி நேரம் நேரலை மூலம் மார்க்க ஐயங்களை தெளிவுபடுத்தியும் வருகிறார்.
நன்றி   :  http://makkamasjid.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails