Wednesday, November 11, 2009

நமதூர் நவீனமாகட்டும்!

என் இனிய வெளிநாடுகளில் வாழ் நீடூர்-நெய்வாசல் சகோதரர்கள் இணையதளம் ஆரம்பித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர்.
எட்டு திசைகளிலும் வாழ்கின்ற எங்களூர் மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.
மனித உரிமை, மனித நேயம் பாதுகாக்கபட வேண்டும். இருளை சபிப்பதைவிட மெழகுவர்த்தியையாவது கொளுத்தி ஒளி உண்டாக்க வேண்டும்.
காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். உடல் நலக்கேடு தரும் உணவைத் தவிர்க்க வேண்டும். சமுதாயம் செழுமையுற நாடு நலமுற உழைக்க வேண்டும். மார்க்க அறிஞர்களை மதித்து மனித நேயம் பேண வேண்டும். சிக்கனம், சுறுசுறுப்பு செயல்திறன் வளர்க்க வேண்டும். வேதனைகள், சோதனைகளை வென்று சாதனைப் புரிய வேண்டும். உழைப்பதன் மூலம் பசியை விரட்ட வேண்டும். நபிவழிதான் நம் வழி என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ஆத்மீகம் இல்லா கல்வியும், உடல் திறனும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும்.
கொலைகளும், தற்கொலைகளும், விபத்துகளும், வன்முறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்ட இக்கால கட்டத்தில் இறையச்சத்தோடு தற்காப்புடன், பாதுகாப்புடன் இருக்க பயிற்சிபெற வேண்டும்.
சண்டைகள் ஓய்ந்து எல்லோரும் சகோதரராக வாழ வேண்டும். பண்டங்கள் விலை மலிந்து பயிர் செழிக்க பாடுபட வேண்டும். நமதூர் மக்கள் மருத்துவமனைக்கோ, மேற்கல்வி பெறுவதற்கோ அனைத்து விளையாட்டுகளுக்கோ உள்ளூரிலேயே அவ்வசதிகள் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
சைவ, அசைவ உணவு விடுதிகள், பெண்களுக்கான பல்பொருள் அங்காடிகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகளுடைய, பெண்கள் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் பூங்காக்கள், நவீன வசதிகளோடு அமைத்துத் தர வேண்டும்.
இளைஞர்களின் தகுதி, திறமை, கல்விக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெற திட்டங்கள் அமைத்து செயல்பட வேண்டும். மனத்தூய்மையோடு, பொதுநல நோக்கோடு செயல்பட்டால் நம் கனவுகள் நிறைவேறும்.
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails